

காலை நேரம். நண்பனின் வீட்டு வராந்தாவில் அமர்ந்தபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. ஒரு இளம் பெண் தயக்கமாக உள்ளே நுழைந்தாள். “சார் நான் உமாமகேஸ்வரி. நகராட்சி சுகாதாரப் பிரிவுல இருந்து வர்றேன். நோய்த் தொற்று சம்பந்தமா கணக்கெடுத்துட்டு இருக்கோம்..” களையாக இருந்தாள். புதுப் புடவை போல. நண்பன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
“வீட்டு முகவரி, யார் யார் இருக்கீங்க.? சளி, இருமல் தொந்தரவு இல்லையே. குடிதண்ணீர் டேங்க்ல ஊத்தச் சொல்லி திரவ மருந்து தர்றாங்களா..?” நண்பன் விவரம் சொல்ல சொல்ல தன் குட்டி நோட்டில் குறித்துக் கொண்டாள்.
“சார் உங்க வயசு..”
“அம்பதும்மா..” என்றான் நண்பன்.
அவள் வியந்தாள். “நிஜம்..மாவா சார்.? உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே. இந்த வயசிலேயும் இவ்வளவு இளமையா இருக்கீங்க..!” பெருமையோடு புன்னகைத்தான். “எல்லோரும் இப்படித்தான் என்னை அதிசயமாப் பார்க்கறாங்க. என் நல்ல மனசு தான் குன்றாத அழகுக்கு காரணம்..!”
இருவரும் இன்னும் சில நிமிடங்கள் அரட்டை அடித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரிந்தனர். அவள் நகர்ந்ததும் நண்பன் மீது பாய்ந்தேன். ”அதென்னடா ஒரேடியா ஏழெட்டு வயசு அதிகப்படுத்திட்டே.! அம்பதா உனக்கு.. எதுக்கு இந்த வீண் பொய்யி?”
“அதை விட்டுத் தள்ளு. ஒண்ணு கவனிச்சியா.. நான் என் வயசை கூடுதலாச் சொன்னதும் அவ ரிஏக்சன் பாரேன்.. சே, இத்தனை வயசாகியும் இவரு எவ்வளவு இளமையா இருக்காருன்னு வியந்து போய் ஒரு பார்வை பார்த்தா பாரு.. சூப்பரா இருந்துச்சுல்ல.! நீ பாட்டுக்கு உண்மையான வயசை சொல்லியிருந்தா ஒரு கிக்குமே இருந்திருக்காது. அப்படியா, சரின்னு போயிருப்பா. இதெல்லாம் ஒருவிதமான சைக்காலஜி ட்ரீட். நீ ஒரு அரை சாமியார். உனக்கு புரியாது.!” என கண்ணடித்தான்.
“எல்லாம் சரிதான்! ஆனா இந்த மாதிரி விசப்பரிட்சையெல்லாம் பண்றப்போ நமக்குப் பின்னாடி யாராவது இருக்காங்களான்னு கவனிச்சுக்கறது நல்லது..” என்றேன் மெல்லிய குரலில்.
வேகமாக திரும்பினவனிடம் “இந்த வயசுல கிளுகிளுப்பு கேட்குதோ..” என்றபடி கை ஓங்கினாள் அவன் மனைவி.