"என்னப்பா பெண் ஜாதியை பிரசவத்துக்குப் பொறந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தயே? என்ன எதாவது விசேஷமா?"
"ஆமாண்ணே..! எனக்கு வாரீசு பொறந்திருக்கு!"
"வரவா? செலவா?"
"புரியலையே….?"
"ஆண் பொறந்திருக்கா? பொண்ணு பொறந்திருக்கான்னுதான் அப்படிக் கேட்டேன். ஆணுன்னா வரவு! பொண்ணுனா செலவு! அப்படிச் சொல்றதுதானே வழக்கம்?! நீ என்ன தெரியாத மாதிரி நடிக்கறே?”
"நடிக்கலை… எனக்கு வரவுதான்..!"
"பலே! அடிறா சக்கே! பையனா? என்ன வெயிட்? யாரைப் போல இருக்கான். உன்ன மாதிரியா? வூட்டுக்காரி மாதிரியா?"
"கொஞ்சம் பொறுங்க! வரவுன்னா.. ஆணாத்தான் இருக்கணும்னு அவசியமில்லே! பொண்ணாவும் இருக்கலாம்!"
"புரியலையே!"
"'இறைவன் இருக்கின்றானா?
இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்?'னு
ஒரு பழைய பாட்டு கேட்டிருக்கீங்களா?"
"ஆமாம்! எஸ் எஸ் ஆர் நடிச்சது. சூப்பர் பாட்டாச்சே!?"
"பாட்டை விடுங்க… ! இறைவன் எங்க இருக்கான் தெரியுமா?! எல்லா எடத்துலயும் இறைவன், தான் நேர்ல வரமுடியாதுங்கறதுனாலயும், வாரீசுகளையும் இரக்கத்தையும் வளர்க்குற எடமா பெண்கள் இருப்பதுனாலயும், இறைவன் அங்கேதான் இருக்கான்.... இப்பப் பாட்டை தொடர்ந்து யோசிச்சுப்பாருங்க… “
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை!
நான் நாத்திகனானேன்.. அவன் பயப்படவில்லை!
அகப்படாத, பயப்படாத இறைவன் வசப்படுவது வாரீசு வளருமிடத்தில்தானே..? அது ஆண்டவனுக்கே வரவு இல்லையா?! அதுனாலதான் பொண்ணு பொறந்தா மகாலட்சுமி பொறந்திருக்கறதா சொல்றாங்க… ! இப்பச் சொல்லுங்க.. மகாலட்சுமி வரவா? செலவா?"
"வரவுதான்."
"ஆக, மகா லட்சுமியை கண்ணுக் கண்ணா வைத்துக் காப்பாத்தினா எல்லாருக்கும் வரவுதான். கண்ணை மூடிட்டு காசுதான் பெரிசுன்னு நெனைச்சா கஷ்டம்தான். புரிஞ்சுதா?"
"கொஞ்சம் புரியுது!"
"முழுசாப் புரியறா மாதிரி ஒண்ணு சொல்றேன் கேளுங்க..!"
"எந்த வீட்டுல பொண்ணைப் பொறக்க வச்சா மதிப்பா இருக்கும்னு ஆண்டனுக்குத்தான் தெரியும் புரியுதா!"
"புரிஞ்சுது!"
"என்ன புரிஞ்சுது?"
"இறைவன் இருக்கின்றான்கறதும் அவன் எங்கே வாழ்கின்றாங்காறதும் புரிஞ்சுது," என்றார் உறுதியாக.
நிம்மதியாய் இருந்தது பெண்ணைப் பெற்றவனுக்கு!