
-ஜூலியட்ராஜ்
அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து மனம் துவண்டுபோனது. என்ன கொடுமை இது? எனக்கே கண்மூடி உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. அந்தக் குடும்பம் என்னக் கஷ்டப்படப் போகிறதோ... தெய்வமே!
ரோகிணி முதலில் ரத்தினத்தைப் பற்றி சொன்னது என் நினைவுக்கு வந்தது. ரத்தினத்தின் மகள் கீதா, என்னுடைய பெண் ஹேமாவோடு ஒரே வகுப்பில் படிப்பவள். அன்று அவள் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, எதிரில் வந்த ரத்தினத்தைப் பார்த்துப் புன்னகைத்த ரோகிணி, எனக்கும் அவரை அறிமுகப்படுத்தினாள். "இவர் என் கணவர் மணி. நீங்க எப்படியிருக்கீங்க? கீதா, உங்கள் மகளா? ஹேமா அடிக்கடிச் சொல்வா" என்று சம்பிரதாயமாகப் பேசினாள்.
நான் சாதாரண நிகழ்வாக அதை மறந்துவிட, இரவு தனிமையில் விளக்கை அணைத்துவிட்டு ரோகிணி சொன்னது, எனக்கு இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது.
"என்னங்க... இன்னைக்கு நாம் பார்த்தோமே ரத்தினம்... அதாங்க எங்க ஊர்க்காரர்னு சொன்னேனே..''
"ம்... கீதா அப்பாதானே?"
"ஆமாங்க. அவரைத்தான் நான்... நாங்க ரெண்டு பேருமே, நம்ம கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தருக்கொருத்தர் விரும்பினோம்...'' என்றாள்.
என்ன சொல்வது என்று தோன்றாமல் அமைதியாகயிருந்தேன். என் மெளனம் அவளைப் புண்படுத்தியிருக்க வேண்டும்.
"ஏங்க அமைதியாயிருக்கீங்க? கோவமா... நான் உங்கக்கிட்ட உண்மையாயிருக்கணும்னு நினைக்கறேன். அது தப்பாங்க..." என்றவள், இன்னும் குரலை மென்மையாக்கியபடி, "ஏன் இவ்வளவு நாள் சொல்லலேன்னு நினைக்கறீங்களா... அது முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சிருந்தேன். அவரை திடீர்னு எதிர்ல பார்த்ததும், உங்கக்கிட்டச் சொல்லணும்னு தோணிச்சு... நாளைக்கு யார் மூலமாவது தெரிய வரக்கூடாதுன்னுதான்..." என்று பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
மெள்ள அவள் கரத்தைப் பற்றிக்கொண்டேன். அவள் படபடப்பு நிச்சயம் அடங்கிப் போயிருக்கும். ''ரோகிணி, நான் ஏதாவது நினைப்பேன்னு பயப்படறியா? நம்ம கல்யாணத்துக்கு முன்னே நடந்ததெல்லாம் எனக்கு எப்படிச் சொந்தமாகும்? நீ சாதாரணமாயிரு. நம்மை பொறுத்த வரை ரத்தினம் உங்க ஊர்க்காரர். அவ்வளோதான், என்றேன்.
இரண்டு நாட்கள் மன தடுமாற்றத்தோடு தெரிந்த ரோகிணி, பின் சகஜமானாள். எதிரில் ரத்தினத்தைப் பார்த்தால் பரஸ்பரம் புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம்.
ஆஃபிஸ் விட்டு, பேருந்தில் ஏறி வீடு திரும்பும்போது மனம் அலை பாய்ந்தது. இனி என்ன செய்யணும்! என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏதாவது செய்தாக வேண்டும். காதல் என்பதும் ஒரு பந்தம்தான். தோற்றுப் போனாலும் மனதுக்குள் உறங்கிடும் பந்தம். அதற்கும் வலியும் உயிரும் உண்டு. இதெல்லாம் இப்போது என் மனத்தில் தோன்றியது.
வீடு திரும்பும்போதே என்ன செய்வதென்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டேன். ரோகிணி, வாசலில் கொடியில் காயவைத்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டால் கண் கலங்குவாளா... நிஜத்தைச் சொல்லவே இருட்டைத் தேடியவளாயிற்றே...
"என்ன சார், ஏதோ தீவிர யோசனையில் வர்றீங்க... எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறீங்க?" என்றாள் உற்சாகமாகத் தோளைத் தட்டியபடி.
மேசைமேல் கைப்பையைப் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன்.
"ரோகிணி, நான் வெளியூர் போகணும்..."
ஏன்? என்றாள் விழியசைப்பில்,
“என் நண்பனோட அப்பா இறந்துட்டார். கள்ளக்குறிச்சிவரை போகணும் என்றேன்.
"அடக்கடவுளே! வயசானவங்களா நாளைக்கு வந்துடுவீங்கல்ல..."
"ம்... ஆமா, இல்ல... அவங்க பொண்ணு, வெளிநாட்டிலிருந்து வரணுமாம். அதனால் நாளை மறுநாள்தான் தகனம் செய்வாங்க. முடிஞ்சதும் வந்துடறேன்."
"அதுக்கேங்க, இப்போ, இவ்வளவு அவசரமா போகணும். நாளைக்குக் காலையிலே போக வேண்டியதுதானே..."
"இல்ல ரோகிணி. அவன் என் நல்ல நண்பன். உதவிக்கும், ஆறுதல் சொல்லவும் ஆள் இருக்கோ என்னவோ, அதனால உடனே போயாகணும்" என்றேன்.
மனசை தேத்திக்குங்க. டிரஸ்சை மாத்திகிட்டு, காப்பி குடிச்சுட்டுக் கிளம்புங்க. ஏய் ஹேமா! உட்கார்ந்து ஹோம்வோர்க் எழுது” என்றபடி சமையலறைக்குள் போனாள்.
"இவளிடம் அதை எப்படிச் சொல்வது, சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வாள்? விளக்கை அணைத்துவிட்டு கண் துடைத்து ரகசியமாய் தலையணையை நனைப்பாவாளே... அவள் மனம் விட்டு அழுதால்தான் துயரம் தீரும். நான் இங்கிருக்கக் கூடாது.
ஒரு செட் துணியைத் தோள்பையில் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன்.
"அடிக்கடி ஃபோன் பண்ணுங்க” என்ற ரோகிணியின் குரல் என்னை வெகுநேரம் இம்சித்தது.
மெள்ள நடந்து தாம்பரம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தேன். செங்கல்பட்டு சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி ஓய்வெடுத்துவிட்டு, நாளை மறுநாள் வீடு திரும்ப வேண்டும் என தீர்மானித்திருந்தேன்.
அருகிலிருந்த தொலைபேசி பூத்துக்கு சென்று, வீட்டு எண்களைச் சுற்ற அந்தப் பக்கம் ரோகிணி, "ஹலோ.." என்றாள்.
"ம்...ரோகிணி... நான்தான், பஸ் ஸ்டாண்டுலே நிற்கறேன். பஸ் கிளம்பப் போகுது. இங்க வர்ற வழியிலதான் கேள்விப்பட்டேன். கீதாயில்ல கீதா... அதான் ஹேமா பிரெண்ட்... அவ அப்பா ரத்தினம், உங்க ஊர்க்காரர், ஏதோ விபத்துல இறந்துட்டாராம். சாரிம்மா... முடிஞ்சா நீ போய் பார்த்துட்டு, ஆறுதல் சொல்லிட்டு... பஸ் கிளம்பப் போகுது. நான் வெச்சிடறேன் ரோகிணி..." என்று ரிஸிவரை வைத்துவிட்டு மெள்ள வெளியே வந்தேன்.
அழுவாளோ... அழட்டும். மனம் விட்டு அழட்டும். அப்போதுதான் மனத்திலுள்ள துயரம் தீரும். நான் இருந்தால் என் எதிரில் அழமுடியாது. என்று நினைத்தபடி பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். மனம் சற்று இலேசானது.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் மார்ச் 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்