சிறுகதை: களவு

Short story in tamil
ஓவியம்; ராமு
Published on

-பூர்ணிமா ரமேஷ்

ழும்பூரில் இருக்கும் ருக்மிணி லட்சுமிபதி சாலையின் கோடியில்தான் மீனாவுக்குப் பிடித்த பிள்ளையார் கோயில் இருக்கிறது. எந்தப் பிரச்னையானாலும் பிள்ளையாரிடம் சொல்லிவிட்டால் போதும். ஒரு நல்ல முடிவு கிடைத்து விடும் என்ற அசாத்திய நம்பிக்கை மீனாவுக்கு. இதுவரையில் அப்படித்தான் நடந்திருக்கிறது.

ஒரு வாரம் முன் அனு, நியூஜெர்ஸியிலிருந்து அவசரமாகப் ஃபோன் செய்தாள், "அம்மா, நேஹா சரியாகவே பால் சாப்பிட மாட்டேங்கிறா. டாக்டரிடம் அழைச்சுக்கிட்டுப் போறேன். மனசே சரியா இல்லை. நீ எப்போ இங்கு வருவேன்னு இருக்கு அர்ஜுனும் வேலை விஷயமா வாரத்துல இரண்டு மூணு நாள் டூர் போயிடறாரு. ரொம்ப கஷ்டமா இருக்கும்மா."

"இன்னும் இரண்டு வாரத்துல அங்கே வந்து விடுவேனே கண்ணா, கொஞ்சம் பொறுத்துக்கோ.” என்னதான் அனுவுக்கு ஆறுதல் சொன்னாலும் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது மீனாவை மிகவும் பாதித்தது. அனுவின் தலைப் பிரசவத்துக்கு, ஒரு மாதம் முன்பே அமெரிக்கா போவதற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தாள் மீனா. குழந்தை பிறந்ததும் அவளுக்கு எப்படி யெல்லாம் உதவியாக இருக்க வேண்டுமென்றும் திட்டமிட்டிருந்தாள். எதிர்பாராத விதமாக பிரசவ சமயத்தில் போக முடியாதபடி விசா ஏதோ காரணத்தால் ரிஜெக்ட் ஆகிவிட்டது. நியூஜெர்ஸியிலேயே இருந்த மீனாவின் தங்கை பிரியாதான், அனுவுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தாள். ஆனாலும் அம்மா முக்கியமான சந்தர்ப்பத்தில் தன் பக்கத்தில் இல்லையே என்ற வேதனை அனுவுக்கு இல்லாமலில்லை.

மீனா மறுபடியும் விசாவுக்கு ரீ- அப்ளை செய்ததில், விசா கிடைத்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்கப் பயணம். குழந்தை நேஹாவுக்கு இரண்டு மாதம் முடிந்து மூன்றாவது மாதமும் ஆரம்பித்துவிட்டது. அவளுடைய புகைப்படத்தை, கம்ப்யூட்டரில் பார்த்ததோடு சரி. எப்படியோ அனுவின் மெட்டர்னிட்டி லீவு முடிவதற்குள்ளாவது தன்னால் அங்கு போக முடிகிறதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். இடையில் ஏற்பட்ட நேஹாவின் உடல் நலக் குறைவுதான் மீனாவின் மனத்தை என்னவோ செய்தது. அதற்காகவே தினமும் இரண்டு பாக்கெட் பால், அபிஷேகத்துக்காக கொடுப்பது என்று பிள்ளையாருக்கு நேர்ந்துகொண்டாள்.

மீனாவுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று, இருள் பிரியும் ரம்யமான காலை நேரத்தில் வாக்கிங் போவது. ஒரு நாள் கூட அவள் நடைப்பயிற்சியை 'மிஸ்' செய்ததில்லை. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள். அவள் கணவன் ரவி, அவளுக்கு நேர் எதிர். ஏழு மணிக்குமேல்தான் அவனுக்கு விழிப்பே வரும். தன்னுடன் அவனும் வந்தால் நன்றாக இருக்குமே என்ற நினைப்பு அவ்வப்போது எழுந்தாலும், பீச்சில் வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு, தனியாக நடப்பதும் ஒரு வித சுகமாகத்தான் இருந்தது மீனாவுக்கு.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அவசரத்துக்கு உதவும் மூலிகை மருத்துவ குறிப்புகள்..!
Short story in tamil

காலை ஆறுமணிக்கு மேல்தான் பிள்ளையார் கோயில் திறக்கும். காலையில் வாக்கிங் போவதற்கு முன், கோயில் குருக்கள் சொன்ன மாதிரி பால் பாக்கெட்டுக்களை, பூட்டியிருக்கும் கதவு கம்பிகளின் இடையில் பத்திரமாக வைத்துவிடுவாள். செவ்வாய், வெள்ளி இரண்டு நாட்களும் மாலையில் கோயிலுக்குப்போய் பிள்ளையாரைத் தரிசிப்பாள். ஆனால், பிரயாண ஏற்பாடுகள், அனு, அர்ஜுன், நேஹாவுக்காக கடைசி நிமிஷ ஷாப்பிங் என்று ஒன்று மாற்றி ஒன்று ஏதோ ஒரு வேலை இருந்துகொண்டே இருந்தது. அதனால் மாலையில் கோயில் போவதும் தட்டிக்கொண்டே போனது. காலையில் பூட்டியிருக்கும் கோயிலில் அபிஷேகப் பால் வைக்க போவதோடு சரி.

ரு வார இடைவெளிக்குப் பிறகு அன்றுதான் மீனாவால் கோயிலுக்குப்போக முடிந்தது.

''ஏம்மா மீனா, அபிஷேகத்துக்கு இரண்டு பாக்கெட் பால், வைப்பதாகச் சொன்னாயே? தினமும் ஒரு பாக்கெட் பால்தானே இருந்தது. ஏன்?" விபூதியை கொடுத்தவாறே கேட்டார் கோயில் குருக்கள்.

மீனாவுக்கு திக்கென்றிருந்தது. நேஹாவுக்காக நேர்ந்து கொண்டதாயிற்றே? அபசகுனம்போல் ஒரு வாரமாக அபிஷேகப் பால் காணாமல் போயிருக்கிறது. தினமும் ஒரு பாக்கெட்டை மட்டும் யார் எடுத்துக்கிட்டுப் போயிருக்க முடியும்? - மீனாவுக்கு சங்கடமாக இருந்தது.

"இத்தோடு பத்து தடவையாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பாய் மீனா பேசாமல் தொண தொணக்காமல் தூங்கு" அவள் கணவன் ரவி, சலிப்புடன் கூறிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிப்படுத்துக்கொண்டு, தன் குறட்டையைத் தொடர்ந்தான்.

மீனாவால் அன்று இரவு முழுதும் தூங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தாள். காலை வாக்கிங் கூட முக்கியமில்லை; எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. காத்திருந்து எப்படி ஒரு பாக்கெட் பால் மட்டும் திருடு போகிறது என்று கண்டுபிடித்தே ஆகணும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

இதையும் படியுங்கள்:
எல்லாம் வயசுக் கோளாறு!
Short story in tamil

டுத்த நாள் காலை, மிக சீக்கிரமாகவே எழுந்தாள். பிள்ளையார் கோயிலின் வாசலில் காரை நிறுத்தி பால் பாக்கெட்டுகளை வைத்தாள். திருடனை கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும் என்று காரை கோயிலின் எதிர்பக்கம் நிறுத்திவிட்டு, காரில் உட்கார்ந்து கோயிலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

பத்து பதினைந்து நிமிடங்கள் எந்த நடமாட்டமும் இல்லை. திடீரென்று கோயிலை ஒட்டிய சின்ன சந்திலிருந்து ஒரு வெள்ளை நாய், மூச்சிறைக்க ஓடி வந்து கோயிலின் வாசலில் நின்றது. மெதுவாகத் தன் முன்னங்கால்களைத் தூக்கி கோயிலின் வாசல் கம்பிகளில் வைத்தது. மீனா வைத்திருந்த இரண்டு பால் பாக்கெட்டுகளிலிருந்து ஒன்றை மட்டும் வாயில் கவ்விக்கொண்டு, ஒரே ஓட்டமாக எந்தச் சந்திலிருந்து வந்ததோ அதே சந்துக்குள் திரும்பி ஓடிவிட்டது.

மீனாவுக்குப் பொறுக்கவில்லை. அவசரமாகக் காரைப் பூட்டி, சாலையைக் கடந்து நாய் ஓடின அதே சந்துக்குள் நுழைந்து, வேகமாக நடக்கத் துவங்கினாள். சிறிது தூரம் கடந்ததும், கோயிலின் பின்புறத்தில் உள்ள வெட்ட வெளியில் வந்து சந்து இணைந்தது.

ங்கிருந்த அழகான மரத்தின் அருகில் ஒரு சிமெண்ட் திண்ணை. மரத்தின் கிளை தாழ்வாக அந்தத் திண்ணையைத் தொடுவது போலிருந்தது. அந்தக் கிளையில் பழைய துணியில் கட்டிய தூளி ஒன்று காற்றில் அசைந்துக்கொண்டிருந்தது. சிமெண்ட் திண்ணையில் ஒரு கிழிந்த பாய். அதில் கால்களை உதைத்துக்கொண்டு வெற்றுடம்புடன் படுத்திருந்த பச்சைக் குழந்தை. அந்தப் பெண் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு மாதங்கள்தான் இருக்கும்.

குழந்தையின் அருகில் இரண்டு கால்களும் சூம்பியபடி இருபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண், அமர்ந்திருந்தாள் கிழிந்த புடைவை அவளது உடம்பை மறைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருந்தது. சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போன்ற ஒட்டி உலர்ந்த மெலிந்த தேகம். அவளது கையில் பால்பாக்கெட்! அவளுக்கும், அந்தப் பச்சைக் குழந்தைக்கும், தான் தான் காவல் என்பதுபோல கம்பீரமாக உட்கார்ந்திருந்தது அந்த வெள்ளை நாய்.

அந்தப் பெண், தன் கையிலிருந்த ஏதோ ஒன்றால் பால் பாக்கெட்டை ஓட்டை செய்து பாலை ஒரு நசுங்கின அலுமினியத்து தூக்கில் மெதுவாக ஊற்றினாள். அதி லிருந்து சிறிதளவு பாலை ஒரு சிறிய அலுமினியக் கிண்ணத்தில் ஊற்றி, சின்ன ஸ்பூனைக் கொண்டு அந்தக் குழந்தைக்கு சிறிது சிறிதாகப் புகட்ட ஆரம்பித்தாள்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஏப்ரல் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com