மே 30, 2025 அன்று, தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) பெருமைமிக்க புதிய வரலாறு பொறிக்கப்படும். இதன்மூலம் 300 ஆண் கேடட்களுடன் 17 துணிச்சலான பெண் கேடட்களும் பட்டம் பெறுவார்கள் - இது மதிப்புமிக்க முப்படை இராணுவ அகாடமியில் முதன்முதலில் ஆண் – பெண் இருபாலரும் சேர்ந்த தேர்ச்சி அணிவகுப்பைக் குறிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், 2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு முக்கிய தீர்ப்பின் விளைவாகும். இது NDA-வின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கு நுழைவாயில்களைத் திறந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. 5.7 லட்சம் விண்ணப்பதாரர்களில் 1.78 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், 17 பேர் மட்டுமே கடினமான தேர்வு செயல்முறையின் மூலம் தேர்ச்சி பெற்றனர். தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்க உறுதிபூண்டனர்.
இராணுவம் (9), கடற்படை (3) மற்றும் விமானப்படை (5) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த இளம் முன்னோடிகள், தங்கள் ஆண் சகாக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து மூன்று ஆண்டுகள் கடுமையான இராணுவ, கல்வி மற்றும் உடல் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் பயணம் அவர்களை தனித்தனியாக மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் முதன்மையான பாதுகாப்பு பயிற்சி மைதானத்தில் தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்துள்ளது.
இவர்களில் உத்தரகண்டைச் சேர்ந்த கேடட் இஷிதா சர்மாவும் ஒருவர் - இந்த வாய்ப்பு கிடைக்கும் போது economics பட்ட படிப்பை பயின்று கொண்டிருந்தார். இன்று, அவர் கல்வித் திறமை மற்றும் வலுவான தலைமைத்துவத்துடன் எல்லா பெண்களுக்கும் முன்மாதிரியாக, டிவிஷன் கேடட் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார். "நாங்கள் பல எல்லைகளைக் கடந்தோம். எங்களின் பாடநெறியானது தகுதி பெற்றவர்களுக்கும், கல்வியில் முதலிடம் அடைந்தவர்களுக்கும் மற்றும் உடல் பயிற்சியில் சாதனை படைத்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது" என்று அவர் கூறினார்.
ஓய்வுபெற்ற விங் கமாண்டரின் மகள் கேடட் ஷ்ரிதி தக்ஷ், NDA அனுபவம் தனது தந்தையின் மரபுக்கு எவ்வாறு நெருக்கமாக கொண்டு வந்தது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். "என் தந்தை பெருமையுடன் என்னை அகாடமியில் இறக்கிவிட்டார். இப்போது அவர் ஒரு காலத்தில் செய்தது போல் அணிவகுப்பு மைதானத்தில் நானும் அணிவகுத்துச் செல்வேன்." என்று பெருமையுடன் கூறுகிறார்.
இந்தப் பெண்கள் வெறும் பயிற்சி மட்டும் பெறவில்லை. இவர்கள் தலைவர்களாக மறு வடிவமைக்கப்பட்டுள்ளனர். முதல் பெண் பட்டாலியன் கேடட் கேப்டனான ரிதுல் துஹான் போன்ற கேடட்களால், இந்த வரலாற்றுச் சிறப்பை நன்றாக உணர முடியும்.
குதிரை சவாரி, நீச்சல், ஆயுதங்களைக் கையாளுதல், தந்திரோபாயங்கள் மற்றும் தலைமைப் பயிற்சிகள் வரை, இந்த கேடட்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டனர். உயிரியல் வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உடல் தரநிலைகள் சரிசெய்யப்பட்டாலும் இவர்களின் ஒழுக்கம், தைரியம் மற்றும் குணநலன்களின் முக்கிய மதிப்புகள் மாறாமல் இருக்கின்றன.
இந்த 17 கேடட்கள், தகுந்த அகாடமிகள் மற்றும் ஆயுதப் படைகளின் பிரிவுகளில் நுழையத் தயாராகும் போது, வெறும் பதவி மற்றும் கௌரவத்திற்கும் மேலாக நம் நாட்டின் நம்பிக்கைகளையும், எண்ணற்ற இளம் பெண்களின் கனவுகளையும், மாற்றத்தின் மரபையும் சுமந்து செல்கிறார்கள். நம் இந்திய வரலாற்றிலும் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அணிவகுத்துச் செல்கிறார்கள்.
Jai hind !