விரலுக்கேற்ற வீக்கம், சிக்கனம் தேவை இக்கணம்!
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே, என்பது போல சிக்கனமாய் வாழ்வதாலேயும் நன்மை இருக்கத்தான் செய்கிறது! இதில் ஒரு குடும்பத்தில் வாழும் கணவன், மனைவி இருவருக்குமே பெரும்பங்கு இருந்த போதிலும் பொிய பொறுப்பு பெண்களிடம் தான் இருக்கிறது!
ஆண்கள் வரவுக்கு மீறிய செலவு செய்யும் போது அவர்களை கட்டுப்படுத்தி, நிதானத்துடன் செயல்படுவதும் திருமதி கையில்தான் உள்ளது! இன்று சில பெண்களும் சிக்கனம் கடைபிடிக்காமல் வரவுக்கு மீறிய செலவை மேற்கொள்வதால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் சிரமங்களோடு வாழ்க்கை எனும் ஓடத்தை ஓட்டும் நிலை உருவாகி விட்டது.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பாடலில், "சோ்த்த பணத்தை சிக்கனமாய் செலவு செய்ய கச்சிதமாய் அம்மா கையில கொடுத்துப்போடு செல்லக்கன்னு! அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கன்னு!" என எழுதியிருப்பாா். சிக்கனமாய் செலவு செய்து வரவுக்கேற்றபடி செலவுகளை கட்டுப்படுத்தி குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்வது பெண்கள் கையில் தான் உள்ளது!
இப்போது எல்லாமே மகளிர்களை குறிவைத்தே காயை நகர்த்துகின்றன! குறிப்பாக மகளிா் குழுக்கள், மைக்ரோ பைனானஸ், வார தவணை, மாத தவணை, தினசரி தவணை இது போன்ற அரக்கன்கள் பல ரூபத்தில் பெண்களை நோக்கி வலம் வந்து ராஜநடை போடுகிறது. அதே போல ஆண்களோ மது எனும் அரக்கன் விாித்த மாய வலையில் சிக்கி சின்னாபின்னமாக திாிவதும் தொடர்கதை தான்!
இதில் நடுத்தர குடும்பங்கள் மாட்டிக்கொண்டு அல்லல் படுவதும் பாா்க்க முடிகிறது! ஆடி மாதம் வந்து விட்டாலே போதும் மதுரை, கரூா், திருப்பூா் போன்ற நகரங்களில் இருந்து புடவை மூட்டை வியாபாாிகள் இரு சக்கர வாகனத்தில் புடவைகளை கட்டி எடுத்து வந்து நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி கிராமத்தில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து வியாபாரம் செய்கிறாா்கள்!
புடவை வியாபாாிகள் டெக்னிக்கே தனி, ஒரு தெருவில் ஒரு மகளிரை தொடர்பு கொண்டு பேசி, அவரது வீட்டிற்கு அக்கம் பக்கத்திலுள்ள மகளிா்களை வரவழைத்து புடவைகளை விற்பனை செய்கிறாா்கள்.
டோக்கன் அட்வான்ஸ் அவரவர் சக்திக்கேற்ப! இதில் வேடிக்கை என்னவென்றால் புடவை, மற்றும் ஏனைய ரகங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் குமிக்கலாம். ஆனால், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாக முழு தொகையையும் பட்டுவாடா செய்ய வேண்டும். இதில் கணவணுக்கு தொிந்து பாதி தொியாமல் மீதி. கணவன் வீட்டில் இல்லாத போது வசூல், கடன் தான் கொடுக்கிறானே என்பதற்காக படாடோபம், பெருமைக்கு ஆசைப்படுவது.
அடுத்த வீட்டு, பக்கத்து வீட்டு திருமதிகள் வாங்கி வைத்துள்ளாா்கள் நான் என்ன குறைந்தா போய்விட்டேன் என்ற நிலைபாட்டில் புடவை, துணிமணிகள் வாங்க வேண்டியது. அந்த கடனை அடைக்க வாராந்திர தவணையில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை, அதை அடைக்க வேறு பைனான்ஸில் கடன். இது இன்பினிட்டியாய் நீளுமே!
இது கணவன், மனைவிக்குள் சன்டை வர கணவனுக்கு வடிகால் மது அரக்கனின் நட்பு. இதனால் நமது குழந்தைகள் மனது எவ்வளவு பாதிக்கும் என்பதை உணராத தாய், தகப்பனாா்கள்! இது எவ்வளவு சிரமங்களைத் தருகிறது! வீட்டிலேயே சிறு, சிறு தொழில்களை செய்யலாமே? அதை நினைவில் கொள்ள வேண்டும். இது போன்று வருவாய் இல்லா நிலை வந்து கடன் வராமல் இருக்கத்தான் பெண்களுக்கு சிக்கனம் தேவை என்ற நிலை பொருந்துமே!
அதே போல மகளிர் குழு கடன் ஒரு பக்கம். ஆனால், அதிலிருந்து வரும் தொகையை வைத்து வீட்டிலிருந்தே தொழில் செய்து வருவாயைப் பெருக்கலாமே! குறிப்பாக அப்பளம், வடகம் தயாாிப்பது, மெழுகு வத்தி, ஊதுபத்தி, பினாயில், கப் சாம்பிராணி தயாாிப்பது போல மேலும் பல குடிசைத் தொழல்களில் ஆர்வம் காட்டுவது போன்ற சிறு தொழில்களை செய்யலாமே!
மூலப்பொருள்கள் எங்கும் கிடைக்கறதே இது போல தொழில்களை பல பெண்கள் கூட்டாக சோ்ந்து செய்து வங்கியில் குறைவான வட்டியில் கடன் வாங்கியும் தொழிலை விருத்தியடைய செய்து சந்தைப்படுத்தலாமே! அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சிக்கனத்தை கடைபிடித்து அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்து கொஞ்சம் கொஞ்சமாய் வருவாயைக் கூட்டி, கடனைக் கழித்து, செலவை வகுத்து வரும் ஈவில் சிறப்பாய் வாழலாமே!
பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கலாமே! வாழ வழி எவ்வளவோ உள்ளது நாம் தான் சிக்கனம் கடைப்பிடிக்காமல் ஆடம்பர செலவு செய்து அல்லல் படுகிறோம். இது அனைவருக்குமே தொிந்ததுதான் செயல் படுத்துவது திருமதிகளான உங்கள் கையில் தான். சரியா தோழிகளே!