சிறுகதை; மனம் கொத்தி மரங்கள்!

Short Story in Tamil
ஓவியம்: ஸ்யாம்
Published on

-ஆர். ஐஸ்வர்யா

ச்சை நிற கேட், வாசலில், பளிச் என்ற படிக்கோலம் கண்ணைப் பறித்தது. காய்த்து நின்ற மாமரம், தலைக்கொள்ளாமல் படர்ந்திருந்தது. கிளிகள் மொய்த்து இருக்க அணில்கள், தாவி ஓடிக்கொண்டிருந்தன. பெரிய அத்தையின் வீட்டை அடையாளம் காண்பதில் சிரமமிருக்கவில்லை. ஆட்டோவுக்கு காசைக் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றாள் நித்யா.

''அடடே, வாடா நித்திக்குட்டி!" என்று வாசலுக்கு வந்து நித்யாவைக் கட்டிக்கொண்டாள், பெரிய அத்தை வைதேகி. காப்பித் தூள் மணமும், கஸ்தூரி மஞ்சள் மணமும் சேர்ந்த ஒரு கலவையான வாசம், அவள் மீது வீசியது. அதே மணம்! ஆள்தான் கொஞ்சம் இளைத்துவிட்டதுபோல் தோன்றியது.

''ஏன் அத்தை, இவ்வளவு இளைச்சுட்டே?"

"நல்லா கேட்டே போ! கல்லாட்டாம் இருக்கேன்!" சிரித்தபடியே அவளை அணைத்துக்கொண்டு போனாள் வைதேகி.

''வாம்மா! யு.எஸ். ரிடர்ன்" 'வாம்மா மின்னல்!' பாணியில் கலகலப்பான வரவேற்பு எழுந்தது மணிவாசகத்திடமிருந்து.

மணிவாசகம், வைதேகி அத்தையின் மூத்த மகன். தாம்பரத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறான்.

அடுத்த நிமிஷம் கூடமே நிறைந்துவிட்டது. மணிவாசகத்தின் குடும்பத்தை விசாரிக்கும்போதே அவனது தம்பி சிவஞானத்தின் குடும்பமும் சேர்ந்துகொண்டது.

"மாமா எங்கே?"

"இவ்வளவு நேரம் இங்கேதான் ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தார். இப்பத்தான் மாட்டுத் தொழுவத்துக்குப் போனார்."

"அம்மா... அப்பாவை சைக்கிள் கேப்புலே கால்நடையா ஆக்கிட்டியே!" என்று சிவஞானம் 'ஜோக்' அடிக்க,

''ஏய் வாலு" மாட்டுக்குத் தண்ணி வைக்கப் போனாருடா" என்ற நித்யா, துள்ளல் நடையில் பின்கட்டுக்கு ஓடினாள்!

நித்யாவின் தந்தை பரமேஸ்வரனுக்கு இரண்டு தங்கைகள் மூத்த அத்தை வைதேகியில் குடும்பம் ஒரு சிறு கிராமத்தில் தங்கிவிட, சின்ன அத்தை பிரமீளா, சென்னை அண்ணா நகரில் இருந்தாள்.

நித்யா,ப்ளஸ் டூ முடித்ததும் இன்ஜினியரிங். எம்.பி.ஏ. என்று மும்பையிலும், அமெரிக்காவிலும் படித்துவிட்டு விடுமுறையில் சென்னைக்கு வந்திருக்கிறாள். அத்தைகள் குடும்பத்தைப் பார்க்கும் ஆசையில், உடம்பும் மனசும் பரபரத்தது.

"நமஸ்காரம் பண்றேன் மாமா!" கிணற்றடியிலேயே மாமாவின் காலைத் தொட்டு வணங்கினாள் நித்யா.

"தீர்க்காயுசா இரும்மா!" அன்புடன் தொட்டுத்தூக்கினார் பெரிய மாமா.

"சாப்பிடறதே இல்லையா? இவ்ளோ ஒல்லியா இருக்கியே?

"ராஜேஷுக்கு நல்லா சமைக்கத் தெரியுமாம்! அடுத்த வருஷம் பாருங்க டபுள் சைஸ்ல நிக்கப் போறா. நம்ம அம்மாவுக்குப் போட்டியா!" என்று வம்புக்கு இழுக்கவும், மறுபடி சிரிப்பு.

இதையும் படியுங்கள்:
"வறுமையே நான் சந்தித்த மிகப்பெரிய சவால்" - டாக்டர் விஜயலட்சுமி!
Short Story in Tamil

மையல்கட்டுக்குள் நீள வரிசையில் சிறு சிறு மனைகள் இடப்பட்டு, வாழை இலைகள் தயாராக இருந்தன.

"இன்னைக்கு சுபாவோட சமையல்: பின்வரும் விளைவுகளுக்கு நாங்க யாரும் பொறுப்பல்ல!" சிவராமன் சொல்லவும் அவரது மூத்த மகள், கரண்டியாலேயே அப்பா முதுகில் செல்லப்போடு போட்டாள்

சுடச்சுட சாதம், முருங்கைக்காய், மாங்காய் சாம்பார், அரைக்கீரை கூட்டு, வாழைக்காய் வறுவல், மிளகு ரசம், இளமோர், ரவை பாயசம்!

எளிமையான சாப்பாடாக இருந்தாலும் நிறைவாக இருந்தது.

சாப்பாடெல்லாம் முடிந்ததும், அத்தை நித்யாவுக்கு ஆசையாக மருதாணி வைத்துவிட்டாள்.

'அத்தை... ஐ லவ் திஸ் ப்ளேஸ்... எப்பவும் கலகலப்பா... அன்பா...'"

''ஆமாம்... நீதான் மெச்சிக்கணும் நித்யா. அப்ப எனக்குத் தோணலை.ஏதோ விவசாயம் பார்த்துக்கிட்டு பிள்ளைங்க எங்களுக்கு உதவியா இருந்தா போதும்னு நெனைச்சுட்டேன். ஆனால் இப்ப ... மணிக்காவது ஸ்கூல்லே உத்தியோகம் இருக்கு. சிவாதான் பாவம் எல்.ஐ.சி. ஏஜென்ஸி அது இதுன்னு அலையுறான். ஏதோ கூட்டுக் குடும்பமா இருக்கறதனால பெருசா கஷ்டம் தெரியலை!

''ஆமா அத்தை சிவாவோட அறிவுக்கும் திறமைக்கும்...'"

"பிரமிளா பசங்களைப் பாரு! ரவியும் ராஜுவும் அமெரிக்காவிலேயும் உமா ஆஸ்திரேலியாவிலும் இருக்காங்க!''

"அதுலயும் ரவி ரொம்பப் பெரிய பங்களாவே வாங்கிட்டான்... தெரியுமா அத்தை?"

''சந்தோஷம்டி! அவங்கள்லாம் எங்களுக்கு உதவி செய்யத் தயாராத்தான் இருக்காங்க. ஆனால் எங்களுக்கு இருக்கிறதே போதும்னு சொல்லிட்டோம். எவ்வளவு இருந்தாதான் பத்தும்... சொல்லு?"

நித்யா அமைதியாகிவிட அத்தை தொடர்ந்தாள்

"நித்தி, உனக்குக் கல்யாணம் ஆனதும் சென்னைக்கு வர்றதா அண்ணா சொன்னான். இவ்ளோ படிச்சுட்டு, இங்கே ஏன்டி செட்டில் ஆகறே? இங்கே என்ன இருக்கு? 'ராஜேஷும் நீயும் ஃபாரின் போய் செட்டிலாயிடுங்க."

பத்தாம் கிளாஸ் வரை மட்டுமே படித்திருக்கும் வைதேகி அத்தை, வாழ்க்கையைப் பற்றி அலசுவதைப் பார்த்து நித்யா வாயடைத்துப் போனாள்.''

மாலையில் தோட்டத்து மல்லிகையை அம்மு அடர்த்தியாய்க் கட்டி, நித்யாவின் தலையில் வைத்தாள். பக்கத்து மைதானத்தில் கிட்டிப்புள் ஆடிவிட்டு சிவாவின் மகன் ஆட்டோ பிடித்து வர நித்யா அண்ணா நகர் கிளம்பினாள்.

த்திப் பெட்டிகளை அழகாக அடுக்கி வைத்தது போன்ற அமைப்பில் இருந்தது சக்தி அபார்ட்மெண்ட்ஸ். பிரமிளா அத்தையின் ஃப்ளாட் மூன்றாவது மாடியிலிருந்தது. லிஃப்டில் ஏறிச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். இரண்டு மூன்று முறை அழுத்திய பிறகு மெள்ள கதவு திறந்தது. சங்கிலியின் இடுக்கு வழியாக எட்டிப் பார்த்தாள் பிரமிளா அத்தை.

''ஹாய் நித்தி! கம்... கம்!"

கிராப்புத் தலையும், நைட்டியுமாக நின்ற பிரமிளா அத்தை, இரும்பு கேட்டைத் திறந்து வழிவிட்டாள்.

"ஹவ் ஆர் யூ டியர்?" இறுக்க அணைத்து முத்தம் கொடுத்தாள். அப்போதுதான் குளித்திருப்பாள்போல வெளிநாட்டு சோப்பின் வாசம் மணத்தது. வால் மவுண்ட் டீ.வி., வெளிநாட்டு சோபா செட்டுகள், மைக்ரோ-அவன், வாஷிங் மெஷின் என எங்கும் பணக்காரக் களை தாண்டவமாடியது.

''லேட்டாயிடுச்சா? நீ வருவியான்னு தெரியலை… ஃபோன் போட்டா நீ எடுக்கவே இல்லையே!"

''அப்படியா? சிக்னல் கிடைக்கலியோ? என்னமோ? ஆன்ட்டி, வீடு சூப்பரா இருக்கு! இந்த தஞ்சாவூர் பெயின்டிங் எக்ஸலென்ட்!"

''விலை என்ன தெரியுமா? ஜஸ்ட் ட்வென்டி கே!"

ஷோகேஸில் இருந்த மூன்று பெரிய படங்கள் நித்யாவின் கண்களைக் கட்டிப் போட்டன.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; பச்சையும் சருகும்!
Short Story in Tamil

"இது ரவி ஃபேமிலி.. இது ராஜு ஃபேமிலி. இது உமாவோட ஃபேமிலி!"

நித்யா எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்து ரசித்தாள்.

"ரொம்ப நாளாச்சு உமாவைப் பார்த்து!"

"இது உமாவோட குழந்தை. பேரு ரத்திஷ்! இப்ப இதுக்கு மூணு வயசு! எப்பவாவது வெப்கேம்ல பேசிக்குவோம்..."

"மாமா எங்கே?"

''ஃபாக்டரியிலிருந்து வர்றதுக்கு எப்படியும் ஒன்பது மணி ஆயிடும்."

"சரி... என்ன சாப்பிடறே?"

''ஒண்ணும் வேண்டாம். வயிறு ஃபுல்!''

"இருக்கட்டும்" என்றவள், ஃபேன்டாவை நிரப்பித் தந்தாள்.

''இரண்டு பேருக்கும் பிபி; சுகர், கொலஸ்ட்ரால், அல்பமின் எல்லாமே இருக்கு. என்னத்தை சாப்பிடறது? ஓட்ஸ் கஞ்சியும், ராகி தோசையும்தான் அரிசியே வாங்கறதில்லை தெரியுமா?"

பரிதாபமாகப் பார்த்தாள் நித்யா.

''நித்யா, உனக்குக் கல்யாணம் ஆனா, தயவுசெஞ்சு ஃபாரின்லே மட்டும் செட்டில் ஆயிடாதே. அப்புறம் எங்க அண்ணாவுக்கும் எங்க மாதிரி எம்ட்டி. நெஸ்ட் வாழ்க்கை ஆயிடும்! வைதேகி அக்காவைப் பாரு எந்நேரமும் புருஷன், பிள்ளைங்க, மருமகள்கள், பேரன் பேத்திகள்னு உறவுக்காரங்களோட சந்தோஷமா கலகலப்பா இருக்க... என்னப்பாரு டீ.வி.யில வர்ற கேரக்டர்களோட பேசிக்கிட்டு இருக்கேன்."

''குடும்பம்னா தொப்புள் கிளை பூத்துக் குலுங்க அதை வெச்சுத்தான் அதன் நிழல்லே இளைப்பாறணும். ஆனால் என் வாழ்க்கை, இதோ அங்கே இருக்குற விசிறி வாழை மாதிரி ஆயிடுச்சு. பார்க்க அழகு அலங்காரம்தான். ஆனால் என்ன பிரயோஜனம் சொல்லு?"

பிரமிளா அத்தையிடம் விடைபெற்று திரும்பிய நித்யாவுக்கு, பெரிய அத்தை வீட்டு முகப்பில் நிற்கும் மாமரத்தையும், இந்த விசிறி வாழையையும் கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாது போலத்தான் தோன்றியது.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஜனவரி  2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com