கணக்குப் புத்தகத்தைத் தேடுங்க! ‘ககிபோ’ (Kakeibo) சொல்வதைக் கேளுங்க!
தினசரி செலவுக்கே பணம் பத்த மாட்டேங்குது! முதலீடு செய்ய பணம் சேமிக்க வேண்டும் என்றால், அதற்கு மூலதனம் (Capital) எங்கிருந்து வரும்?
இந்தச் சிக்கலுக்குத்தான், ஜப்பான் நாட்டில் இருந்து ஒரு அசத்தலான ரகசியம் கப்பலேறி வந்திருக்கிறது. அதுதான் ‘ககிபோ’ (Kakeibo). இது ஏதோ பெரிய ஃபைனான்ஸ் தியரி இல்லை. இது, நம்ம பாட்டி காலத்து வீட்டின் வரவு செலவுக் கணக்குதான். ஆனால், அதை முறையாகச் செய்வதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழிமுறை.
இன்றைய எதார்த்தம்:
முன்னடியாவது சம்பளம் கைக்கு வந்துச்சு. அப்போ அதை எடுத்து செலவு பண்ணும்போது, நாம கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுவோம்.
அப்புறம் பணம் பேங்குல போட்டு, கார்டை கைல கொடுத்து செலவு பண்ண வச்சாங்க. அப்பவே பாதி கணக்கு விட்டுப் போச்சு.
இப்போ எல்லாமே பெரும்பாலும் போன் மூலமாவே செலவு செய்ய ஆரம்பிச்சுட்டோம். நாம செலவு பண்ணினதே நமக்கு என்னன்னு கூட தெரிய மாட்டுது! இப்போ சம்பளம் மெசேஜ் வந்ததும் யூ.பி.ஐ (UPI) மூலமா கண்ணுக்கு தெரியாம செலவாகுது.
இப்படி கண்ணுக்குத் தெரியாத பணத்தை பிடிச்சு வைக்கத்தான் இந்தக் கணக்கு தேவை!
ககிபோ-வின் ஒற்றை நோக்கம்:
நீங்கள் விழிப்புடன் செலவு செய்யப் பழகினால், மாதாந்திர செலவுகளில் இருந்தே ஒரு தொகையை (Surplus) உருவாக்க முடியும். அந்தத் தொகையை நீங்கள் சிரமம் இல்லாமல் உங்கள் முதலீடுகளுக்குப் பயன்படுத்தலாம். அதாவது, "செலவுகளை குறைத்து, முதலீட்டிற்கு பணம் திரட்டும்" எளிய யுக்தி இது!
இந்த அற்புத யுக்தி, மூன்று சூப்பர் சிம்பிள் விதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதைப் ஃபாலோ செய்தால், உங்கள் முதலீட்டுப் பயணத்தை இன்று முதலே துவங்கலாம்!
இதோ, வாங்க அந்த ககிபோ-வோட மூன்று ரூல்ஸ் என்னன்னு பார்ப்போம்:
1. ஒரு ரூபாயானாலும் எழுது!
முதல் விஷயம், உங்கள் பணம் எங்கிருந்து ஓடுதுனு தெரிஞ்சிக்கணும். இதுதான் அஸ்திவாரம். நீங்கள் செலவு பண்ற ஒவ்வொரு பைசாவும் எழுதப்படணும். சும்மா விடக்கூடாது!
● மாத v/s தினசரி காலண்டர்: உங்க வருமானம் ஒரு மாதக் காலண்டர் போல, மாதம் ஒருமுறை புதுசா வந்து உங்களைக் குஷிப்படுத்தும். ஆனா, உங்க செலவு ஒரு தினசரி காலண்டர் போல, தினமும் உங்களைக் கிழிக்க வெச்சு அதுவும் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சுகிட்டே வரும். எப்போதுமே செலவுகளுக்கு ஒரு கறார் கணக்கு வைத்தால் மட்டுமே, உங்க பணம் எங்கே ஓடுதுன்னு கண்டுபிடிக்க முடியும்.
● விழிப்புணர்வு விதை: உங்க பாட்டி எதற்காக பூக்காரிக்குக் கொடுத்த சில்லறை வரை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தார்கள்? ஏன்னா, எழுதினால் தான் உங்களுக்கே ஒரு பயம் வரும். போன மாசம் ₹4,000 ஹோட்டல் சாப்பாட்டுக்கு செலவு செய்தோம்னு தெரிஞ்சால், அடுத்த மாசம் அது தானாகவே ₹3,000 ஆக குறையும். முதலீடு அதிகரிக்க வழி தேடுவதற்கு முன், அனாவசிய செலவுகளைக் குறைக்க நாம் யோசிக்க வேண்டும். உண்மையான சேமிப்பே இங்கிருந்துதான் தொடங்குகிறது.
2. பக்கெட் டெக்னிக்!
எல்லா செலவுகளையும் எழுதியாச்சா? இப்ப உங்க செலவுகளை நான்கு பக்கெட்டுகளாப் பிரிக்கணும்:
Kakeibo-வின் -4 செலவு பிரிவுகள்:
● தேவை (Need): உணவு, உடை, இருப்பிடம் (அதாவது, ரோட்டி, கப்டா, மகான்). ஆனால் இப்போது லிஸ்ட்டில் புதுசா சேர்ந்தது: மொபைல் போன் மற்றும் டேட்டா! உங்கள் latest மொபைல் ( i phone & advanced expensive android phone) வாங்கும் மோகத்துக்கு செலவாகும் காசை சற்று யோசித்து குறைத்தால் அது லாபத்திற்கு சேரும்.
● விருப்பம் (Want): இதுதான் ஆபத்தான பகுதி! ஷாப்பிங் தளத்தில் பார்க்குறது எல்லாத்தையும் வாங்கணும்னு நினைக்கிறதுதான் ‘விருப்பம்’. இப்போது பலர் வீட்டில் DTH டிவி connection இருந்தாலும், தேவையில்லாமல் மூன்று அல்லது நான்கு ஓடிடி (OTT) சந்தாக்கள் வைத்திருப்பார்கள். இந்தச் சின்னச் சின்ன விருப்பங்களைக் குறைச்சாலே, மாதாந்திர SIP-க்கான பணம் உயரும்.
● கலாச்சாரம் (Culture): பாரம்பரியம், வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட ஆடம்பரமான செலவுகள். விசேஷங்களுக்கு அதிக விலைகொடுத்து ஆடம்பரமான உடையெடுப்பது, தேவையில்லாத விருந்துகளை ஏற்பாடு செய்வது. உங்கள் வசதிக்கு மீறி செலவு செய்துவிட்டு, உங்கள் முதலீட்டை நிறுத்துவது புத்திசாலித்தனம் இல்லை. ஒரு வரம்பை வையுங்கள்.
● எதிர்பாராதவை (Unexpected): விபத்து, மருத்துவச் செலவுகள் போன்ற திடீர் அதிர்ச்சிகள். இதற்காகத்தான் நாம் ' அவசர நிதி (Contingency Planning) வைத்திருக்க வேண்டும். உங்கள் லாபம் முதலீட்டில் ஒரு பகுதியை இதற்காகவும் ஒதுக்கி வைக்கவேண்டும்.
3. விழிப்புணர்வுடன் செலவு செய்! (கண் மூடி செலவு செய்யாதே!)
இந்த விதியின் மூலம், செலவு செய்யும்போது நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
● ரசீதை எண்ணுவது: சூப்பர் மார்க்கெட்டிற்குப் போய் ₹500 கொடுத்து, ₹485-க்கான பொருளை வாங்கிவிட்டு, மீதி சில்லறையை சரியாக எண்ணாமலேயே வந்துடுவோம். இதுதான் ‘விழிப்புணர்வு இல்லாத செலவு’. ₹15 தான் என்று நினைக்காதீர்கள், இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அதுவே பெரிய தொகையாக மாறும். முழிச்சுக்கோங்க!
● அளவுக்கு மீறிய ஆசை (ஃபால்ஸ் சேவிங்ஸ்): டி மார்ட் போன்ற ஹைப்பர் மார்க்கெட்டிற்குச் செல்லும்போது, உங்களுக்கு ஒரு சராசரி பொருள் மாதத்திற்கு 1/2 லிட்டர் தான் தேவைப்படும். ஆனால், 'ஆஃபர்' இருக்கிறது என்பதற்காக 2 லிட்டர் பாக்கெட்டை வாங்கி விடுவோம். இதனால், சேமித்துவிட்டதாக நீங்கள் நினைத்தாலும், உண்மையில் அந்த மாதத்திற்கான உங்கள் செலவை (Cash Flow) நீங்கள் அதிகமாக்கி இருக்கிறீர்கள். இந்த மோகத்தைத் தவிர்த்தால், பணம் உங்கள் SIP-க்குத் திரும்பும்.
● லிஸ்ட்டின் சக்தி: ஆன்லைன் ஷாப்பிங்கில் நாம் எதைத் தேடினாலும், தேவையற்ற பொருட்களைக்கூட 'வண்டிக்குள்' (Cart) போட்டு வைப்போம். கண்ணில்படும் எல்லாவற்றையும் வாங்குவதுதான் ஆசை. உங்கள் லாபம் இலக்கை மனதில் வையுங்கள். ஒரு லிஸ்ட் போட்டு அதை மட்டும் செலவு செய்யுங்கள். அந்தச் சேமிப்புதான் உங்கள் முதலீட்டிற்கு மூலதனமாக மாறி, உங்களுக்குப் பெரும் சொத்தை உருவாக்கும்!
கடைசி ரகசியம் தெரியுமா?
முதலில் சேமி , அப்புறம் செலவு செய்!
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை முதலில் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்துவிட்டு, பிறகு மீதி இருந்தா சேமிக்கலாம் என்று நினைக்காதீர்கள்—அது ஆபத்துக்கு வழி! உங்க வருமானத்தில் குறைந்தது 15-20%-ஐ முதல்ல சேமிச்சுட்டு (அதாவது, உங்கள் முதலீடுகளுக்கு அனுப்பிவிட்டு), அப்புறமா மீதிப் பணத்தை செலவு செய்யக் கத்துக்கோங்க.
ஒரு நிமிடம் சிந்திக்க...
நம்ம முன்னோர்கள் தெரிஞ்ச இந்த விஷயத்தை, ஜப்பான்காரங்க ஒரு ஸ்ட்ரக்சரா கொடுத்திருக்காங்க. ‘ககிபோ’ என்பது உங்க பணத்தை கண் அசராம கவனிச்சிக்கிற ஒரு வழிமுறைதான்.
இந்த ‘ககிபோ’ வித்தையைப் பயன்படுத்துங்க. உங்கள் சேமிப்பும் முதலீட்டுப் பயணமும் இன்று இருக்கிறதை விட நிச்சயம் சிறப்பாக அமையும்.
உடனே போய் உங்க கணக்குப் புத்தகத்தைத் தேடுங்க!

