
-லக்ஷ்மி ரமணன், சென்னை
சாருவுக்கு அகராதியில் பிடிக்காத வார்த்தை அட்ஜஸ்ட் என்கிற வார்த்தைதான், அன்றாடம் அந்த வார்த்தையைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு அலர்ஜி மாதிரியாகிவிட்டது, திருமணமான புதிதில் கணவர், மாமனார். மாமியார், நாத்தனார், கொழுந்தனார், புக்ககத்து அத்தை, மாமனாரின் தாய் என்று அனைவரையும் அவள் 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு குழந்தைகள் பிறந்து பெரியவர்களாகி அவர்களுடைய கோபதாபங்கள், விருப்பு வெறுப்புகள், எல்லாவற்றையும் சமாளித்து அவர்களால் வந்த மருமகள், மாப்பிள்ளை உறவுகள் என்றும் தொடர்ந்தது.
சென்னைப் பட்டணத்துக்கே பொழுது விடிந்து, ஆவின் பால் விநியோகிக்கப்பட்டாலும், கருப்பாயி, பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஆடி அசைந்து வருவதற்கு எட்டுமணிகூட ஆகிவிடும். முதல் முறை கேட்டபோது "அது வந்தும்மா.... எதிர் பில்டிங்குக்கு பால் பாக்கெட் போடப்போனேனா... அப்படியே அவங்க வீட்டு வேலையையும் முடிச்சுட்டு வந்தா ஒரே நடையாப் போயிரும்னு நினைச்சேன்... அதான் லேட்டு... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க" என்று பதில் சொன்னாள். ஆனால் அடுத்தடுத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதே பழக்கமாகிவிட்டது!
வீட்டு வேலைக்காரி காத்தாயி, சாருவிடம் சொல்லாமல் திடீரென்று நான்கைந்து நாட்கள் காணாமல் போய்விடுவாள். திரும்ப அவள் வந்து ஒப்பிக்கும் காரணங்களைக் கோர்வையாகத் தொகுத்தால், மெகா சீரியலில் பத்து எபியோடுகளை நிரப்புகிற அளவுக்கு மேட்டர் கிடைத்துவிடும். அவள் உறவினர் யாரோ இறந்து, அவள் போகவேண்டி அங்கு பட்ட கஷ்டங்கள்; கிராமத்தில் நடக்கும் திருவிழா பற்றிய வர்ணனை; அம்மன் கோயிலில் கூழ் ஊத்த வேண்டி போனதைப் பற்றிய விளக்கம் இத்யாதி... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் “நான் என்ன தினக்கொருக்க லீவு போடறேனா அவசரம்னுதானே போடுறேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா என்னவாம்?" என்பாள்.
சாருவுக்கு அந்த வார்த்தையைக் கேட்டதும் அகராதியிலிருந்தே அதை எடுத்து எறிந்து விடவேண்டும் என்பதுபோல் கோபம் வரும். இதுகூட பரவாயில்லை. பேப்பர் போடுகிற முத்து, தினம் ஒரு பாஷையில் செய்தித்தாளை அவர்கள் வீட்டுக் கதவில் செருகி விட்டுப் போய்விடுவான்! முத்துவின் தகப்பன் பெருமான்தான் நியூஸ் மார்ட்டின் ஓனர். ஃபோன் "சின்ன பையன், ஸ்கூல் போகிற அவசரம், தப்பா போட்டுட்டான் போல. கொஞ்சம் அட் ஜஸ்ட் பண்ணிக்கங்க” என்பார்.
என்னப்பா சொல்றீங்க... எனக்குத் தெரியாத மொழியில் இருக்கிற நியூஸ் பேப்பரை போட்டால் நான் எப்படி படிக்..."
அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே டெலிஃபோன் தொடர்பு துண்டிக்கப்படும்.
காய்கறிகளை விற்க வரும் செங்கமலம், காய் வாங்கிவிட்டு கொடுக்கும் ரூபாய்க்கு ஒரு நாள் கூட சில்லரை தர மாட்டாள். அதை சரிக்கட்ட சொத்தல் கத்தரிக்காயையும் கிழமாகிவிட்ட பழத்தையும் தலையில் கட்டி அட்ஜஸ்ட் செய்யப் பார்ப்பாள். இவர்கள்தான் என்றில்லை.
இஸ்திரி போடக் கொடுக்கும் புத்தம் புது ரவிக்கையைக் கிழித்துவிட்டு இஸ்திரிக்காரர், சப்தமில்லாமல் ரவிக்கையைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய்விடுவார். தையல்காரரோ நாம் கொடுத்த அளவு ரவிக்கையைத் தொலைத்துவிட்டு, குத்துமதிப்பாக ஓர் அளவுக்கு புது ரவிக்கையைத் தைத்து வைத்திருப்பார். தினம் கரண்டியுடன் ஏதாவது ஒரு பொருளைக் கடன் கேட்க வரும் அடுத்த வீட்டுக்காரி, ஒரு நாள் நம் வீட்டுக் கரண்டியையே கடன் கேட்பாள்! இன்னும் இப்படி எத்தனையோ சிச்சுவேஷன்ஸ். அவ்வளவுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ள கற்றுக்கொண்டால், வீட்டிலும், வெளியுலக அறிமுகங்களுடனும் அமைதியான சுமுக உறவு நிலைக்கும் என்பது நிஜமாக இருக்கலாம்.
ஆனால்... இவள்தான் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுகிறாளே என்கிற அலட்சிய போக்கோடு அதையே நம் பலவீனமாக நினைத்து மற்றவர்கள், தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடுகிற சூழ்நிலை உருவாகிவிடும்.
அப்புறம் என்ன... அதுவே சுமையாகி நம்மை பயமுறுத்தும். என்னதான் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டாலும் நம் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று சாரு உணர்ந்தபோது, மற்றவர்கள், அவளை அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய வயதை, அவள் எட்டியிருந்தாள்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்