“பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல” என்றார் எனக்கு முன்பிருந்த ராமமூர்த்தி.
“புரியல சார்” என்றேன் நான்.
“தம்பி. நீங்க ஊருக்குப் புதுசு. இப்பதான் மாத்தலாகி வந்துருக்கீங்க. தண்டபாணி நகருல, உங்களுக்கு வீடு கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். நீயா நானான்னு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. ஏனோ உங்களுக்குத்தான் கொடுக்கணும்னு என்னோட உள்மனசு சொல்லுது. தண்டபாணி நகர்னு பேர கேட்டாலே இந்த ஊர் அதிரும்” என்றார் ராமமூர்த்தி.
நான் அப்போதுதான் அந்த நகருக்குக் குடி பெயர்ந்திருந்தேன். எனக்கு அந்த நகரில் ஒரு பெரிய தொழிற்சாலையில் மேலாளர் பதவி கிடைத்திருந்தது. அந்தத் தொழிற்சாலைக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லாத காரணத்தினால் அங்கே ஒரு வீடு வாங்க தீர்மானித்தேன். செய்தித்தாளில் ராமமூர்த்தியுடைய பெரிய தனி வீட்டின் விளம்பரத்தைப் பார்த்தபோது, உடனே ராமமூர்த்தியை கைப்பேசியில் அழைத்தேன்.
நான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குத் தானே வருவதாகக் கூறி நேராக எனது வீட்டிற்கு அடுத்த நாள் அதிகாலையிலேயை வந்தார் ராமமூர்த்தி. வந்தபோதே அவருடன் வாட்டசாட்டமான ஒரு இளவயது ஆசாமி கூட இருந்தான்.
நான் எனது மனைவி தேவசேனாவைக் கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு அவருடன் ஆட்டோ பிடித்துச் செல்லலாம் என்று சொன்னபோது, அவர் தானே ஆட்டோவில் வந்திருப்பதாக கூறி, தானே அழைத்துச் செல்வதாக கூறினார். அப்போதுதான் தெரிந்தது கூட வந்த ஆசாமி ஆட்டோ டிரைவர் என்பது.
நாங்கள் வெளியே சென்று ஆட்டோவில் ஏறிக்கொள்ள ஆட்டோ பரபரத்தது. நகருக்கு சற்று வெளியே ஒரு புறநகர் பகுதியில் ஆட்டோ பல்வேறு சந்துகளில் நுழைந்து ஒரு பிரமாண்டமான வீட்டிற்கு முன்பாக நின்றது. வண்டி சென்றுகொண்டிருந்தபோது ஏனோ ராமமூர்த்தி அந்த ஆட்டோ டிரைவரை அவசரப்படுத்தினார். அவன் ஆட்டோவை லாவகமாக சந்து பொந்துகளில் செலுத்தி இடத்தினை அடைந்தான்.
இடமே ஆள் அரவமின்றி அமைதியாக இருந்தது. சுற்றி பல்வேறு வீடுகள் இருந்தபோதிலும் அந்தக் காலை நேரத்தில் எங்கும் பரபரப்பு இல்லை. அங்கங்கே மனிதர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அந்த இடத்தின் அமைதி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
இரண்டு மனை அளவு நிலத்தில், நடுவில் பிரம்மாண்டமாக ஓரடுக்கு வீடு இருக்க சுற்றி தென்னை மரங்களும், மாமரங்களும், பூத்துக் குலுங்கும் செடிகளும் என்று அந்த இடமே நந்தவனத்தைப் போல ரம்மியமாகக் காட்சியளித்தது. ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நான் வீட்டில் அங்கங்கு சென்று வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ராமமூர்த்தியோ அவ்வப்போது கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று எனது கையைப் பிடித்து இழுத்தார். உடனே கிளம்புங்கள் என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை.
“தம்பி. எமகண்டம் நெருங்கப் போகுது. கிளம்புங்க” என்றார் ராமமூர்த்தி.
“அதனால என்ன சார். நாம முன்னாடியே வீட்ல நுழைஞ்சிட்டோமே” என்றேன் நான்.
“தம்பி. நீங்க புரியாம பேசுறீங்க. எமகண்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி புது வீட்டுல இருந்து கிளம்பிடுங்க. அப்பறம் எம தோஷம் வந்தா நான் பொறுப்பு கிடையாது. அப்புறம் வரலாம்” என்றார் ராமமூர்த்தி.
எனது கையைத் தரதரவென்று இழுக்க, நான் செல்வதைக் கண்டு தேவசேனாவும் என்னைப் பின்தொடர்ந்தாள். வாசலில் ஏற்கனவே ஆட்டோ முடுக்கிக்கொண்டு காத்திருந்தது. நாங்கள் இருவரும் ஏறியவுடன் ராமமூர்த்தி ஆட்டோவில் ஓட்டுநருக்கு அருகிலேயே தொத்தி ஏறி அமர்ந்துகொண்டு, அவனை விரட்டினார். வீட்டைக்கூட பூட்டாமல் ஓடி வந்து ஏறியதைக் கண்டேன்.
“என்ன சார். வீடு பூட்டலையே? பரவாயில்லையா?” என்றேன் நான்.
“தம்பி. எமகண்டம் முக்கியம். நான் அப்புறம் வந்து பூட்டிக்கறேன். உங்க எதிர்காலம் முக்கியம் தம்பி. எமகண்டத்துல மாட்டிக்காதீங்க” என்றார் ராமமூர்த்தி.
மறுபடி அவசர அவசரமாக சென்ற ஆட்டோ, அந்தப் பகுதியைக் கடந்தவுடன், அமைதியானது. ஆட்டோ ஆசாமி ஏதோ ஓடத்தைச் செலுத்துவதைப் போன்று ஆட்டோவை மென்மையாக செலுத்தினான்.
“தம்பி. எதுலயும் நேரம் காலம் முக்கியம். ராகுகாலம், எமகண்டம், குளிகைன்னு பாத்துட்டு, உங்கள கனகச்சிதமாக கூட்டிட்டு போகறதுக்கு எங்களாலதான் முடியும். நீங்கள் சுத்தல்ல மாட்டிகிட்டா நேரம் தவறி வீட்டுக்கு போயிடலாம். நேரத்துக்கு வீட்டுக்கு போகணும் தம்பி. எப்ப வீட்டுக்கு போகணும்னாலும் என்னக் கேளுங்க தம்பி. நான் நவகிரகங்களோட கோணத்த பாத்து அவங்க கோபப்படாம உங்கள நேரத்துக்கு கூட்டிகிட்டு போவேன்” என்றார் ராமமூர்த்தி.
“ஆமாம்” என்றான் அந்த ஆட்டோ ஆசாமி.
ராமமூர்த்தி வீட்டின் பத்திரங்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
“இந்த உலகத்தில எந்த ஒரு வக்கீல் கிட்ட வேணுமானாலும் வீட்டோட பத்திரங்களை வில்லங்கத்துக்கு பாத்துக்கோங்க தம்பி. அவ்வளவு அருமையான பத்திரமான வீடு. வீடு மாத்திரம் இல்ல. வீட்டு பத்திரமும் நம்பிக்கையானது. பத்தர மாத்து தங்கம் இந்த வீடு” என்றார் ராமமூர்த்தி.
நான் வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்காக சென்றபோது அவர்களுடைய வழக்கறிஞரிடம் பத்திரங்களை கொடுத்தேன். ராமமூர்த்தியும் வந்து அசல் பத்திரங்களைப் பார்க்க, வழக்கறிஞர் எல்லாம் மிகச் சரியாக உள்ளது என்று ஒப்புதல் கொடுத்தார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. எனது பெற்றோர்களும் அன்று எனது வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். நாங்கள் எல்லோரும் சென்று புது வீட்டைக் காண எண்ணினோம். ராமமூர்த்தியை அழைத்து விவரத்தைச் சொன்னபோது, அவர் தானே சிற்றுந்தில் வருவதாகக் கூறினார்.
"சார். காலைல வீடு பார்க்கலாமா ?" என்றேன் நான்.
“தம்பி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. சாயந்திரம் நாலரைலேர்ந்து ஆறுக்குள்ளத்தான் பாக்க முடியும். மத்த நேரத்துல முடியாது தம்பி” என்றார் ராமமூர்த்தி.
அதில், நாலரை முதல் ஆறு வரைதான் பார்க்க முடியும் என்பதனை அவர் சற்று கோபத் தொனியில் கூறினார். அதுவரை மென்மையாக ஒலித்த குரல், நாலரை முதல் ஆறு என்றபோது நெருப்பு கலந்து ஒலித்தது. நான் சற்று நடுங்கிப் போனேன்.
“சார். அது ராகுகாலம் ஆச்சே. உங்களுக்கு ஆகாதே?” என்றேன் நான்.
“தம்பி. ராகு காலத்த தப்பா சொல்லாதீங்க அப்பதான் ராகுவுக்கு அபிஷேகம் நடக்குது. திருநாகேஸ்வரம் போயிருக்கீங்களா” நீங்க ஏற்கனவே வீடு பார்த்துட்டீங்க. ரெண்டாவது தடவை தான பாக்குறீங்க? ராகுக்கு நான் பிரீதி பண்ணிடுவேன். என்ன கோபப்படுத்தாதீங்க“ என்றார் ராமமூர்த்தி.
ராமமூர்த்தியுடன் அந்த ஆட்டோ ஆசாமி இப்போது பிரம்மாண்ட இன்னோவா காரில் வந்தான்.
நாங்கள் ஏறியவுடன் அந்த இன்னோவா பரபரப்புடன் இயங்கியது. நாங்கள் சென்ற முறை வீட்டின் பின்பக்கம் எல்லாம் செல்ல முடியாததால், நாங்கள் இப்பொழுது வீட்டின் பின்பக்கம் சென்றபோது அங்கு பல மரங்களுக்கு பின்னர் ஒரு பிரம்மாண்ட மதில் சுவர் இருந்தது.
“சார். மதில் சுவர் கோவில் மதில் சுவர் மாதிரி பிரம்மாண்டமா இருக்கே?” என்றேன் நான்.
“தம்பி. உங்க பாதுகாப்புக்காக நான் பிரமாண்டமா போட்டு இருக்கேன். திருடன் நினைச்சாலும் தாண்ட முடியாது. உங்க வீடே பத்தர மாத்து தங்கம்தான். வீட பத்திரமாக பாத்துக்க, மன்னார்குடி கோவில் மதில் மாதிரி பிரம்மாண்டமா கட்டியிருக்கேன் தம்பி” என்றார் ராமமூர்த்தி.
இப்போதும் அவ்வப்போது கடிகாரத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். எங்கள் எல்லோருக்கும் வீடு பிடித்திருந்தது. வீடும் அதன் சுற்றுச்சூழலும் அந்த அமைதியான பகுதியும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தன. சீக்கிரமாக பால் காய்ச்சி குடியேற வேண்டும் என்று நினைத்தோம்.
ராகுகாலம் முடியும் நேரத்திற்கு சற்று நேரம் முன்பே ராமமூர்த்தி அவசரமூர்த்தியாக மாறினார்.
“ம்... ம்... அவசரம் அவசரம்... சீக்கிரம் கிளம்புங்க” என்றார் ராமமூர்த்தி.
நாங்கள் பல்வேறு அறைகளில் இருந்தாலும், ஒவ்வொரு அறைக்காக வந்து, எங்களைத் தரதரவென்று இழுக்காத குறையாக அவசரப்படுத்தினார்.
வாசலில் எங்களுக்காக காத்திருந்த இன்னோவா “இன்னுமா வரல... இன்னுமா வரல..” என்று அவசரப்படுத்தியதைப் போன்று முடுக்கத்துடன் தயாராக இருந்தது. நாங்கள் ஏறியதுதான் மிச்சம், இன்னோவா சிட்டென பறந்தது.
புறநகர் பகுதியைத் தாண்டி நகருக்கு வந்தவுடன் இன்னோவா “நான் சொகுசு கார்தான்டா” என்று சொல்வதைப் போன்று சொகுசான கப்பலைப் போன்று ஊர்ந்தது.
நாங்கள் வீட்டுக்கு வந்தவுடன் நான் வீட்டுக்கான முன் பணத்தை ராமமூர்த்தியிடம் கொடுத்தபோது, அவரிடம் இருந்த நன்றி உணர்ச்சியில், நானும் தேவசேனாவும் காலில் விழுந்து ஆசி வாங்கினோம்.
“நீங்க கொடுத்து வச்சவங்க” என்றார் ராமமூர்த்தி.
அந்த வாரமே பாக்கிப் பணத்தை வங்கியின் மூலமாக கொடுத்து, வீட்டின் பத்திரத்தை எனது பெயருக்கு மாற்றிக்கொண்டேன்.
உடனே, புது வீட்டில் பால் காய்ச்சி குடிப்பதற்கு நாளைக் குறித்தேன். ராமமூர்த்தியையும் விழாவிற்கு அழைத்தேன்.
“தம்பி. இனிமே அது உங்க வீடு. நான் அப்புறம் அந்தப் பக்கமா வரும்போது வரேன். தண்டபாணி நகர்ன்னு சொன்னா யார் வேணாலும் கூட்டிட்டு போவாங்க தம்பி. அவ்வளவு பிரபலமான நகர்” என்றார் ராமமூர்த்தி.
பால் காய்ச்சி குடிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, அந்த அதிகாலை நேரத்தில் குடும்ப சகிதமாக புது வீட்டிற்குச் சென்றோம்.
பால் காய்ச்சிக் குடித்த பின்பு, நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது பறவைகளின் கூக்குரலும், இலைகளின் சலசலப்பையும் தவிர, வேறு எந்த ஒலியும் இன்றி நந்தவனத்துக் குடிலில் இருப்பது போன்று அமைதியாக இருந்தது.
அப்போது, திடீரென்று ஒரு சிறிய அதிர்வு... அந்த அதிர்வு என்ன என்று சுதாரிப்பதற்குள், அது அதிகரித்துக் கொண்டே இருந்தது. அப்போது பறவைகளின் கூக்குரலுடன் ரயில் வண்டியின் “கூ... கூ...” என்ற கூக்குரலும் சேர்ந்துகொண்டு ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.
நான் ரயிலோசை வந்த திக்கை நோக்கி ஓடினேன். பிரம்மாண்ட மதில் சுவர் பார்வையைத் தடுத்தது. எனது வீட்டின் மதில் சுவருக்கும் அடுத்த வீட்டு மதில்சுவருக்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி வழியாக வெளியே பார்த்தபோது, வீட்டிற்கு பின்புறம் சில அடிகள் தள்ளி ஒரு பிரம்மாண்ட ரயில் வண்டி சென்றுகொண்டிருந்தது!
ராமமூர்த்தியின் ‘நேர மேலாண்மை’யும் அவசரமும் நன்றாகவே புரிந்தது!