.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
உடலின் ஊட்டச்சத்துக்களை செயலாக்குவதில் குரோமியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளைப் பிரித்து உடல் இயக்கத்திற்காக சேமிக்க உதவுகிறது. உடலில் குரோமியத்தின் சரியான பங்கு இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், உடலில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை வளர்சிதைமாற்றம் செய்வதில் இது ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்று நம்பப்படுகிறது.
உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரப்பை சீரமைக்கும் பணியை செய்வது, உடலின் தசை வளரச்சி மற்றும் உடலின் கொழுப்பு சத்தை நிர்வாகிக்கும் பணிகளை செய்வது குரோமியம் உப்புதான். உடலின் ஆரோக்கியம் காப்பதில் இது மிகவும் அவசியமான ஒன்று. இதன் தேவை நாளொன்றுக்கு 50 முதல் 200 மைக்ரோ கிராம் வரை. சாதா அளவுள்ள இரண்டு வெங்காயங்களில் தினமும் நமது உடலுக்குத் தேவையான குரோமியம் கிடைத்தது விடும்.
இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு உடலில் குறைந்து விட்டது என்றே அர்த்தம். வயது அதிகமாக அதிகமாக உடலில் குரோமியம் உப்பின் அளவு பாதியாக குறைந்துகொண்டே வருகிறது என்பதை இங்கிலாந்து நாட்டில் நடந்த ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் நன்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருவதுதான் காரணம் என்கிறார்கள். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள் மற்றும் எண்ணெய்களில் குரோமியம் உப்பு குறைவாகவே இருக்கும்.
இந்நிலையை தவிர்க்க கேழ்வரகு, பார்லி, அரிசியை காலை உணவில் சேருங்கள். பகலில் கேரட், முருங்கைக் கீரை, பீட்ரூட், கொண்டைக் கடலை, வெங்காயம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
திராட்சை,பேரீட்சை, பேரிக்காய், சீத்தாப்பழம், மாதுளம் பழம், பழுத்தத் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப் பழம் போன்றவற்றில் குரோமியம் உப்பு போதுமான அளவு உள்ளது. அதேவேளையில் உணவில் இஞ்சியும், பாதாம் பருப்பையும், நிலக்கடலையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விருந்தின்போது அதிகப்படியாக சேர்த்துக்கொள்ளும் அசைவ உணவுகள், கேக் போன்றவற்றால் படியும் கொழுப்பு கறைய சாப்பிட்டு முடிந்த பின்னர் வெற்றிலை போட வேண்டும். காரணம், வெற்றிலையில் குரோமியம் உப்பு அதிகளவில் இருப்பதுதான்.
பல்வேறு நோய்கள் உடலில் வரக் காரணமே குரோமியம் உப்பு குறைபாடுதான். எனவே, உணவில் அடிக்கடி கொண்டைக்கடலை, முருங்கைக் கீரை, வெங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தவிர்த்து கல்லீரல், முட்டை, கோழிக்கறி, கோதுமை, குடை மிளகாய், வாழைப்பழம், பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் குரோமியம் சத்து அதிகமுள்ளது.
குரோமியம் என்ற தாது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், வழக்கமான குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை பராமரிப்பதற்கும் அவசியமாகும். பச்சை பீன்ஸ், புரோக்கோலி, பார்லி, ஓட்ஸ் மற்றும் பாதாம் பருப்புகள் குரோமியத்தின் சிறந்த மூலங்களாக அமைகின்றன. திராட்சை சாறில் அதிக அளவில் குரோமியம் இருக்கிறது. ஒரு கப் திராட்சை சாறில் (200 மில்லி) 7.5 மில்லி கிராம் அளவுக்கு குரோமியம் நிறைந்திருக்கிறது. இது நம்முடைய அன்றாட குரோமியம் தேவையில் கிட்டதட்ட 21 சதவீதமாகும்.
சுத்திகரிக்கப்படாத முழு கோதுமை, சோளம் போன்றவற்றில் குரோமியம் சத்து அதிக அளவில் இருக்கிறது. சுத்திகரிக்கப்படாத கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான குரோமியத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். குரோமியம் குறைபாட்டை தவிர்க்க அதன் சப்ளிமென்ட்கள் பரவலாக பரிந்துரைக்கப்பட்டாலும் அவற்றை உணவுகள் மூலம் எடுத்துக் கொள்வதே நல்லது.