

செல்போன் மணி ஒலித்தது.
"ஏங்க, இந்தாங்க உங்க அம்மாதான்," என போனை கணவனிடம் கொடுத்தாள் ராதிகா.
“ஹலோ சொல்லும்மா நான்தான் வாசு பேசறேன்..."
அம்மா தொடர்ந்தாள்...
“நான் போனவாரம் சொன்னபடி இன்னைக்கு பிளாட் ரிஜிஸ்டர். டோக்கன் நம்பர் மூனு, எப்படியும் நீயும், ராதிகாவும் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு வந்துடுங்க," என்றாள்.
“சரிம்மா, நீங்க எப்படி வருவீங்க? காா் அனுப்பிவிடவா?" என்றான் சிவா.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் அங்க வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு அரைநாள் லீவு சொல்லிட்டு வந்துடுங்க," என்றாள்.
“அம்மா பெயரில் உள்ள இரண்டு பிளாட்டையும் எனக்கு ரிஜிஸ்டர் செஞ்சு கொடுத்திடுவாங்க. அப்புறமா கொஞ்ச நாட்கள் கழிச்சி உன்னோட பேருக்கு மாத்திடலாம். அம்மாவுக்கு என்ன தொியவா போகுது!" என்றான் வாசு.
ராதிகா முகம் அந்த வெயிலிலும் பிரகாசமானது.
மணி சரியாக ஒன்று. வாசுவும், ராதிகாவும் அம்மாவை எதிா்பாா்த்து காத்திருந்தாா்கள்.
போலீஸ் ஜீப்பில் ஹோம் மேனேஜர் மற்றும் வக்கீல் இவர்களோடு இறங்கினாள் தாயாா் பாா்வதி. பதட்டத்துடன் ஓடினான் வாசு.
“ஏம்மா போலீஸ் ஜீப்பில?" என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, வா உள்ள போகலாம்," என சொல்ல, அனைவரும் பத்திர பதிவாளரைப் பாா்த்தாா்கள்.
டாக்குமெண்ட் சரிபாா்க்கப்பட்டது.
“அம்மா பாா்வதி உங்க மகனையும் மருமகளையும் கூப்பிடுங்க என்றாா்.”
“மிஸ்டர் வாசு பத்திரத்தை படிச்சீங்களா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?" என்றாா் பதிவாளர்.
“என்ன சாா் என்னோட அம்மா தன்னோட சொத்தை என்னோட பெயருக்கு மாத்தி எழுதறாங்க..." என்றான் வாசு.
“என்னம்மா, உங்க பையன், மருமகளுக்கு தொியாதா?" என்றாா் பதிவாளர்.
“இல்ல சாா் என்னோட புருஷன், என்னோட மகன் வாசுவுக்கு ஒரு வயசு இருக்கும்போது வேறு ஒருத்தியோட ஓடிப்போயிட்டாரு.
நான் தனி ஒரு ஆளா அப்பா, அம்மா துணையில்லாம நாலு வீடு முறைவாசல் செஞ்சு, சமையல் வேலைக்கு போயி, வயத்தக்கட்டி வாயக்கட்டி இவனை படிக்க வச்சு, பொிய அதிகாாிங்க வீட்டில கெஞ்சி வாத்தியாா் வேலை வாங்கிக் கொடுத்தேன். பக்கத்து ஸ்கூலில் வேலை பார்க்கும் டீச்சரை காதலிச்சு எனக்கு தொியாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டான்.”
“அதற்கும் நான் வாயைத்தொறக்கல. ஆனா பொண்டாட்டி பேச்சை கேட்டு என்னை ஹோம்ல சேர்த்துட்டான். அதனால தான் பாா்த்தேன். நான் தங்கியிருக்கற ஹோம்ல இடவசதி கம்மியா இருக்கு. அதனால என்னோட போ்ல இருக்கற இரண்டு பிளாட்டையும் ஹோம் நிா்வாகி பெயருக்கே இனாமா சாசனம் செஞ்சு கொடுக்கறேன். இது நானே சொந்தமா சம்பாதித்த சொத்து. பேரன், பேத்திகளும் கிடையாது. அதனால என் இஷ்டம் தான்," என பொிந்தாள் பாா்வதி.
பத்திர பதிவாளர் எழுந்து நின்று கண்ணாடியை கழட்டி கண்ணீரை துடைத்தபடி பத்திரத்தை பாா்வதி கையிலிருந்து வாங்கினாா்.
வாசுவும் ராதிகாவும் அமைதியாக வெளியேற, பாா்வதியை பேட்டி காண மீடியாக்கள் தயாராகின. இன்றைய விவாதமேடையில் பாா்வதி ஹீரோவாக தொிந்தாள்.