

எல்லோருமே கோவிலுக்கு போகத்தான் செய்கிறார்கள். அந்தந்த மதத்திற்கு ஏற்றவாறு கோவிலுக்கோ அல்லது மசூதிக்கோ அல்லது சர்ச்சிற்கோ போகத்தான் செய்கிறார்கள்.
அப்படி போய்விட்டு வெளியே வரும்போது ஒரு புதிய பெயருடன் புதிய மனிதனாக திரும்பி வருகிறார்களா?? விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்..
பொதுவாகவே எல்லோருமே வீட்டிலேயே பூஜை அறை என்று தனியாக வைத்திருப்பார்கள். ஒரு சிலர், காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு அன்றாட பூஜை வேலையை முடித்துவிட்டு தான் அலுவலகத்திற்கு செல்வார்கள். அதில் பெருமிதம் வேறு கொள்வார்கள்.
'நான் பூஜை முடிக்காமல் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன்' என்று. ஆனால், தினம் தினம் பூஜை செய்வதால் என்ன லாபம்? ஒரு சில பேருக்கு கோவிலுக்கு சென்றாலும் சரி, வீட்டிலே பூஜை செய்தாலும் சரி, அவர்களுடைய மனதிலே ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறுவதில்லை; சிந்தனைகள் மாறுவதில்லை; எதுவுமே மாறுவதில்லை. மனம் முழுவதும் கள்ளத்தையும் கபடத்தையும் நிரப்பி வைத்துக் கொண்டு பூஜை செய்கிறார்கள். இதில் பெருமை வேற, நான் பகவானை தியானிக்காமல் ஒரு வேலையிலும் இறங்க மாட்டேன் என்று.
நம் வீட்டின் பூஜை அறையிலும் சரி, கோவிலிலும் சரி, கடவுளுக்கு பூமாலையை சாத்துவோம்... பிரசாதத்தை படைப்போம்.. அகர்பத்தியை ஏற்றுவோம்.. ஆரத்தி காட்டுவோம் இல்லையா?
உங்களுக்கு ஒன்று தெரியுமா? கடையிலே இருந்த பூமாலை கடவுளின் இருப்பிடத்திற்கு வந்தவுடன் பூஜை மாலையாக மாறி விடுகிறது. கடையில் விற்கப்பட்ட அகர்பத்தி, கற்பூரம், விபூதி போன்ற பொருட்கள் பூஜை சாமான்களாக மாறி விடுகின்றன.
சமையலறையில் நாம் சமைத்த சுண்டல், கொழுக்கட்டை, வடை போன்றவை கோவிலுக்குள்ளே அல்லது பூஜை அறைக்குள்ளே சென்றவுடன் பிரசாதமாக மாறி விடுகின்றன. அது எந்த உணவாக இருந்தாலும் சரி பிரசாதம் என்று சொல்லி தானே உண்ணுகிறோம்.
அதைப் போல எந்த பொருட்களாக இருந்தாலும் பூஜை சாமான்கள் என்று தானே கூறுகிறோம். ஆக மொத்தம், வெவ்வேறு விதத்தில் இருந்தாலும், வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருந்தாலும், இவை எல்லாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவுடன் பூஜை பொருட்களாக மாறிவிடுகின்றன.
ஆனால் மனிதர்களாகிய நாம் மாறுகிறோமா? பூஜை செய்யும் போதும் கூட நம் சிந்தனைகள் சினிமா ரீல்ஸ் போல இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றன. தேவையில்லாத எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
எதற்காக நம் முன்னோர்கள் கோவிலுக்கு போவது நல்லது என்றார்கள்? கோவிலுக்குச் சென்றால் நம்முடைய மனம் அமைதி பெறும். நேர்மறை எண்ணங்கள் வரும் என்கிற காரணத்தினால் தான் அவ்வாறு சொன்னார்கள். நமக்கு வந்ததா? இல்லையே..
ஆன்மீக மாற்றம் ஏன் நிகழ்வதில்லை?
கோவிலுக்குள்ளே செல்லும்போது கூட அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறோம். ஒரு சில பெரிய கோவில்களில் தான் அதற்கு தடை விதித்து இருக்கிறார்கள். ஆனால் நாம் அன்றாடம் செல்லும் கோவில்களில் அதற்கான தடை இருப்பதில்லை.
அங்கேயும் அலைபேசியில் கடவுளையே நாம் போட்டோ எடுத்துக் கொள்கிறோம். கடவுளுக்கு செய்கின்ற பூஜைகளையும் ஆராதனைகளையும் அபிஷேகத்தையும் போட்டோ எடுக்கிறோம். அப்படி நம்முடைய மனமானது கடவுளின் மீது லயிக்காமல் இதே போன்ற விஷயத்தில் லயித்தால் எங்கிருந்து நம் மனம் மாறும்?
கோவிலுக்கு போய் விட்டு வந்து நம்முடைய கெட்ட குணங்களை அங்கேயே விட்டு விட்டு வந்தோமா? இல்லையே, வெளியே வந்த உடனேயே நம்முடைய பொறாமை, ஆணவம், அகங்காரம் எல்லாம் மறுபடியும் நம்முடனேயே திரும்பி வருகின்றன.
உண்மையான ஆன்மீக மாற்றம் அடையும் கலை:
நம்மிடம் இருக்கும் தீய குணங்கள், ஆணவம், அகங்காரம் இவை எல்லாம் நீங்கி கோவிலில் இருந்து திரும்பி வரும்போது புதிய மனிதனாக புதிய பெயரோடு வரவேண்டும் என்றால் கோவிலின் உள்ளே சென்ற உடனேயே ஆத்மார்த்தமாக தியானத்தோடு கடவுளை வழிபட வேண்டும்.
நம் மனதை ஒன்று படுத்தி கண்களை மூடிக்கொண்டு கடவுளை தியானம் செய்ய வேண்டும். கடவுளுக்கு பரிபூர்ணமாக நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும்.
இந்த முறைகளை நாம் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறோமோ அப்போதெல்லாம் செய்தால் நம்முடைய மனம் நிச்சயமாக மாறும். நம்முடைய மனம் மாறினாலே குணங்கள் மாறும். ஆணவம், அகங்காரம், பொறாமை எல்லாம் நம்மை விட்டு சென்று விடும். கோவிலினுள்ளே மட்டுமில்லாமல் நம் வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்யும் போதும் நம்மை நாமே கடவுளுக்கு முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும்.
ஆகவே, இனிமேலாவது கோவிலுக்குள்ளே அல்லது பூஜை அறையில் கடவுளை வணங்கும் போது மனதை அலை பாய விடாமல் முழு மனதோடு கடவுளை வணங்க முயற்சி செய்யுங்கள்...
உங்கள் வழிபாடு வெறும் சடங்காக இல்லாமல், மனதின் கள்ளம் கபடங்களை அகற்றி, தெளிவான சிந்தனையையும், நேர்மறை எண்ணங்களையும் கொண்ட புதிய மனிதராக நீங்கள் உருவெடுக்கத் தொடங்குவீர்கள்.