
இன்னம் இருபது நாட்களில் பிரபாவிற்கு வளைகாப்பு. நினைக்கும்போதே, வயிற்றில் புளியைக் கரைத்தது விசாலத்திற்கு. என்ன செய்வதென்ற யோசனையில் வீட்டு வாயிலில், மோட்டுவளையைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கையில், தபால்காரர் ஒரு கவரைப் போட்டு சென்றார். விசாலம் கவனிக்கவில்லை. சற்று நேரம் சென்று பார்க்கையில், அந்த கவரின் அனுப்புவோர் இடத்தில் பிரபா என்றிருந்தது.
இதுவரை பிரபா கடிதம் எழுதியது கிடையாது. இப்போது எதற்காக? ஆசையாக ஏதாவது வேண்டுமென்று எழுதியிருப்பாளோ? அப்படி இருந்தால்! இப்போதைக்கு அந்த கவரைப் பிரிக்கவே வேண்டாம். அப்படியே எடுத்து அலமாரி மேல் தட்டில் வைத்தாள்.
பிரபாவிற்கு இது தலைப்பிரசவம். வளைகாப்பு செய்யவேண்டும். ரங்கநாதன் உயிரோடு இருக்கையிலேயே, மூத்த இரண்டு பெண்களுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்து, குழந்தை-குட்டிகளுடன் தங்கள் வாழ்க்கையை சிரமமின்றி நடத்திக் கொண்டிருப்பதால், பிரச்சினை இல்லை. பிரபா மூன்றாவது பெண். மற்ற பெண்களை விட லட்சணமாகவும், துறு-துறுவெனவும் இருப்பாள்.
ரங்கநாதன் இருந்தவரை கவலையற்று இருந்த விசாலத்திற்கு, இப்போது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. வசிப்பதற்கு வீடும், வயிற்றுப் பாட்டிற்கு கொஞ்சமும் வைத்துப் போயிருந்தார். தெரிந்தவர்கள் மூலமாக பிரபாவிற்கு வந்த வரனை, இருந்ததை வைத்து கல்யாணத்தை செய்து வைத்தாள். மாப்பிள்ளை ரமேஷ் மிகவும் நல்ல மாதிரி. பிக்கல் பிடுங்கல் கிடையாது.
இப்போது ப்ரபாவிற்கு வளைகாப்பு. சற்றே யோசித்து ஒரு முடிவிற்கு வந்த விசாலம், தன்னிடம் மிஞ்சியிருந்த சில நகைகளை அடமானம் வைத்து பணம் வாங்கி, வளைகாப்பிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டாள். இரண்டு பெண்களும் கணவர்கள் சகிதம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து விட்டனர். வீடு களை கட்டியது. ப்ரபாவும் கணவன் ரமேஷும் இரண்டு பெரிய பெட்டிகளுடன் வந்தனர்.
அப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து அனைவருக்கும் புது உடைகள், மற்றும் இனிப்பு ஆகியவைகளை அளித்தனர்.
எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
கணவன் ரமேஷிற்கு பதவி உயர்வு, அதிக சம்பளம், கார், பெரிய வீடு கிடைத்திருப்பதை, தாயார் விசாலம் மற்றும் சகோதரிகளிடையே மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டாள்.
வளைகாப்பை நன்றாக நடத்திய விசாலம், தான் வாங்கி வைத்திருந்ததை பெண்கள், மாப்பிள்ளைகளுக்கு கொடுத்து உபசரித்து வழியனுப்பி வைத்தாள். நகை அடமானம் பற்றி மூச்சு விடவில்லை.
ஒரு உத்வேகத்தில் கையிலிருந்த நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 50,000/- வாங்கி செலவழித்தாகிவிட்டது. அவைகளைத் திரும்பப் பெற முடியுமா? ப்ரபாவிற்கு பிரசவம் வேறு பார்க்க வேண்டும். இட்லி வியாபாரம் ஏதாவது ஆரம்பிக்கலாமா? பெண்கள் என்ன சொல்வார்கள்? மண்டை காய்ந்ததுதான் மிச்சம். கவலையுடன் நாட்களைக் கடத்தினாள்.
20 நாட்கள் சென்றிருக்கும். மாப்பிள்ளை ரமேஷ் வந்தான்.
காஃபி குடித்த பிறகு, "அத்தே! ப்ரபா உங்கள் பெயருக்கு கவர் ஒன்று அனுப்பியிருந்ததை திறந்து பாத்தீங்களா? மெதுவாக ரமேஷ் கேட்கையில்தான், விசாலத்திற்கு அந்த கவர் ஞாபகம் வந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. "மறந்து போச்சு. பாக்கலை!" என முணு முணுத்தாள்.
"இப்படி மறக்கலாமா அத்தே! அந்த கவரைக் கொண்டு வாங்க!" என்றான். விசாலம் பதிலளிக்காமலிருக்க, "சரி! நான் புறப்படறேன். கவரைத் திறந்து பார்த்து ஆகவேண்டியதை செய்ங்க!"
அந்த கவரை எடுத்து பிரிக்கையில், ஒரு கடிதமும், செக்கும் கீழே விழ, கடிதத்தை எடுத்து படித்தாள் விசாலம். அதில்...........
"அன்புள்ள அம்மாவிற்கு, நம் வீட்டு நிலைமை ரமேஷிற்கும் தெரியும். அவர் உங்களுக்கு மாப்பிள்ளையானாலும், மகன் மாதிரி தான். அவருக்கு உங்கள் மீது அதீத மரியாதை. நாங்களே வளைகாப்பு விசேஷத்திற்கு தேவையானவைகளை வாங்கி வருகிறோம். கவலை வேண்டாம். செலவிற்காக இத்துடன் ரூபாய் 50,000/- க்கு செக் வைத்துள்ளேன். உபயோகித்துக் கொள்ளவும். ரமேஷிற்கும் இது பற்றி தெரியும். உங்கள் நல்லாசியினாலும், கடவுள் கிருபையாலும், வாழ்க்கை நல்லபடியாக ஓடுகிறது. பிரசவ செலவு குறித்து யோசிக்காதீர்கள். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எத்தனையோ இடர்களுக்கு நடுவே பாடுபட்டு எங்களை வளர்த்தீர்கள். உங்கள் நிம்மதிதான் எங்களுக்கு முக்கியம்."
அன்புடன் உங்கள்
கடைக்குட்டி ப்ரபா
விசாலம் கண்களிலிருந்து அவளையறியாமலேயே கண்ணீர் துளிக்க, செக்கை ஸ்வாமி பாதங்களில் வைத்தாள்.