
-சுகி சிவம்
மாற்றங்களை மறுக்காதீர்
எத்தனை வயதானால் முதுமை என்று யாராவது சொல்லமுடியுமா? வயதுக்கும் முதுமைக்கும் அதிக சம்பந்தமில்லை. மாற்றங்களை எப்போது நம் மனம் மறுதலிக்கிறதோ... மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இறுகிப்போகிறதோ... அப்போது அந்தக் கணத்திலிருந்து நம் முதுமை ஆரம்பம் ஆகிவிட்டது. மாற்றங்களுக்காக ஏங்குவது இளமையின் உயிர்ப்பு. மறுப்பது முதுமையின் சலிப்பு. இதற்கும் வயதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
உலகத்தில் எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிறது. தண்ணீர் காசுக்கு விற்கப்படுகிறது. கோயில்களில் சாமி பார்க்க டிக்கெட் கொடுக்கப்பட்டு, காசுக்கேற்ற தொலைவில் மக்கள் நிறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பூப்போட்ட வண்ண வண்ண சட்டை போட்டுக் கொள்கிறார்கள். வெள்ளை நிறப் புடைவைகளைச் சுமங்கலிப் பெண்கள், விருப்பமுடன் கட்டிக் கொள்கிறார்கள். கோயில் கருவறைகளில்கூட வீட்டுவிலக்கான பெண்கள் பூஜை செய்யலாம் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆணும் பெண்ணும்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சட்டமோ சமூகமோ கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றங்கள் உதடு திறந்துவிட்டன.
குழந்தைகளின் பள்ளிக்கூட வசதிக்காகப் பெற்றோர்கள் வீடு மாறவும் வேலை மாறவும் ஊர் மாறவும்கூட தயாராகிவிட்டார்கள். 'பேக்கரி ரொட்டி ஆஸ்பத்திரி அயிட்டம்' என்பதிலிருந்து சம்பாதிக்கும் தம்பதியரின் சரியான சாப்பாடு என்று பதவி உயர்வு பெற்றுவிட்டது. தினை, கம்பு, சோளம் என்பவை வறுமையாளர்கள் வயிறு நிரப்பும் தானியங்கள் என்ற அவமானம் நீங்கி பணக்காரர்களின் சர்க்கரை கொழுப்பை, சமன் செய்யும் சகா என்று வெகுமானம் பெற்றுவிட்டது. கணினி சங்கீதம் வாசிக்கிறது. அறுவை சிகிச்சை செய்கிறது. ஃபிலிம் இன்றியே கேமரா புகைப்படம் எடுக்கிறது. அழிக்கிறது. யாரை வேண்டுமானாலும் அழகாக்கிக் காட்டுகிறது.
ஆக, நல்லதும் கெட்டதுமாக, அல்லது நல்லது கெட்டது என்றெல்லாம் எதுவுமில்லை என்பதாக ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. மாறிக்கொண்டே இருப்பதுதான் மாறாத விதி என்பதை உலகம் உச்சரித்துக்கொண்டேயிருக்கிறது.
மாற்றங்களை மறுப்பவர்களை உலகமே மறுத்துவிடுகிறது. இந்த நிலையில் மாற மறுத்தால் முதுமை சுமை. மாறாவிட்டாலும் மாற்றங்கள் இயல்பானவை, தவிர்க்க முடியாதவை என்பதை ஒப்புக்கொண்டு விட்டால் முதுமை மற்றொரு வாழ்க்கை. அல்லது வாழ்வின் இன்னொரு பக்கம்.
வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமர் பதவி முடிந்து ஓய்வில் வீட்டில் இருந்த காலம். தோட்ட வேலையைப் படுகுஷியாகச் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்க்க வந்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது பதவியில் இருந்த பிரதமரின் நிர்வாகம் பற்றி ஏதோ ஒரு கேள்வி கேட்டார். வின்ஸ்டன் சர்ச்சில் சிறிது யோசித்துவிட்டு, "இதோ பாருங்கள்... இப்போது எனக்கு இரண்டே இரண்டுதான் தெரியும். ஒன்று தோட்டக் கலை... மற்றொன்று பைபிள்... இவை இரண்டையும் மிக ஆர்வமாகப் படிக்கிறேன். நடைமுறைப்படுத்துகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். அவற்றில் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்... சொல்லுகிறேன். இப்போது யார் பிரதமர்? என்ன நடக்கிறது? என்ன சட்டம் போட்டார்கள்? என்ற முட்டாள்தனமான விஷயங்களில் எனக்கு எந்த அக்கறையும் இல்லை" என்றார். நம்ப முடிகிறதா?
முதுமை துன்பம்
மருமகளுக்குப் பேரன் பிறந்த பிற்பாடும் மருமகள் என் பேச்சைக் கேட்டால் என்ன என்று புலம்பும் பாட்டிமார்களுக்கும் பக்குவம் வர வேண்டும்.
மருமகளுக்குச் சமைக்கத் தெரியவில்லை என்று புகார் சொல்வதைவிட்டு விட்டு, சம்பாதிக்கத் தெரிகிறதே என்று வியக்கலாம். இன்று சமையலே அவசியமில்லை என்றாகிவிட்ட பிறகு சமையல் தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன?
'அந்தக் காலத்துல நான் பண்ணின பருப்புசிலி மோர்க் குழம்பு, மாதிரியா இருக்கு... இவ பண்றது' என்று மகளையோ பேத்தியையோ ஆராய வேண்டாம். அந்தக் காலத்து ருசிமிக்க பருப்பு, புளி, வெல்லம், ஏன் தண்ணீர் இவை எதுவுமே இந்தக் காலத்தில் இல்லை. பருப்பு பருப்பாக இல்லாதபோது பருப்பு சிலி மட்டும் பழைய காலத்துப் பருப்பு சிலியாக வருமா என்ன? எல்லா ஊர்களிலும் ரசாயனம் மாறிவிட்டது! நாம் மட்டும் மாற மறுத்தால் நமது இருப்பிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது.
வயதாக வயதாக மறதி மறக்காமல் வந்துவிடும். பாத்ரூம் போய்விட்டுத் தண்ணீர் ஊற்றாமல் வந்திருப்போம். கை மறதியாகக் கண்ணாடி, பத்திரிகை, சில்லறை ரூபாய்களை எங்கெங்கோ வைத்துவிடுவோம். மருந்து சாப்பிட்டோமா இல்லையா என்பதுகூட ஞாபகம் வராது. ஏன் காப்பி கொடுத்ததுகூட நினைவில் இருந்து வழுக்கி இருக்கும். இவை இயற்கையின் பரிசுகள். இதை முற்றிலும் மறந்துவிட்டு பிறரைக் குற்றம் சொல்வது, தன் ஞாபக திறனைத் தானே பாராட்டிக்கொண்டு வேலைக்காரியைத் திருடி என்பது, தன்னைப் புறக்கணிப்பதாக அவமதிப்பதாகப் புலம்புவது - தவறு முதுமை வேறு... முதிர்ச்சி வேறு. முதுமை துன்பம். முதிர்ச்சி இன்பம். அது பக்குவத்தின் அடையாளம்.
எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரும்!
மற்றவர் என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கால அட்டவணை போடும் முதியவர்கள் துக்கத்திலிருந்து மீளவே முடியாது. அதேபோல் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் தன் ஆட்சிக் காலத்தில் வீடு நடந்ததுபோலவே இப்போது நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றம் தரும். Priority என்கிற முன்னுரிமை உங்களிடமிருந்து அடுத்த மற்றும் அதற்கும் அடுத்த தலைமுறைக்கு மாறி இருக்கும். எட்டு மணிக்கு இரண்டாவது காப்பி குடித்த உங்கள் முப்பதாண்டுக்கால பழக்கம் எட்டு பத்தானதும் உங்களைக் கோபமடையச் செய்யும். ஆனால் 8.15க்குள் பிள்ளையைப் பள்ளியில் கொண்டுவிடும் உங்கள் மருமகளுக்கு உங்கள் இரண்டாம் காப்பி முன்னுரிமைக்குரிய முக்கிய பிரச்னை அல்ல. இரண்டாம் காப்பியை விட்டால் நீங்க புத்திசாலி. முதல் காப்பியையே விட்டால் ஞானி. எட்டுக்கோ எட்டரைக்கோ கிடைத்தாலும் எப்போது கிடைத்தாலும் குடித்துக்கொண்டால் நீங்கள் சாமர்த்தியசாலி. விடமாட்டேன் என்றால் உங்களை அவர்கள் விடவேண்டி வரும்! மற்றவர் கோணத்தில் இருந்து பிரச்னையைப் பார்ப்பது முதிர்ச்சி. தன் கோணத்தில் இருந்து மட்டுமே பார்ப்பது முதுமை!
நீங்கள் எந்த மகன் அல்லது மகள் வீட்டில் தங்கியிருக்கிறீர்களோ அவர்களைப் பற்றிய குறைகளை வந்த மகன் அல்லது மகளிடம் சொல்வதைத் தயவு செய்துவிடுங்கள். அதன் மூலம் உங்கள் அஸ்திவாரத்தை நீங்களே அசைக்கிறீர்கள். பிடிக்கவில்லை என்றாலும் அவர்களைப் பற்றி பேசுவதையே தவிர்த்துவிடுங்கள். அதுதான் சிறந்தது.
முதுமையும் அழகானதே!
தனக்கு வயதாகிவிட்டது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பது நரகம். இளைஞர்கள் செய்யும் ஒப்பனைகள், செயல்கள், சேட்டைகள், உடை அலங்காரங்களை நானும் செய்வேன் என்பதன் மூலம் நீங்கள் கேலிப்பொருளாகி விடுவீர்கள். அப்படி இருக்க முடியவில்லையே என்று ஏங்குவது முதுமை. அப்படி இருக்கமுடியாது. கூடவும் கூடாது என்கிற விவேகமே முதிர்ச்சி. இளமையை, அழகை இழக்கிறோமே என்கிற பயமே அவசியமற்றது. முதுமையும் அழகானதே! அதன் சாந்தம் கம்பீரமானது.
இளமையானவர்களால் எப்போதுமே சுலபமாகப் பிறரது கவனத்தைக் கவரமுடியும். முதியவர்களால் அது முடியாது. அதனால் முதியவர்கள் எப்போதும் தங்களது அசெளகர்யங்களை வெளியிட்டு பிறர் கவனத்தை ஈர்க்க நினைப்பார்கள். பிறரது கவனத்தை ஈர்த்து எனக்கென்னாகப் போகிறது என்று தெளிந்து தனிமையின் ஆனந்தத்தை உணரப் பழகிவிட்டால் முதுமை தெய்விகம் ஆகிவிடும். கடவுள் தனியாகத்தானே இருக்கிறார். அப்படி நாமும் தனிமையை இன்பமாக்கிக்கொண்டால் முதுமை பாரம் அல்ல... பரம்...
ஓவியத்தின் கடைசி தீட்டல் முதுமை!
ஓர் ஒவியம் எப்போதுமே கடைசி ஒன்றிரண்டு கோடுகளால் அல்லது தூரிகையின் தீட்டுதலால் பளிச்சென்று உயிர் பெற்றுவிடும். கோயிலில்கூட சாமி சிலைக்குக் கடைசி கட்டமாகத்தான் சிற்பி கண் திறப்பு என்கிற கடைசி தீட்டல் கொடுப்பார். அதுபோல் வாழ்வு என்ற ஓவியத்தின் கடைசித்தீட்டல் முதுமை. அதை அழகாக மிக மிக அழகாகச் செய்ய முயல்வதே மனமுதிர்ச்சி அறிவு முதிர்ச்சியின் அடையாளம். வயதாவது வேறு. வளர்ச்சிவேறு. முதுமை வயதாவதன் அடையாளம் இல்லை. வளர்ச்சியின் அடையாளம். வயதானால் தளர்ச்சி. வளர்ந்தால் மகிழ்ச்சி... இது இயற்கையின் இரகசியம். நான் படித்த ஒரு பொன்மொழி: 'வயதாகிவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள். இப்படி வருத்தப்படுகிற வாய்ப்பே பலருக்குக் கிடைப்பதில்லை என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்' என்ன அழகான அனுபவ மொழி பாருங்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஐம்பதுக்குப் பிறகு கிடைக்கும் ஒவ்வொரு வருடமும் போனஸ். அறுபதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் போனஸ்... எழுபதுக்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் போனஸ்... எண்பதுக்குப் பிறகு ஒவ்வொரு மணித் துளியுமே போனஸ்தான்!
தியாகத்துக்குக் கணக்கு எதற்கு?
பெரியவர்கள் நிச்சயம் பெரியவர்கள்தான். கண்டிப்பாக அவர்கள் குடும்பத்துக்காக, ஏகப்பட்ட தியாகங்களைச் செய்திருப்பார்கள். நிச்சயம் அவர்கள் எத்தனையோ சுகங்களை, நன்மைகளை, இழந்திருப்பார்கள். சந்தனம் போல் தங்களை இழைத்துக் கரைத்து தங்கள் வாரிசுகளை மணக்க வைத்திருப்பார்கள். இவை எல்லாமே உண்மைதான்.
ஆனால், இத்தனை தியாகங்கள் செய்த அவர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் தியாகம் செய்ய மாட்டார்கள். நான் தியாகம் செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தை அவர் தியாகம் செய்யாதவரை அவர்கள் துன்பங்களிலிருந்து துக்கங்களில் இருந்து விடுதலை அடைய முடியாது. தியாகம் செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தைத் தியாகம் செய்துவிட்டால் பிறகு எல்லாமே இன்பம்தான்.
எந்தத் துறவியாவது நான் பொன்னை விட்டேன், பொருளை விட்டேன், மாட மாளிகையை விட்டுவிட்டு வந்தேன் என்று வருபவர் போகிறவரிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானா? சொன்னால் அதெல்லாம் அவனுக்குள் அப்படியே இருக்கிறது என்றுதானே அர்த்தம்? காய் கனியாகவில்லை என்பதுதானே உண்மை. பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒருவன் வந்து உங்களுக்கு என் காணிக்கை ஆயிரம் பொற்காசுகள் என்று வைத்தான். நிஜமாகவே எனக்கு இவை தரப்பட்டனவா என்றார். ஆம் என்றான். அப்படியானால் இதைக் கொண்டுபோய்க் கங்கையில் கொட்டி விட்டுவா என்றார். அந்த மனிதனால் அது முடியவில்லை. வேதனையோடு ஒவ்வொன்றாகத் தடவித் தடவி ஆற்றில் போட்டான். பின்னால் வந்த ராமகிருஷ்ணர் 'முட்டாளே பணத்தைச் சேகரிக்கும்போது எண்ணிக்கொள்வது நியாயம். தியாகம் செய்யும்போது ஏன் எண்ணுகிறாய்? தியாகத்துக்குக் கணக்கு எதற்கு?' என்றார். தியாகத்தின் கணக்கை துறந்தால் நீங்களும் துறவிகள்தான்.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்