

இறந்தவர்கள் கையில் ஏன் வெற்றிலை பாக்கு கொடுக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
பிணத்தின் கைகளில் வெற்றிலை பாக்கு கொடுக்கின்ற வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இறுதி உபச்சாரம்:
நம்முடைய தமிழர்களின் பண்பாட்டில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று நல்ல விருந்து கொடுத்து அவர்கள் விடைபெறும் போது அவர்கள் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பி வைப்பது நம்மளுடைய பண்பாட்டு மரபாகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து நாம் சாப்பிடும் போது நமக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த உலகத்திற்கு விருந்தினராக வந்த நாம் விண்ணுலகத்திற்கு விடை பெற்றுச் செல்வதன் காரணமாக இந்த வெற்றிலை பாக்கு கொடுத்து நமக்கு வழி அனுப்பி வைக்கிறார்கள் என்பது நம்பிக்கை.
கடமையின் குறியீடு:
வெற்றிலை பாக்கு என்பது வெறும் மெல்லும் பொருள் மட்டும் கிடையாது. இது ஒரு கடமையின் குறியீடாக போற்றப்படுகிறது.
மன்னர்கள் போருக்குச் செல்லும்போது அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு ஆகியவற்றை கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்கள். இது வீரத்தாம்பூலம் என்று கூறப்படுகிறது. இதைப் போல ஒரு மனிதன் தன்னுடைய இல்லற வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்த்தல், அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தல், பேரக்குழந்தைகளை பேணிக்காத்தல் போன்ற தன்னுடைய இல்லற கடமைகளை சிறப்புடன் செய்துவிட்டு இந்த உலகத்தை விட்டு செல்வதால் அந்தக் கடமையின் குறியீடாக இந்த வெற்றிலை பாக்கு அவர்கள் கையில் கொடுத்து அனுப்புவதாக கூறப்படுகிறது.
மண்ணில் பிறந்த உடல் மண்ணுக்கே:
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இவை மூன்றும் தான் முக்கியமான பொருள்கள். வெற்றிலை நிலம், காற்று ஆகியவற்றின் அடையாளம்; சுண்ணாம்பு நெருப்பின் அடையாளம்; பாக்கு நீரின் அடையாளம். இவை இயற்கையின் கூறுகளாக கருதப்படுகின்றன.
மண்ணில் பிறந்த உடல் மண்ணுக்கே திரும்புகிறது என்பதன் குறியீடாகவும் இந்த பூத உடலை பஞ்சபூதங்களிடம் ஒப்படைக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் இந்த வெற்றிலை பாக்கு இறந்தவர்கள் கையில் கொடுக்கப்படுகிறது என்பது கிராமத்து மக்கள் கூறுகின்ற ஒரு அறியப்படாத செய்தியாகும்.
மற்றவர்களுக்குப் பாதுகாப்பு:
இறந்தவர்களின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் வெளியேறும் என்பதால் வெற்றிலை பாக்கு போன்ற காரமான பொருட்களையும் கையில் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரமான பொருட்கள் நோய்க் கிருமிகளை அண்ட விடாமல் தடுக்கின்றன. மற்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவும் இறந்தவர்களின் கையில் இந்த வெற்றிலை பாக்கு கொடுக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாத ஒரு செய்தியாகும்.
அழைப்பதற்கும் வெற்றிலை பாக்கு:
நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு சுப காரியம் நடந்தால் மற்றவர்களை அழைப்பதற்கு இந்த வெற்றிலையும் பாக்கையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதைப்போல இறந்தவர்கள் கைகளிலும் வெற்றிலை பாக்கையும் கொடுத்து நீங்கள் இந்த மண்ணுலகை விட்டுச் சென்றாலும் இந்த உலகம் உங்களுக்குச் சொந்தமானது என்றும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த பூமிக்கு மீண்டும் வரலாம் என்பதை குறிக்கும் விதமாக இந்த வெற்றிலை பாக்கு கொடுக்கிறார்கள் என்று சில கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.
கிராமத்து சொலவடை:
வீடுகளில் யாராவது ஒருவர் சொன்ன வேலையைச் செய்யாமல் சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டு இருப்பார். அப்படிப்பட்டவர்களை “செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி இப்படி இருக்கானே" என்று சொலவடை சொல்லி கேலி செய்வார்கள். இறந்து போனவர்கள் எந்த ஒரு அசைவின்றியும் அப்படியே கையில் வெற்றிலையும் பாக்கையும் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதைப் போல சிலர் வேலை செய்யச் சொன்னால் வேலை செய்வதற்கு தேவையான உபகரணங்களை எடுத்துக் கொண்டு வேலை செய்யாமல் அப்படியே இருந்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பழமொழியானது பொருத்திப் போகும்.