
பெரும் மலைகளுக்கும் தரையை தழுவிச் செல்லும் நதிக்கும் இடையில் அமைக்கப்பட்ட பாலத்தில் காற்றைக் கிழித்துச் செல்லும் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். நகரங்களின் இரைச்சலில் இருந்து தப்பிக்க ஒரே வழி ரயில் பயணம் தான். சுற்றிலும் பெரும் மலைகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட காட்டில் பள்ளிக்குழந்தை கிறுக்கி போட்டதுபோல அமைக்கப்பட்ட இரும்பு கோட்டில் நகர்ந்துகொண்டிருக்கிறது எனது பயணம்.
மாதத்தில் ஒரு முறையாவது இதுபோல ரயில் பயணம் செல்வதை கிட்டதட்ட ஒரு பழக்கமாகவே வைத்துள்ளேன். கோயம்புத்தூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் இரவு பகல் மாறி மாறி வேலை செய்து ரோடு முழுக்க அடைத்திருக்கும் வாகன நெரிசலில் தட்டுத் தடுமாறி வீடு திரும்பும் எனக்கு இதுபோல பயணம் ஒருவகையான அகவிடுதலை தான். இதுபோன்ற பயணங்களில் தனியாக செல்வதே எனக்கு விருப்பம். நண்பர்களை அழைத்து சென்றால் ஏதாவது வெட்டிக்கதை பேசி பயணம் என்னும் என்னுடைய தியானத்தை கலைத்து விடுகிறார்கள். அந்த காரணத்தாலே தனியாகவே பயணத்தை மேற்கொள்கிறேன்.
வெளியே வெயில் தகித்துக்கொண்டிருந்தாலும் இருக்கையின் ஜன்னல் வழியே தேகத்தை தொடும் போது குழந்தையின் முத்தத்தைப்போல் சுகமாகத்தான் உள்ளது. பயணங்களில் எப்போதும் படிக்க ஒரு புத்தகம் எடுத்து வருவது எனது வழக்கம். வேலை நாட்களில் படிக்க நேரம் இல்லாததால் அப்படியே நேரம் கிடைத்தாலும் எட்டு மணி நேரம் வேலை செய்து வாகன நெரிசலில் திக்கு முக்காடி வரும் போது சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுக்கவே மனமும் உடலும் எண்ணுகிறது. அதனாலேயே இது போன்ற பயணங்களில் புத்தகம் எடுத்து வருவதுண்டு. இப்போது கையில் இருக்கும் புத்தகத்தை காலையில் ரயிலில் ஏறியபின் படிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகன் எழுதிய காடு புத்தகம். ஜெயமோகனின் புத்தகங்களை விரும்பி படிப்பவன் நான் அதன் காரணத்தாலே இப்போதே பாதி நாவலை படித்து முடித்துவிட்டேன்.
மலைகளும் மரங்களும் புடைசூழ காட்டின் நறுமணம் நாசி வழியே சென்று உடலை நிறைக்க புத்தகத்தின் வழியே காட்டில் உடலும் மனமும் சஞ்சலித்துக்கொண்டிருக்க கிட்டதட்ட ஒரு தவநிலை தான் இந்த பயணம்.
எங்கோ இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தேன். எதிர் இருக்கையில் ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. கையில் குழந்தையுடன் ஒரு பெண்ணும் அவளது கணவனும் அமர்ந்தார்கள். இருவரும் வியர்வையில் குளித்திருந்தார்கள். சட்டென என்னை பார்த்துப் புன்னகை செய்தார் பெண்ணின் கணவர். நானும் பதிலுக்கு புன்னகை புரிந்தேன். ஏதோ யோசித்தவராக சட்டென,
“எங்க சார் போறீங்க கேரளவா”...? என்றார்.
“ஆமா சார் நீங்க எங்க போறீங்க?” என்றேன் சற்று பதட்டமாக.
“ நானும் கேரளா தா சார் போற சொந்தக்காரங்க வீட்டுல மேரேஜ் ஃபங்சன் அதுக்கு தா சார் போய்ட்டு இருக்கோம் ‘ என்றார் புன்னகையுடன்.
‘சரி சரி ‘ என்று தலையை ஆட்டினேன். அவர் மனைவி குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தார்.
"என்ன சார் பண்றிங்க”.. ?
“நா ஐடி கம்பெனி ல வொர்க் பண்ற“
அவருடன் பேச பெரிதாக ஆர்வமில்லாததால் பேச்சு கொடுக்காமல் அமைதியானேன். பயணத்தில் யாருடனும் பேச அவ்வளவாக நான் விரும்புவது இல்லை. அமைதியாக பயணத்தில் மனதை சஞ்சலிக்க விடுவதே எனது விருப்பம்.
மாலை ஆகியிருந்தது. மாலை வெயில் மலைகளின் மேல் பொழிந்துகொண்டிருந்தது. மலையே ஒரு பொன்மலை போல காட்சியளித்தது. எதிர் இருக்கையில் இருந்த குழந்தை அம்மாவின் மடியில் இருந்து அப்பாவின் கைகளுக்கு செல்ல முயன்றுகொண்டிருந்தது. அந்த பெண் தன் குழந்தையை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தாள் அவள் பிடியை மீற முயற்சிக்கும் குழந்தையைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். குழந்தையின் தந்தை கையை நீட்டி குழந்தையை ஊக்குவித்துக்கொண்டிருந்தார். ஒருவழியாக குழந்தையை தாயின் கைகளிலிருந்து தந்தையின் கைகளுக்கு சென்றது. தந்தை தனது கைகளுக்குள் குழந்தையை ஏந்திக்கொண்டார். மகிழ்ச்சியில் குழந்தை குவாக் குவாக் என சிரித்தது. ஒருவகையில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
சற்றுநேரம் கழித்து குழந்தை என்னை பார்த்துப் சிரித்து என்னை நோக்கி கைகளை நீட்டியது. குழந்தையின் தந்தை என்னை பார்த்து சிரித்தார். மனம் பதறியது. பதற்றத்தை காட்டிக்கொள்ளாமல் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டேன். மீண்டும் அதே குவாக் குவாக் என்ற மழலை சிரிப்பு. என் மனமும் குவாக் குவாக் என்ற நயத்தில் கலந்தது.
மாலை வெயில் மலைகளின் மீதும் மரங்களின் மீதும் பொழிந்துக்கொண்டிருந்தது. பொன் வனத்துக்கு நடுவே இரயில் நகர்ந்துகொண்டிருந்தது. குழந்தை என் மடியில் இருந்து ஜன்னலின் வழியே வேடிக்கைப்பார்த்து சிரித்தது. வெயில் மலைகளில் பட்டு மினுமினுத்து ஜன்னலின் வழியே குழந்தை மீது எதிரொலித்தது. மலையின் மினுமினுப்பு குழந்தையின் தேகம் முழுவதும் பரவி குழந்தை கோவில் கருவறையில் இருக்கும் தங்க விக்ரகம் போல காட்சியளித்தது. குழந்தை என்னைப் பார்த்து சிரித்த அந்த நொடி எங்கோ இருந்து ஒரு குரல் 'சரணம் ஐயப்பா' என்று ஒலித்தது.