தனிமைக்கு குட்பை! ஜப்பானியர்கள் கண்டுபிடித்த ரகசிய 'மோய்' முறை - இனி முதியவர்களுக்கு கவலை இல்லை!

Japanese Moai | Senior Care
Japanese Moai | Senior CareAI Image
Updated on
MM strip
MM strip

இன்றைய நவீன உலகில் தனிமை ஒரு அமைதியான பெருந்தொற்று போலப் பரவி வருகிறது. பிள்ளைகளால் தனித்து விடப்படும் முதியவர்கள் பெருகிவிட்டனர். தனிமையைத் தடுத்து, மனிதர்களிடையே பிணைப்பை உருவாக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு உன்னதமான வழிமுறைதான் ‘மோய்' (Moai).

மோய் என்றால் என்ன?

மோய் என்பது ஜப்பானின் ஒகினாவா தீவில் தோன்றிய ஒரு சமூகக் கூட்டமைப்பு. இதற்கு 'பொதுவான நோக்கத்திற்காக ஒன்று கூடுதல்' என்று பொருள். சிறு வயதிலிருந்தே அல்லது ஒரே மாதிரியான ஆர்வம் கொண்ட 5 முதல் 6 நபர்கள் இணைந்து ஒரு குழுவாக சேர்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில், ஒரு கிராமத்தின் பொதுவான தேவைகளுக்காக நிதி திரட்ட இந்த முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில், இது நிதி உதவியைத் தாண்டி மனரீதியான மற்றும் சமூக ரீதியான ஆதரவு வழங்கும் ஒரு அமைப்பாக மாறியுள்ளது.

மோய் முறையின் சிறப்பம்சங்கள்

நிதிப் பாதுகாப்பு:

குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து சேமிப்பார்கள். குழுவில் யாருக்காவது அவசரப் பணத்தேவை அல்லது தொழில் தொடங்க முதலீடு தேவைப்பட்டால், இந்தத் தொகை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இது ஒரு காப்பீடு போலச் செயல்படுகிறது.

வழக்கமான சந்திப்புகள்:

வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, தங்கள் கவலைகள், மகிழ்ச்சிகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வார்கள்.

வாழ்நாள் பிணைப்பு:

பல மோய் குழுக்கள் 70 முதல் 80 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படுகின்றன. ஒரு உறுப்பினர் இறக்கும் வரை அந்தப் பிணைப்பு தொடர்கிறது.

இதையும் படியுங்கள்:
கணக்குப் புத்தகத்தைத் தேடுங்க! ‘ககிபோ’ (Kakeibo) சொல்வதைக் கேளுங்க!
Japanese Moai | Senior Care

சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் மோய் முறை:

ஜப்பானியர்களின் மோய் முறையை கடைபிடிப்பதன் மூலம் முதியவர்கள் ஒரு புத்துணர்ச்சியான வாழ்வை வாழ முடியும்.

1. சிறிய குழுக்கள்:

ஒரே தெருவில் வசிப்பவர்கள், ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது ஒரே மாதிரியான ஆன்மீக, இலக்கிய ஆர்வம் கொண்ட 5 முதல் 6 முதியவர்கள் இணைந்து ஒரு மோய் குழுவை உருவாக்கலாம். பெரிய குழுக்களை விட சிறிய குழுக்களே நெருக்கமான பிணைப்பை உருவாக்கும்.

2. திண்ணை/ பூங்கா சந்திப்புகள்:

தமிழகத்தின் பாரம்பரியமான ‘திண்ணைப் பேச்சு’ முறையை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை ஒருவரது வீட்டிலோ அல்லது அருகில் உள்ள பூங்காவிலோ சந்தித்து, அரசியல், இலக்கியம் அல்லது பழைய நினைவுகளைப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

3. சிறிய நிதி உதவி:

முதியவர்கள் தங்கள் சிறு சேமிப்பிலிருந்து ஒரு தொகையைப் பொது நிதியாகச் சேர்க்கலாம். இது யாருக்காவது திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால் பயன்படும். இது ஒருவித பொருளாதாரச் சுதந்திரத்தையும், பாதுகாப்பு உணர்வையும் தரும்.

இதையும் படியுங்கள்:
குளிப்பதற்கு சோம்பலா? வந்தாச்சு! மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின்!
Japanese Moai | Senior Care

4. நலம் விசாரித்தல்:

குழுவில் உள்ள ஒருவர் அன்றைய சந்திப்பிற்கு வரவில்லை என்றாலோ அல்லது உடல்நிலை சரியில்லை என்றாலோ, மற்றவர்கள் உடனே நேரில் சென்று விசாரிப்பது 'நமக்கென்று ஒரு உறவு இருக்கிறது' என்ற நம்பிக்கையைத் தரும்.

5. கூட்டுச் செயல்பாடுகள்:

குழுவாகச் சேர்ந்து ஆரோக்கியமான உணவுகளை உண்பது, ஒரு சிறிய தோட்டம் அமைப்பது, கோவில்களுக்குச் செல்வது அல்லது மாலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

6. பாதுகாப்பு/சமூக உணர்வு:

'எனக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துக்கொள்ள என் நண்பர்கள் இருக்கிறார்கள்' என்ற எண்ணமே ஒருவருக்கு மிகப்பெரிய மனவலிமையைத் தருகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் பெருகி வரும் இந்த காலத்தில், மனிதர்களுடனான நேரடித் தொடர்பு ஒரு மனிதனின் மூளைத் திறனைச் சீராக வைக்க உதவுகிறது.

பணத்தை விடவும் மேலான ஒன்று உண்டென்றால் அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குக் கொடுக்கும் 'நேரம்' மற்றும் 'ஆதரவு' மட்டுமே.

ஜப்பானிய மோய் முறையை பின்பற்றி சீனியர் சிட்டிசன்கள் மகிழ்வான வாழ்வை வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com