
மினி கதை1: பூக்காரி:
“நாங்க யாரும் அவகிட்ட பூவே வாங்க மாட்டோம், காரணம் தெரியுமில்லே. ஆனா ஒன் புருஷன் அவ கடையிலேயே நின்னுகிட்டிருக்கான். சிரிச்சு சிரிச்சு பேசறான்! விஷயம் விபரீதமாவதற்கு முன் ஏதாவது செய்யுடி.” பக்கத்து வீட்டு பார்வதியின் உபதேசம் ரம்யாவின் மனசை அரி்த்து கொண்டே இருந்தது.
இன்று இரவு கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவில் இருந்தாள். ஆனால்… வரும் போது பூவும் அல்வாவும் வாங்கி வந்திருந்தான்.
“பூவிற்கு மயங்காத பூவையர் உண்டோ” என்ற நினைப்பில் இருந்தவன் காதில்,” என்னங்க! என்னங்க, அந்த பூக்காரி...” என்றாள்.
“பூக்காரிக்கு என்ன? அவ நல்லாத்தான் இருக்கா” என்றான்.
“அவ நல்லாத்தான் இருப்பா! ஆனா என் வாழ்க்கை வீணா போய்டும் போல இருக்கே!”
“பூக்காரிக்கும் ஒனக்கும் என்னடி பிரச்னை?”
“பிரச்னை எனக்கும் பூக்காரிக்கும் இல்லை… உங்களுக்கும்… பூக்காரிக்கும். அதனால எனக்கு பயமா இருக்கு," என்றாள்.
"எனக்கும் பூக்காரிக்கும் பிரச்னையா?"
"ஆமாம், பொம்பளைங்களே அந்த பூக்காரிக்கிட்ட பூ வாங்கறதில்லே. ஆனா நீங்க மட்டும் அவகிட்ட பூ வாங்கிறீங்களாம். அவகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசறீங்களாம். எல்லாம் என் காதுல வந்து தானா விழுது."
“நான் அந்த பூக்காரி கிட்ட பூ வாங்கறது ஒனக்கு வில்லங்கமா போச்சா? என்னை புரிஞ்சிகிட்டது அவ்வளவுதானா? ரம்யா! மற்ற பூக்காரிகளெல்லாம் முழம் போடும் போது ஒரு முழத்துக்கு முக்கால் முழம்தான் போட்டு பூ விக்கிறாங்க. அதையும் வாங்கறாங்க. ஆனா நான் வாங்கற பூக்காரி மட்டும் முழத்தை முழுசா போட்டு பூவை விக்குறா!
“ஏன்னா அவளால ஒரு முழத்தை முக்கால் முழமா போட முடியாது. இருக்கிற கை அளவே 'முக்கால்தான்'. இதில அவ எங்கே குறைச்சலா போடறது. நல்லா இருக்கிறவங்களே முழு முழத்தை முக்கால் முழமா போடும் போது… முக்கால் முழ கையை வைச்சிருக்கிறவ, முக்கால் முழத்தை முழுசா போட்டு பூவை நியாயமா விக்கிறா. ஆதனால நான் தொடர்ந்து வாங்கறேன். அம்பூட்டுதான்” என்றான்.
முக்கால் முழ பூவை தலையில் வைத்து விடுமாறு கணவனிடம் கண்களால் ஜாடை செய்தாள் ரம்யா..
மினி கதை 2: தகுதி:
அந்த விழா மேடையில் சரியான சவுக்கடி கிடைக்குமென எதிர்பார்க்காமல், கம்பீரமாக அமர்ந்திருந்தார் விக்கிரமாதித்யன். கூட்டம் நிரம்பி இருந்தது. ஆனால், யாருக்காகவோ காத்திருந்தனர். விழா அமைப்பாளர் வெளியில் அவ்வப்போது எட்டிப் பார்த்தார்.
“என்னப்பா லேட்? யாருக்காக காத்திருக்கீங்க?” கேட்டார்.
“ஐயா, உங்களுக்கு விருது தருபவர் இன்னும் வரவில்லை. அவர் வந்தவுடன் ஆரம்பித்து விடலாம்” என்று சொல்லி நகர்ந்தார்.
நேரம் கடந்து கொண்டே போனது… விழாக்குழுவினரோ… அவர் கையால் தான் விருது தருவோம் என பொறுமை காத்தனர். விக்கிரமாதித்யரின் மனசுக்குள், 'பெரிய… பெரிய அரசியல் தலைவர்களை விடவா, இவர் பெரியவர்… வரட்டும் பார்க்கலாம்' என்று நினைத்து காத்திருந்தார்.
அவர் அரங்கினுள் நுழைவதாக தகவல் வந்தவுடனே, மேடையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ஓடோடிபோய்… அவரை அழைத்து அமரவைத்தனர். அவரைப் பார்த்த விக்கிரமாதித்யருக்கு பேரதிர்ச்சி...
அனைவரும் விக்கிரமாதித்யரைப் பாராட்டி விட்டு, விருது வழங்க கேட்டுக் கொண்டார்கள். விருதினை வழங்கும் போது, “நான் தகுதியானவன்தானே?” என்று விக்கிரமாதித்யரின் காதோரம் கிசுகிசுத்தார் விருது வழங்கியவர்.
“எடைக்கு பழைய பேப்பரும், குப்பையும்… வாங்குற ஒனக்கு, எழுத்தைப் பத்தி பேச தகுதி இருக்கா?” என்று அன்று ஒரு நாள் விருது வழங்கியவரை ஏளனப்படுத்தியது விக்ரமாதித்யர் நினைவுக்கு வந்தது... அவரும் ஒரு எழுத்தாளரென்று அன்றுதான் அறிந்து கொண்டார் விருது பெற்ற எழுத்தாளரான விக்ரமாதித்யர்!
மினி கதை 3: ஸ்கிம்மர்:
பல்சர் பைக் பெட்ரோல் பங்குக்குள் நுழைந்தவுடன், கண்களால் ஜாடைக் காட்டிவிட்டு வெளியேறினான் கணேஷ். புரிந்து கொண்டவனாய் தலையாட்டிவிட்டு செயலில் இறங்கினார் சேகர்.
“அண்ணே, பத்து லிட்டர் “ குரல்கொடுத்து விட்டு டெபிட் கார்டினை நீட்டினான் ஹெல்மெட் அணிந்தவன். டெபிட் கார்டின் ஸ்வைப்புக்கு பிறகு பல்சரில் பறந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ்க்கா, உன்னோட டெபிட் கார்டையும் பின் நெம்பரும் கொடுத்தே, வண்டிக்கு மட்டும் பெட்ரோல் போட்டுட்டேன்க்கா. எழுநூற்று சொச்சம் ஆச்சுக்கா. நாளை காலையிலே ஊருக்கு போறேன்கா” என்றான்.
அவர்களின் உரையாடலுக்கிடையே “தங்களது கணக்கிலிருந்து ஐம்பதாயிரத்து எழுநூற்று எண்பத்து ஆறு எடுக்கப்பட்டுள்ளது என்ற மனைவியின் அலைபேசி செய்தி பார்த்து அதிர்ந்தான் பெட்ரோல் பங்கில் சேகருக்கு கண்களால் ஜாடைக் காட்டிய கணேஷ்.