
-ஆர். சுதா
"கொஞ்சம் ஆடாமல் உட்காரேன் லதா. பின்னல் கோணலாப் போகுது பார்" - வசந்தி சற்றுக் கடுமையாகச் சொன்னாள்.
"போங்க அண்ணி! வர்றவன் என் பின்னலைப் பார்க்கவா போறான்? ரவா கேசரியில் முந்திரிப் பருப்பு இருக்கான்னு தேடிட்டிருப்பான்!" என்று சிரித்தாள்.
"போதும். எப்பவும் கிண்டல் பேச்சுதான். எப்பதான் லைஃபை சீரியஸா எடுத்துக்கப் போறியோ?" என்றபடி இரண்டு முழ மல்லிகைப் பூ சரத்தை, அவளது தலையில் சூட்டிவிட்டாள்.
வட்ட வடிவக் கண்ணாடியில் தெரிந்த நாத்தனார் லதாவின் பிம்பத்தை ஏறிட்டாள் வசந்தி.
லதாவுக்கு இந்த ஜனவரியுடன் முப்பது வயது முடிந்து ஆறு மாதங்களாகிவிட்டன. முத்து ஜிமிக்கியாலும், ரோஸ் பவுடர் மேக்கப்பாலும், எவ்வளவு வயசைத்தான் குறைக்க முடியும்? தலைமுடியும் அடர்த்தி குறைந்து, கண்களின் அருகே கருமை எட்டிப் பார்த்ததில், வசந்திக்கு வேதனையாக இருந்தது.
ராஜ்குமாரை மணந்து, வசந்தி அந்த வீட்டுக்கு மருமகளாக வந்தபோது லதா, ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தாள். படிப்பில் படுசுட்டியாக இருந்த லதாவை, வசந்திக்கு ரொம்பவே பிடித்துப்போனது. எப்போதும் புத்தகமும் கையுமாகத் திரிந்தாளே தவிர, வெளியுலகமே தெரியாமல் வளர்ந்திருந்தாள்.
''என் பொண்ணு எல்லாத்துலயும் நூத்துக்கு நூறு!" என்று பெருமையுடன் கர்வப்பட்டார் லதாவின் அப்பா சுகவனம்.
''எவ்ளோ வேணும்னாலும் படிடா! யு.எஸ். ஆஸ்திரேலியா கூட போய்ப் படி நான் படிக்க வைக்கிறேன்!" என்று தங்கையைச் சீராட்டினான் லதாவின் அண்ணன் ராஜ்குமார்.
லதாவின் தாயார் திடீரென்று மரணமடையவே, அந்தச் சோகத்தை மறக்க, பாடப் புத்தகங்களில் அமிழ்ந்து போனாள் லதா.
பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., பி.எச்டி., என முடித்ததும் அந்த ஊரிலேயே பிரபலமாக இருந்த கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. அதன் பிறகு, லதா தனது படிப்பைத் தொடர்ந்தாள். இன்னொரு எம்.எஸ்ஸி., இன்னொரு டாக்டரேட் பட்டம் என்று லதா படித்துக் கொண்டே போனபோது, வசந்தி விழித்துக்கொண்டாள்.
"மாமா... அப்புறமா, லதாவோட படிப்புக்கு ஏற்ற இடம் கிடைக்கிறது ரொம்பச் சிரமமாயிடும். இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடலாம்" என்று சொன்ன கையோடு பரபரப்பாக வரன் தேட ஆரம்பித்தாள்.
லதாவின் ஜாதகக் கட்டை, கையிலெடுத்ததுமே, தடால்னு கல்யாணம் செட்டிலாகி விடும் என்றுதான் சுகவனமும் நம்பினார். "லதாவோட படிப்பென்ன, சம்பளமென்ன? நல்ல மாப்பிள்ளை தானா வரும்." என்று ராஜ்குமாரும் அதிக முனைப்பு காட்டாமல் இருந்தான்.
வசந்திக்குப் பொறுப்பு அதிகமானதில், மண்டை குழம்பியது. ஜாதகம் ஒத்து வந்தால், படிப்பு ஒத்து வரவில்லை. இரண்டும் ஒத்து வந்தால், ஜோடிப் பொருத்தமில்லை.
''இந்த மாப்பிள்ளை குள்ளமா இருக்கான்!" என்று அண்ணன் அபிப்ராயப்பட்டால், "அண்ணா.. துபாய்ல போய் யாரு குப்பைக் கொட்றது ? ஐ கான்ட் லீவ் மை ஜாப்!" என்று உதடு சுழிப்பாள் லதா.
''வெறும் எம்.ஏ. படிச்சிருக்காரே! என் பொண்ணு டபுள் டாக்டரேட் ஆச்சே!" என்று சுகவனம் நிராகரித்தால்,
"என்னைவிட ஒரு அங்குலமாவது உயரமா இருக்கணும். நூறு ரூபாயாவது அதிக சம்பளம் வாங்கணும் அண்ணி!" என்பாள் லதா.
இப்படியே, அது சொத்தை, இது நொட்டை என்று போனதில்,லதாவுக்கு முப்பது வயது முழுசாக முடிந்துபோனது.
"வசந்தியோட நாத்தனாரா? அவளுக்குக் கல்யாணம் பண்ற ஐடியாவே அவங்க வீட்டுல கிடையாது. மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிச்சுத் தர்ற நாத்தனாரை யாராவது கட்டிக் கொடுத்து அனுப்புவாங்களா? சும்மா கண்துடைப்புக்கு இன்னும் இரண்டொரு மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு, லதாவோட கல்யாண ஃபைலையே குளோஸ் பண்ணிடுவாங்க!" என்று ஒரு பெண்மணி, வசந்தியின் காதுபடவே சொல்லிச் சிரித்தாள்.
தனிமையில் ராஜ்குமாரிடம் கண்ணீர் சிந்தினாள் வசந்தி.
''டீ.வி.யில வர்ற லவ் காட்சிகளை, கல்யாணக் காட்சிகளை லதாவோட உட்கார்ந்து பார்க்க முடியலைங்க. நூறு பவுன் நகையைப் பண்ணி வெச்சுட்டா ஆச்சா? அது ஒரு மஞ்சள் தாலிக் கயிறுக்கு இணையாகுமா?" என்று வெடிப்பாள்.
''விடும்மா! அவளுக்குன்னு ஒருத்தன் இனிமேதானா பொறக்கப் போறான்?" என்று சொல்லியோ,
"அதுக்காக? லதாவுக்குப் பிடிக்காத இடத்துல கழுத்தைப் பிடிச்சுத் தள்ள முடியுமா?" என்று ஆதங்கப்பட்டோ கழன்று கொள்வான் ராஜ்குமார்.
இன்றைக்கு பெண் பார்க்க வரும் மணிவண்ணன்கூட வசந்தியின் ஏற்பாடுதான். மணிவண்ணன், வசந்திக்கு ஒரு வழியில் தம்பி முறை. படிப்பு வெறும் பி.காம்.தான். ஆனால் பிரபல அழகு சாதனப் பொருள்களின் மெயின் டீலராக இருக்கிறான்.
"அண்ணி, மணிவண்ணனுக்கு படிப்பு கம்மியா இருக்கே!'' என்றாள் லதா சற்றுக் கவலையோடு.
"உனக்கும் வயசு கம்மியா இல்லையே! தோ... பார் காதோரத்துல நரை!" என்று வெடுக்கென்று கேட்டுவிட்டாள் வசந்தி.
பச்சை நிற சீப்பில் இருந்து உதிர்ந்த முடிகளில், இரண்டு நரைமுடி பளிச்சிட்டது.
அதைப் பார்த்ததும் லதாவின் முகம் சூம்பிப் போனது.
"ஒரு ஸ்பீச்! ஒரு கிஃப்ட்! உங்க நாத்தனார் ஃபணால்!'' என்று மணிவண்ணன் சொன்னது நினைவுக்கு வரவே, முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, லதாவை அலங்கரிக்கத் தொடங்கினாள் வசந்தி.
மணி நான்கு. சரியாக சொன்ன நேரத்துக்கு வந்து இறங்கி விட்டனர் மாப்பிள்ளை வீட்டினர். வெள்ளை நிறச் சட்டை, நீலநிற பேண்ட், மெல்லிய ஃப்ரேமிட்ட கண்ணாடி, 'பஃப்' என்று தூக்கி வாரிய க்ராப். சுறுசுறுப்பான நடை, மலர்ந்த முகம் என்று உள்ளே நுழைந்தான் மணிவண்ணன்.
"ஏகப்பட்ட நிலம் நீச்சுன்னு இருந்தாலும், பிஸினஸ்ல முன்னுக்கு வந்ததுக்குப் பிறகுதான் கல்யாணம்னு பிடிவாதமா இருந்துட்டான். அதான் முப்பத்து மூணு வயசாயிடுச்சு. மற்றபடி கல்யாணம் தள்ளிப் போனதுக்கு ஒரு காரணமும் இல்ல!" என்றார் மணிவண்ணனின் அப்பா.
"அந்த விஷயம் எங்களுக்கும் தெரியுமே!" என்றார் சுகவனம். காப்பித் தட்டு எல்லாம் கொண்டு போக மாட்டேன் என்று அடம்பிடித்த லதா, மெள்ள வெளியே வந்து பொதுவாக 'வணக்கம்' சொன்னாள். மணிவண்ணனுக்கு நேரெதிரே அமர்ந்தாள். சிறு சிறு பேச்சுக்குப் பின், ''மிஸ் லதா, உங்களுடன் கொஞ்சம் தனியாகப் பேசணும்!" என்றான் மணி வண்ணன் .
அவனுடைய உயரம், மிடுக்கான தோற்றம், அதிரடிச் சிரிப்பு போன்றவற்றால் கவரப்பட்டிருந்த லதா, "வொய் நாட்?" என்று எழுந்துகொண்டாள்.
"அவரை உன்னோட அறைக்குக் கூட்டிக்கிட்டுப் போம்மா!" என்றாள் வசந்தி கனிவுடன்!
இருபது நிமிடம் கழிந்தது. மாடியிலிருந்து இறங்கி வந்த லதாவின் முகத்தில் புதியதொரு மகிழ்ச்சி. மணிவண்ணனும் உற்சாகமாகவே தென்பட்டான்.
அவர்கள் புறப்பட்டுப்போன, ஒரு மணி நேரத்தில் லதாவும், மணிவண்ணனும் தத்தம் சம்மதத்தை தங்கள் வீடுகளில் தெரிவித்து மகிழ்ந்தனர். லதாவின் அப்பா சுகவனம், ஆனந்தக் கண்ணீர் மல்கினார்.
"குட் சாய்ஸ் லதா!" என்று கைகொடுத்தான் ராஜ்குமார். வசந்தியிடம் மட்டும் லதா பேசவில்லை. உள்ளுக்குள் கோபம். நரைச்ச முடியை எடுத்துக் காட்டிவிட்டாளே என்று!
பின் அப்பா சுகவனம், ஆனந்தக் கண்ணீர் மல்கினார்.
"குட் சாய்ஸ் லதா!" என்று கைகொடுத்தான் ராஜ்குமார். வசந்தியிடம் மட்டும் லதா பேச வில்லை. உள்ளுக்குள் கோபம். நரைச்ச முடியை எடுத்துக் காட்டிவிட்டாளே என்று!
வசந்தி கவலைப்படவில்லை. மணிவண்ணனை ஃபோனில் அழைத்தாள்.
"டேய் தம்பி! என்ன செஞ்சுடா அந்தப் பிடிவாதக்காரியைக் கவிழ்த்தே?"
"ஒரு ஸ்பீச்! ஒரு கிஃப்ட்! அதான் சொன்னேனே அக்கா!"
"போதுண்டா உன் புதிரு! சொல்லித் தொலை!"
"லதா.. டபுள் டாக்டரேட். காலேஜ் புரொஃபஸர்.. எல்லாம் ஓகே! உன் படிப்பு ஆர்வத்துக்கு இன்னும் நாலைஞ்சு டிகிரிகூட வால் போல சேர்த்துக்கலாம். ஆனா, 'மிஸஸ் லதா, ', 'அம்மா' இந்த இரண்டு பட்டங்கள் மட்டும் எந்த சர்வகலாசாலையிலும் கிடைக்காது. அந்த இன்பம் தரும் பட்டங்களைப் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட வயசும் இருக்கு. இந்த அழகான பட்டங்களை இப்ப தவற விட்டுட்டு, நீங்க எவ்ளோ தூரம் பறந்தாலும் அதெல்லாம் காகிதப் பட்டங்களே!"ன்னு சொல்லி நிறுத்தினேன்.
"அப்புறம்?"
"அவளுக்கு முகமெல்லாம் சிவந்து போச்சு. எதையோ சொல்ல வாயெடுத்தா. நான் உடனே, "என்னை உங்களுக்குப் பிடிக்காம போயி, நிராகரிக்கலாம். நோ ப்ராப்ளம்! அதுக்கும் ஒரு பரிசு தரப் போறேன்”னு சொல்லிட்டு..."
"அடப்பாவி... என்னடா செஞ்சே?'' சுவாரஸ்யமாகப் பதறினாள் வசந்தி.
"எங்கக் கம்பெனியோட ஹேர்டை! உங்களுக்குப் பயன்படும்னு சொல்லி ஒரு புட்டியை நீட்டிட்டேன்!"
"அய்யோ! அதுக்குதானா நீ லதாவோட சீப்புல, என்னோட நரைமுடியை நைஸா சுத்தி வெக்கச் சொன்னது?"
"ஒரு ஸ்பீச்! ஒரு கிஃப்ட்! ஒரு மேரேஜ்! எப்படி?"
'தம்ம் ... பிடா!" என்றாள் வசந்தி சிரித்துக்கொண்டே.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் டிசம்பர் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்