அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மானித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு செய்ய, பூபதி கொடியில் வைத்து மடித்துக் கட்டவும் அலங்காரத்திற்காகவும் பூக்களைத் தயார் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
வீட்டுத் தோட்டத்திலிருந்து செவ்வந்தி, செம்பருத்தி, ரோஜாப் பூவென பல பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, வேலியைத் தாண்டி வெட்டவெளியில் ஒரு பொன்னரளி மரத்தில் மஞ்சள் நிற பொன்னரளி பூக்கள் தங்க நிறம் ததும்ப பூத்துக் குலுங்கியிருந்தன.
மற்ற பூக்கள் பற்றாக் குறையாய் இருக்க, ‘பறிச்சுக்கோ!! பறிச்சுக்கோ!’ என கூவாமல் கூவி அழைத்தது பொன்னரளி!. பறித்துக் கொண்டு போனால்.. "சார், இதை யூஸ் பண்ண மாடாங்க!" என்று ஏற்க மறுத்தார்கள் அங்கிருந்தவர்கள்!
‘என்ன செய்வது?' என்று யோசித்தான் பூபதி.. ‘எதுவும் நிறைய இருந்தால் மதிப்பிருக்காதோ? குறிஞ்சிக்குக் கொடுக்கப்படும் மரியாதை இந்தப் பொன்னரளிக்கு மட்டுமில்லேயே ஏன்? பூக்களில் இது என்ன பாவம் செய்தது?
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஆனால், உண்மையில் போராடும் போர்க்களம் மற்ற பூக்களுக்கு இல்லை! மலிந்து கிடக்கும் பொன்னரளிக்கு மட்டும்தானோ?!
தேசக் கொடியில் இது, இடம் பெறாவிட்டாலும் கொடிக் கம்பப் பாதங்களாவது இதற்குப்பாத்தியப்படட்டும். சுதந்திர வேள்வியில் எத்தனையோ காரணங்களால் புகழ் மறுத்தளிக்கப்பட்ட, பெயர் தெரியாத, விடுதலை வீரர்களைப் போல இதற்கும் விலாசம் இல்லை! ஏன்? இந்தப் பொன்னரளிக்கு வாசம் இல்லாததால்தான்!'
"பொன்னரளிபூவே…! நீ, அரளிமரத்தில் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருப்பதைவிட உனக்கு உயர்வும் மரியாதையும் தேசக் கொடிமரத்தின் பாதத்தில் பாத்தியப்படட்டும்" என்று.. மறுமொழி சொல்லாமல், கொடிக் கம்பத்தின் காலடியில் மஞ்சள் பொன்னரளிகளைப் போட்டுவிட்டு மவுனமாய் வீடு திரும்பினான் பூபதி!