
பணியிடங்களோ பொது இடங்களோ, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது அந்தந்த இடங்களுக்கு ஏற்ப நடக்கத்தான் செய்கிறது. என்னதான் இதற்கு தண்டனை தரும்விதமாக பல சட்டங்கள் இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் சில இடங்களில் பாலியல் சீண்டல்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த வகையான சூழ்நிலைகளைப் பெண்கள் எவ்வாறு திறம்பட அமைதியாக கையாலாம்?
கைகொடுக்கும் நவீனம்:
இன்றைய நவீன காலத்தில் பெண்களின் சுயப்பாதுகாப்பை உறுதிச்செய்யும் முதல்படி, தொழில்நுட்பத்தை ஓர் அமைதியான கூட்டாளியாக (Silent partner) எவ்வாறு அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. இந்தச் சம்பவங்களைப் பற்றி நமக்கு நெருக்கமானவர்களுக்குத் தகவல் கொடுக்கும் வகையிலான SOS தகவல்கள் பரிமாற்றம் (Alerts) மற்றும் ரெக்கார்டிங் கருவிகளைக் கொண்ட பாதுகாப்பு ஆப்களை (Apps) பெண்கள் பயன்படுத்தலாம். இந்த ஆப்கள் பெரும்பாலும் சத்தமில்லாமல் மறைவாக செயல்படக் கூடியவை. இதனால் பெண்கள் ஆபத்து ஏற்படலாம் என்று யூகிக்கும்போது இந்த ஆப்பை பயன்படுத்தி ஆடியோ பதிவுகள், தானியங்கியாக தகவல்களை நெருக்கமானவர்களுக்குப் பரிமாறி கொள்ளும் வசதி (time-stamped messages) அல்லது படங்கள் போன்ற ஆதாரங்களைச் சேகரிக்க முடியும்.
ஆதரவு வளையம்:
சில நம்பகமான ஊழியர்களிடையே பழகிக்கொண்டு நமக்கான ஒரு ஆதரவு வளையத்தை முன்கூட்டியே உருவாக்க வேண்டும். பணியிடத்தில் மரியாதை மற்றும் நேர்மையை முன் நிறுத்தும் நபர்களைப் பெண்கள் நிதானமாக முதலில் அடையாளம் காண வேண்டும். இந்த நபர்களுடன் ஒரு நுட்பமான புரிதலோடு பழகிக்கொண்டு தங்களுக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கலாம். ஆபத்து ஏற்படும் தருணங்களில் இந்த நபர்களுக்கு குறிப்பட்ட சைகைகள் அல்லது செய்திகள் மூலம் தெளிவுபடுத்துவதன் மூலம் தங்களுக்குத் தேவையான உதவியைப் பெறலாம்.
முன்னெச்சரிக்கை:
துன்புறுத்தலுக்கு ஆளாகப்போகிறோம் என்ற நிலை வரும்போது, அதை எதிர்கொள்ள, கத்தி கூச்சல் போடாமல் மோதலுக்கு அப்பாற்பட்ட வழிகளைக் கற்றுக்கொள்வது பல பெண்களுக்கு உதவியாக இருக்கும். காரணம் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம். எனவே, அமைதியான முறையில் எவ்வாறு பதற்றமின்றி செயல்பட வேண்டும் என்பதற்கு பயிற்சி செய்துகொள்வது பலருக்கு நன்மையைத் தரும். முடிந்த வரை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் போன்ற இடங்களை உங்கள் பணி நேரங்களில் உபயோகப்படுத்துங்கள். இதன்மூலமே பல கெட்ட செயல்களைத் தவிர்த்துவிடலாம்.
சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வு:
பெண்கள் பணியிடங்களில் தனக்கான சுய அதிகாரம் (self-empowerment) என்ன இருக்கிறது என்பதை ஒரு பணியில் சேரும் முன்பே கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசாலோ அல்லது சம்பந்தப்பட்ட தனியாராலோ வகுக்கப்பட்ட பணியிட கொள்கைகள் (workplace policies) மற்றும் உரிமைகள் (rights) பற்றிய தகவல்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வகையான சம்பவங்களை எவ்வாறு சத்தம் இல்லாமல் அமைதியாக எதிர்கொள்ளலாம்? அதற்காக இருக்கும் குறை தீர்க்கும் வழிமுறைகள் (grievance mechanisms) மற்றும் சட்டப் பாதுகாப்புகள் (legal safeguards) பற்றிய புரிதல்களை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அமைதி காப்பது, தயார் நிலையில் இருப்பது, வேக-விவேக செயல்கள் மற்றும் நவீன கருவிகளை நேர்த்தியாகப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டு நமக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொள்வோம் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைத்தாலே போதும், இவ்வகையான சம்பவங்கள் சுவடே இல்லாமல் அழிந்துவிடும்.