

சென்னை ஆழ்வார் திருநகரில் கிருஷ்ணன் துணிக்கடை வைத்து இருந்தார். கிருஷ்ணனுக்கு வயது 33. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில் 4,5 பெண்களைப் பார்த்தார்கள். அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. கல்யாணத்தைத் தள்ளிப்போட்டே வந்தார்.
அவரது கடைக்குப் பக்கத்தில் ஒரு டீ கடை இருந்தது.
பெரும்பாலும் காலை 8.30க்கு டீ குடிப்பார்.
வாசுகி.
ஆழ்வார் திருநகரில்தான் இருந்தார். வயது 20 அல்லது 25தான் இருக்கும். நல்ல அழகு. எப்போதும் ஒரு புன்னகையுடன் இருப்பார்.
அவர் துப்புரவு தொழிலாளி. சீருடையில்தான் இருப்பார்.
கிருஷ்ணன் தினமும் அவரைப் பார்ப்பார்.
8.30க்கு டீ குடிக்க வாசுகி வருவார். கிருஷ்ணனைப் பார்த்து ஒரு சிறு புன்னகை. 'என்ன கஷ்டமோ வாசுகி இந்த வேலைக்கு வந்து உள்ளார்...?' என கிருஷ்ணன் நினைத்தார்.
சில நாட்கள் வாசுகி குடிக்கும் டீக்கும் அவரே காசு கொடுப்பார்.
வாசுகி சிரித்துகொண்டே “தேங்க்ஸ்” என்பார்.
கிருஷ்ணன் வாசுகியை நேசித்தார். மனதார காதலித்தார். ஆனால் சொல்ல பயம். போகட்டும் போகட்டும்.. தமக்கு ஒரு நல்ல நேரம் வரும்.
அப்போது அவரிடம் தனது காதலைச் சொல்லலாம் என்று நினைத்தார்.
இன்று 8.30க்கு வாசுகி நொண்டிக்கொண்டே டீ கடைக்கு வந்தார்.
“என்ன ஆச்சு…?”
“கண்ணாடித் துகள் குத்திவிட்டது…!”
“எடுத்தாச்சா?”
“இல்லை. இப்போதுதான் குத்தியது…!”
“டீ சாப்பிடுங்கள்… பிறகு அந்தக் கண்ணாடித் துகளை நான் எடுத்து விடுகிறேன்…!”
இருவரும் டீ குடித்தார்கள். கிருஷ்ணன் வாசுகியை கடைக்குள் அழைத்துச் சென்று… வாசுகியை உட்கார வைத்தார்.
“ம்ம்… காட்டுங்கள்... எந்தக் கால்…?”
“இடது…!”
கிருஷ்ணன் ஒரு சேஃப்டி பின் எடுத்து அவரது இடது காலைத் தூக்கி எங்கே கண்ணாடி துகள் உள்ளது எனப் பார்த்தார். இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்.
“வாசுகி… அசையாமல் இருங்கள்…” என்று சொல்லி இடது காலில் துகள் இருக்கும் இடத்தில் சேஃப்டி பின்னை வைத்தார்.
“அம்மா…!” வலி தாங்கமுடியாமல் சிரமப்பட்டார்.
“வாசுகி… ஒரே ஒரு நிமிஷம்… எடுத்துவிடுவேன்… !“என்று சொல்லி கண்ணாடித் துகளை எடுத்துவிட்டார். கண்ணாடித் துகளை வாசுகியிடம் காண்பித்தார்.
“இப்போது நடங்கள். வலி இருக்கா…?”
வாசுகி கடையில் 2,3 முறை நடந்து பார்த்தார். வலி இல்லை...
சந்தோஷம்...
“சார் ரொம்ப தேங்க்ஸ்… நான் வரேன்…! “ என்று கிளம்பி விட்டார்.
கிருஷ்ணன் தினமும் காலை சந்தித்து குட்மார்னிங் சொல்லுவார். மனதில் காதலை வெளிப்படுத்த மிகவும் ஆசை. நாளை சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்தார்.
மறுநாள் இருவரும் டீ சாப்பிட்டார்கள்.
பின்னர் கிருஷ்ணன் வாசுகியை கடைக்குள் அழைத்து வந்து உட்காரச் சொன்னார். வாசுகி உட்கார்ந்தார்.
கிருஷ்ணன் லப்-டப் அதிகரித்தது. தடுமாறினார். எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் அசடு வழிந்தார்.
“சார்… சொல்லுங்க?”
“ம்ம்... சொல்றேன். கோபிக்கக்கூடாது. நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். எப்படி சொல்வது என்று இதுவரை யோசித்தேன். எப்படியோ இன்று கக்கிவிட்டேன்… உண்மையில் எனக்கு உங்களை மிகவும் பிடித்து இருக்கிறது…!”
“அய்யோ சார்… எனக்குக் கல்யாணம் முடிந்து பல வருஷம் ஆயிடுச்சு. என் 2 பசங்களும் ஹைஸ்கூல் படித்து வருகிறார்கள்… சார் எனக்கு வயது 36….!”
“என்ன 36 அ…? நான் 20 அல்லது 22தான் இருக்கும் என நினைத்துவிட்டேன். சரி… நான் சொன்னதை மறந்துவிடுங்கள். நாம் நண்பர்களாக இருப்போம்..!”
“சார்… நான் வரேன்…!”
வயது 36 என்று கிருஷ்ணனால் நம்ப முடியவில்லை. பலத்த ஏமாற்றம். இனி என்ன செய்ய முடியும்...?
அய்யோ… அட ராமா… !