
ஒவ்வொரு மாத முடிவிலும் சம்பளம் கிரெடிட் ஆனதும், ஜெயராமின் அப்பா அவனிடம் அடுத்த மாதத்திற்குத் தேவையான மளிகைச் சாமான்களுக்கு லிஸ்ட் எழுதிக் கொடுத்து, மளிகைக் கடை முருகேஷிடம் கொண்டு கொடுத்துவரச் சொல்வார். அடுத்த நாள் காலை முருகேஷ் சாமான்களை வீட்டுக்கே கொண்டு இறக்கிவிடுவார். இது அவர்கள் வீட்டு வழக்கம்.
அன்று ஜெயராம் அப்பாவுக்கு வெளியூரில் எதோ வேலையிருக்க, மகனைப் பார்த்து, "நந்தா இன்னைக்கு லிஸ்ட்டை நீயே எழுதிக் கொண்டு கொடுத்துட்டு வந்துடு!’ என்று சொல்லிப் போய்விட, நந்தா அம்மாவிடம் கேட்டு லிஸ்டை எழுதினான். கொண்டு கொடுத்து வந்தான். லிஸ்டின் ஒரு மறுபக்கத்தில் மறக்காமல் அவன் தன் செல்போன் நம்பரை எழுதிக் கொடுத்து வந்தான்.
இரவு ஒரு பத்து மணி இருக்கும் செல் போன் அடித்தது எடுத்தான். முருகேஷ் அண்ணாச்சிதான் பேசினார். ‘லிஸ்ட் பார்த்தேன். எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன். ஓரேயொரு விஷயம் எழுதினது… புரியலை..! கைஎழுத்து மலையாளம் மாதிரி இருக்கு…! வந்து நேரில் சொன்னாத் தேவலை," என்றார் போனில்.
அவர்…’ஒண்ணும் புரியலை!’ என்றபோது, இவனுக்கு ‘ஒன்று புரிந்தது’. தான் தமிழில் எழுதியது மலையாளம் போலிருக்கு என்றால்…? பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கல்லூரிக் கன்னி கனகலட்சுமி மலையாளிதானே? அவளுக்குத் தன் பிரேமத்தை வெளிப்படுத்தி ஒரு லவ் லெட்டர் எழுதினால் என்ன? அவளுக்குப் புரியும்தானே? யோசித்தான்....
‘என்ன நமக்கு மலையாளம் தெரியாது! நாம் தமிழில் எழுதுவது மலையாளம் மாதிரி இருக்குன்னா, தமிழ் படிக்கறவருக்கு அது புரியாம போனா… மலையாளிக்கு அது புரியும்னு முடிவுக்கு வந்தான். ஆரம்பித்தான் ’லவ்’ லெட்டரை இப்படி…
‘எந்தா குட்டி சுகந்தன்னே? ஞான் நின்னைப் பிரேமிக்குனு! அது சரியல்லே? நினக்கு விசுவாசம் தானே? பறயூ..!‘ என்று தனக்குத் தெரிந்த மலையாளத்தைத் தமிழில் எழுதி அனுப்ப, காகிதம் எடுத்த போது பொறிதட்டியது.
காதலைச் சொல்வது சரி…! ஆனால் இதில் என்ன எழுதி இருக்குன்னு அவளுக்குப் புரியாம போனா என்ன செய்வது?
ஆஹா இப்பத்தான் எத்தனையோ டிரான்லேட்டர் ஆப்புகள் வந்திருக்கே தமிழில் தான் எழுதிய ஸ்கிரிப்டை இங்கிலீசிலோ.. அல்லது மலையாளத்திலோ டிரான்ஸ்கிரிப்ஷன் செய்து படித்துக் கொள்ளட்டும். பதில் சொல்லட்டும் என்று நினைத்தவன் தான் எழுதியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அவளது செல்லுக்கு அனுப்பி வைத்தான். காத்திருந்தான்…!
ரெண்டு மூன்று நாள் கழித்து ஒரு போன்… ‘நந்துவா?' என்றது அந்தப் பக்கம்.
‘ஆமாம்!' என்றான் இவன் இந்தப்பக்கம் இருந்தபடி.
‘எந்தா சுகம்தன்னே?’ என்றது குரல்.
‘அதே! நிங்கள் ஆரா?’ என்றான்.
'ஞங்கள் போலீஸ் ஸ்டெஷ்ன்ல இருந்தா… ஒண்ணு, ஸ்டெஷனுக்கு வராம்பற்றோ?’ என்றது குரல்.
பதறிப்போய்… ‘எ… எந்தா பிரஷ்னம்?’ என்றான்.
‘ஹே.! நிங்கள் ஸ்கிரீன் ஷாட்டில் அனுப்பிய லவ் லெட்டர் தன்னே! ஞான் கனகலட்சுமி அம்மய்யா.. இவிடத்து ஸ்டேஷன் எஸ்ஸை," என்றது குரல்!