
-வி. காயத்ரி
'வலது காலை எடுத்து வைச்சு, உள்ளே வாம்மா," என்றாள் மதுரம். திருமணம் முடிந்து வரும் மகன் விக்னேஷையும், மருமகள் வித்யாவையும் மதுரமும், அவள் கணவர் வேங்கடமும் உள்ளே வரவேற்றனர். வித்யாவின் தந்தை சபேசனும், தாய் பங்கஜமும் பின் தொடர்ந்தனர். வித்யாவைப் பூஜை அறைக்கு கூட்டிச் சென்றாள் மதுரம் "குத்து விளக்கை ஏற்றம்மா," என்றாள். சிறிது நேரத்துக்குப் பிறகு வித்யாவின் பெற்றோர் விடை பெற்றுச்சென்றனர்.
வித்யா வீட்டுக்கு ஒரே பெண். குழந்தையிலிருந்து தனியாகவே 'வளர்ந்ததால், எங்கு திருமணத்துக்கு பிறகு அவள் புகுந்த வீட்டாரை அனுசரித்துக்கொள்ளாமல் போய்விடுவாளோ என்ற ஒரு சிறிய அச்சம் பங்கஜத்தின் மனத்தில் இருந்து வந்தது. இதனாலேயே நிச்சயத்துக்கு பின் வித்யாவுக்கு அறிவுரை கூறுவதை ஒரு தினசரி வேலையாகவே வைத்துக்கொண்டிருந்தாள். வித்யாவும் தன் தாயின் மனம் நோகக்கூடாது என்று பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
வித்யாவுக்கு சம்சாரமான குடும்பத்தில் வாழ ரொம்ப இஷ்டம். அவளுக்குக் கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்று வருத்தம். புகுந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடனேயே விக்னேஷின் குடும்பத்தாரை தனது குடும்பத்தாராக மனத்தில் ஏற்றுக்கொண்டாள். "அண்ணி வாங்க, என் ரூமைக் காட்டறேன்" என்று வித்யாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள் அனு, விக்னேஷின் தங்கை.
ஒரே வாரம்தான். வித்யாவுக்கு அந்த வீட்டின் நித்திய வேலைகள் மிகவும் பழகிவிட்டன.
''ஏங்க, வித்யா ரொம்ப நல்ல பொண்ணுங்க. எல்லாம் பார்த்து பார்த்துச் செய்யறா. என்னையும் எதையும் செய்ய விடறதில்லே" என்ற மதுரத்தைப் பார்த்து, "உன்னையே திருப்தி படுத்திட்டாளா! என் மருமக புத்திசாலிதான்" என்று ஏளனமாகக் கூறினார் வேங்கடம்.
அன்று மாலை வித்யாவும், விக்னேஷும் ஒன்றாக ஆபிஸிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தனர். வந்ததும் கிச்சனுக்கு சென்ற வித்யா,"ஏம்மா, நான் வைத்த உப்புமாவை சாப்பிடலையா?" என்று கேட்டபடியே வெளியே வந்தாள். "எப்படிச் சாப்பிடறது! அதில்தான் நீ வெங்காயத்தைப் போட்டிருக்கியே. செவ்வாய்க்கிழமை, நான்தான் விரதம்னு சொன்னேனே, மறந்துட்டியா?" என்று மதுரம் கேட்க, "ஐயோ! ஸாரிம்மா.... மறந்தே போய்ட்டேன்" என்று பதறினாள். "ரொம்பச் சின்ன வயசுக்காரி நீ! மறதி மன்னியா இருக்கியே!'' என்றாள் மதுரம் சலிப்பான குரலில்...
இதையனைத்தையும் கேட்டுக்கொண்டே சோபாவில் அமர்ந்திருந்த விக்னேஷ், ''ஏம்மா! ஓவரா பண்றே, விரதம் ஒருநாள் அனுசரிக்கலைன்னா என்ன?" என்று கூறியவாறே ரூமுக்குச் சென்றான்.
அவனைப் பின்தொடர்ந்த வித்யா, ''நீங்க எதுக்கு இந்த விஷயத்துல தலையிட்டிங்க?" என்று கேட்டாள்.
"இதென்ன கேள்வி? நீ கஷ்டப்பட்டு செஞ்சு வச்சுட்டுப் போற, அதைக் குறைசொல்றது சரின்னு படல. அதனாலதான் சொன்னேன். எங்கம்மாவ சொல்ல எனக்கு உரிமையில்லையா என்ன?" என்று கேட்டபடியே டையைக் கழற்றினான்.'
"இந்த இடத்தில் யாருக்கு யார் மீது உரிமை என்பது பிரச்னையில்லை. ஒரு மாமியாருக்கும், மருமகளுக்கும் சிறிய விஷயங்கள் எல்லாம் பெரிய வாதமாக மாறுவதற்குக் காரணமே அந்த மகன் தலையிடும்பொழுதுதான்.
''பொதுவாகவே ஒரு தாய்க்கு உள்ள அச்சம், எங்கே மருமகள் வந்தவுடன் தன் மகன் மீது உள்ள உரிமை குறைஞ்சுடுமோங்கிறதுதான். இது மாதிரி சாதாரண விஷயங்கள்ல நீங்க தலையிட்டு எனக்குப் பரிஞ்சு பேசினீங்கன்னா, அவங்களுக்கு உங்க மேல வர்ற கோபம் என் மீது வெறுப்பா மாறிடும். அது நம்ப யாருக்குமே நல்லது இல்ல!" என்றாள் வித்யா. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் உறைந்தான் விக்னேஷ்.
என்ன ஆச்சரியமா பார்க்கறீங்கா உறவுகள் நதிகளைப் போலதான் அனைத்து நதிகளும் ஒன்று சேரும் கடல்தான் ஒரு அழகான குடும்பம். எப்படி ஒரு கல் எரிந்தால், அந்த நதியில் ஒரு சலசலப்பு ஏற்படுகிறதோ அதுபோலதான் ஒரு உறவுக்குள் அதற்கு அப்பாற்பட்டவர் நுழையும்பொழுது பிரச்னைகள் வரும். ஒத்துமையா வாழறது கஷ்டமேயில்ல. அவங்கவங்க இடத்தைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால்..." என்றாள்.
அவள் பேச்சைக் கேட்ட விக்னேஷ், மெய்மறந்து நின்றான், "வித்யா குட்டி, எனக்கு ஒரு சந்தேகம். பி.இ படிக்கும் பொழுது சைட்ல ஏதாவது சைக்காலஜி கோர்ஸ் படிச்சியா என்ன?" என்று அவளது கன்னத்தைத் தட்டினான். அதற்கு விடையாக அழகிய புன்னகையை ஃப்ளாஷ் செய்துவிட்டு அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டாள்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்