
-அனுராதா ரமணன்
தாயம்மா, சாடையாக உள்ளே எட்டிப் பார்த்தாள். இன்னும் சண்டை ஓய்ந்தபாடாக இல்லை. பசியில் சிறு குடலை பெருங்குடல் 'ஆ...ஆ...'வென வாய் திறந்து விழுங்கிக்கொண்டிருந்தது...
'வாய் ஓயாமக் கத்தற மவராசி, எனக்கு ஒரு வாய் காபித் தண்ணியக் கொடுத்திட்டுக் கத்தலாம் இல்லே...!'
மனசு அங்கலாய்த்தது. அவள், தன் இரு கால்களின் நடுவில் குப்புறப் படுத்துத் தூங்கும் அந்த பத்து மாதக் குழந்தையைப் பார்த்தாள்..
எந்தவொரு பாதிப்புமின்றி நிச்சந்தையாகத் தூங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
உள்ளே -
அந்த வீட்டின் எசமானி, இதோ, தாயம்மாவின் மூங்கில் பிளாச்சு கால்களுக்கிடையே துயிலும் சிசுவின் தாய் சியாமளா, பெரிதாய் அழுதுக்கொண்டிருந்தாள்.
''உங்களுக்கு என் மேல உண்மையான அன்பிருந்தா, என்னைக் கேட்காம, இப்படியொரு காரியம் செய்வீங்களா!''
"சியாமா... இது, இந்த அளவுக்கு உன்னைப் பாதிக்கும்னு நான் நினைக்கவே இல்லேடா. அப்பாவுக்கு ஓர் 'ஆஞ்சியோ'அவசரமாப் பண்ணணும்னு அண்ணா சொன்னான். அவன் இருக்கறது சிட்டிக்கு ரொம்பத் தள்ளி... அதனாலேதான்..."
"அதெல்லாம் பிளான் பண்ணித்தானே ஊருக்கு வெளியிலே ஃபிளாட் வாங்கியிருக்கார் உங்க அண்ணா... நாமதான் அசடு. இந்தப் பக்கம் அப்பல்லோ, அந்தப் பக்கம் அகர்வால், பத்தே நிமிஷத்துல லஸ் கார்னர், முப்பது ரூபா கொடுத்தா மயிலாப்பூர் கபாலிக் கோயில், மியூஸிக் அகாடமி, சரவணபவன்னு பார்த்துப் பார்த்து வாங்கினோம். இப்ப என்ன ஆச்சு? என்னை இங்கே வீட்டுல உட்காரவச்சிட்டு, நீங்க டூர் போயிடறீங்க. மாயவரம் அத்தை, திருச்சி சித்தப்பா, கோயமுத்தூர் அக்கான்னு மாசத்துக்கு இருபது நாள் படைபடையா வந்து இறங்கி... என்னாலே முடியலேப்பா... நான் கல்கத்தாவுக்குக் கிளம்பறேன்."
தாயம்மா, இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் துழாவி எடுத்து, ஒரு துண்டு புகையிலையைக் கிள்ளி, வாயில் அதக்கிக்கொண்டாள். அவளையும் மீறி, மனசு, ஆழப் புதைந்துக் கிடக்கும் நினைவுகளை, பள்ளம் தோண்டி எடுத்தது.
தாயம்மா, வீரபத்ரனுக்கு இரண்டாம் மனைவி. மூத்தாளுக்கு குழந்தை இல்லை. அந்த வேதனையிலேயே இறந்துபோக, தன்னை விடவும் இருபது வயது இளையவளான தாயம்மாவை மணந்தான் வீரு.
வசதிக்கு ஒரு குறையுமில்லை. என்ன... பணத் தேவைக்கு, ரூபாய் நோட்டுக்களாய் பார்க்க முடியாதே தவிர, தென்னந்தோப்பும், மாந்தோப்பும், நெல் விளையும் நஞ்சையும், காய்கறித் தோட்டமும் என பஞ்சமில்லாதப் பிழைப்பு.
இன்றைக்கு தன் மனைவி, ஒரு வேளை காப்பித் தண்ணிக்கு வகையற்று, புகையிலைக் காம்பை மென்றுகொண்டிருப்பதை, வீரபத்ரன் மட்டும் பார்த்தால், கண்ணில் ரத்தம் கசிந்துவிடும்.
இதோ - தாயம்மா வேலை பார்க்கும் வீட்டு எசமானியம்மாள் சியாமளாவின் கணவன்கூட வீரு மாதிரிதான்.
'எல்லா ஆம்பிளைங்களுமே இப்படித்தானோ..."
தாயம்மா, தனக்குள் கேட்டுக்கொண்டாள்.
"பெண்டாட்டி அழுதா கரைஞ்சுப் போயிடுவாளா... அட, மிஞ்சிப் போனா... ஒரு வாரம், சுவத்தைப் பார்க்கத் திரும்பிப் படுப்பா... 'படுடீ கழுதை' யின்னு விட்டுப்புடணும். அதை விட்டுட்டு, தலை மேல தூக்கி வச்சிட்டுத் தாங்கினா....'' ...
தாயம்மா, உள்ளே எட்டிப் பார்த்தாள். சமையலறை இன்னமும் உறக்கம் கலையாமலேயே இருக்கிறது. அப்படியானால், முதல் நாள் இரவிலிருந்தே யுத்தம் ஆரம்பம்போல...
சியாமளாவின் கணவன் சசிதரன், இரைந்துப் பேசி யாரும் கேட்டதில்லை, அத்தனை சாது... 'சியாமா... சியாமா...' என்று மனைவியின் காலையே சுற்றிச் சுற்றி வருவான். ஊரில் இருப்பதே பத்து, பதினைந்து நாட்கள்தான். அதிலேயும் பாதி நாட்கள், சியாமா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு விடுவாள்...
அவள் சிரித்து, குதூகலமாய் இருக்கிறாள் என்றால் ஒன்று சசிதரனுடன் அவள், புடைவை, நகைக் கடைக்குப் போகப் போகிறாள்... அல்லது அவளைச் சேர்ந்தவர்கள் யாராவது வீட்டுக்கு வருகை தரப் போகிறார்கள் என்று அர்த்தம்.
இன்றா... நேற்றா...
சசிதரன், அவன் பெற்றோருடன் திருவல்லிக்கேணியில், இருபத்து மூன்று வயது வாலிபனாக இருந்த காலம் தொட்டே தாயம்மா கிழவி பார்த்துக்கொண்டேதானே இருக்கிறாள்?
அப்பா, அம்மா, ஒரு அண்ணன், அக்கா, தம்பி, தங்கை... இப்படி திருவல்லிக்கேணி பெரியதெரு பிள்ளையார் கோயில் பக்கம், நீளமான எலிபங்கில் கூட்டுக் குடும்பமாக அவர்கள் இருந்தபோது, தாயம்மாவுக்கு எழுபது வயது
எத்தனையோ அருமையும் பெருமையுமாய் கணவனுடன் வாழ்ந்து, கருவேப்பிலைக் கொழுந்து மாதிரி ஒரேயொரு மகனைப் பெற்றெடுத்து, ஐம்பது வயது வரையில் கட்டுக்கிழத்தியாய் வாழ்ந்தும், மகனாலும், மருமகளாலும் ஓரங்கட்டப்பட்டு... பாவம் வீரபத்ரன். அந்த வருத்தத்தை நெஞ்சு நிறைய சுமந்தபடியே போய் சேர்ந்தான். அப்படியும் விடாமல், சொத்துக்களை தன் கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பத்து வருடங்கள் வாழ்ந்தாள் தாயம்மா.
மகனின் குடும்பம் பெருக, மருமகளின் ஏச்சுப் பேச்சுக்கள் அளவுக்கு அதிகமாக, கையில் இருப்பதை எல்லாம் மகனிடம் கொடுத்து விட்டாலாவது ஒரு வாய் சோறும், நிம்மதியானத் தூக்கமும் கிடைக்காதா என ஏங்கி, மிச்சமிருந்த வீடு, மனை, காடு, அரை அத்தனையையும் வாரிக் கொடுத்ததன் பலன்
எழுபது வயதில், ஒரு பக்கம் இடுப்பு எலும்பு முறிவுடன் வெளியே வந்து விழுந்தவள் - சசிதரனின் வீட்டோடு ஐக்கியமானாள்.
அப்போதிருந்தே வேடிக்கையாகச் சொல்வதுபோல, சசிதரனின் சகோதரர்களிடமும், பெரியம்மாவிடமும் சொல்லுவாள்:
"நாளைக்கு பெண்சாதி வந்ததும், பெத்தவங்களைத் தூக்கி எறிஞ்சிடாதீங்க கண்ணுகளா... பெண்சாதிக்காக எதை வேணுமானாலும் செய்யுங்க. அப்படியே தாயார், தகப்பனையும் பராமரிக்கணுங்கற விஷயத்துல கண்டிப்பா இருங்க... விட்டுக் கொடுக்காதீங்க.."
"பெரியம்மா... எல்லாக் காசையும் வாரி விட்டுடாதீங்க. நம்ம கையில் நாலு ரூவா இருந்தாத்தான் மதிப்பு...''
ஒவ்வொரு தடவையும் தாயம்மா சொல்லும்போதெல்லாம் கிண்டலடிப்பார்களே தவிர இப்போது நடந்தது என்ன...
பெரியவன் தாம்பரம் பக்கம், சேலையூரில் வீடு வாங்கிக்கொண்டிருக்கிறான். புகுந்த வீடு போன பெண்கள் இருவரும் கோவையிலும், பெங்களூரிலுமாய் இருக்கிறார்கள். சின்னவன் அமெரிக்காவில்...
நல்ல வேளை... சசிதரனின் பெற்றோர், அன்றாடச் சாப்பாட்டுக்கு குழந்தைகளை நம்பியில்லை கிராமத்தோடு போய் உட்கார்ந்துவிட்டனர்.
சியாமளா, தாயம்மாவை மட்டும் விடாமல் வைத்திருக்கிறாள். குழந்தையை கவனிக்கத் துணை வேண்டுமே... மற்றபடி, ஒரு ஈ காக்கை வரக்கூடாது அவள் வீட்டைத் தேடி...
சியாமளா அழுது, அடம் பிடித்ததில், சசிதரனின் அப்பாவை, ரயில் நிலையத்திலிருந்தே மருந்துவமனையில் கொண்டு சேர்த்தாகிவிட்டது.
சசிதரனின் தாயார், வேறு வழியில்லாமல் இங்கே வந்து, அவசரமாய் ஒரு குளியல் போட்டு, தனக்கும், தன் கணவருக்குமாய் ஏதோ ஒன்றை சமைத்து எடுத்துக்கொண்டு, மகனுடன் மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.
போகிற போக்கில் தாயம்மாவைப் பார்த்து ஒரு நைந்த புன்னகை...
"நல்லாயிருக்கியா தாயம்மா...?"
"ஏதோ இருக்கேம்மா.."
"உன் மகன் கிட்டத்தானே இருக்கே...?"
''ஆஹாங்... அவங்க திருவல்லிக்கேணியிலேயே இருக்காங்க. நான், இதோ இங்கே குப்பத்துல இருக்கேன் ..."
"பாவம்... வயசும் ஏகமா ஆயிடுச்சே .. ஒண்டியா எப்படி சமாளிக்கறே?...''
தாயம்மாவின் இடுங்கிய விழிகள், மேலும் இருங்கியது. தங்கள் பேச்சைக் கேட்டபடி சியாமளாவும் கதவு ஓரமாய் நிற்பதை, அந்த வயதிலும் கவனிக்கத் தவறவில்லை அவள்...
"என்ன செய்யலாம் தாயீ... உடம்புல தெம்பும், திமிரும் இருக்கச்சே, என் மவராசனோட மனுசங்க யாரையுமே கிட்டச் சேர்க்காம விரட்டி அடிச்சேன். 'என் புருசனும், பையனும் இருக்காங்க... காலம் முழக்க நம்மைக் காப்பாத்துவாங்க'ன்னு ஒரு மிதப்புத்தான்னு வெச்சுக்கோயேன்..."
''....................''
"அன்னிக்கு யாரையாவது அனுசரிச்சிருந்தா இன்னிக்கு 'இருக்கியா அத்தை'யின்னு ஏதாவது ஒரு குஞ்சு, குளுவான் எட்டிப் பார்த்துக் கேட்கும். கேட்கலே... இன்னிக்கு யார் யார் எங்கே இருக்காங்கன்னே தெரியல்லே...
ஒரு நிமிஷம்போல சசிதரனும், அவன் தாயும் மலைத்து நின்றார்கள். சியாமளா, கதவிடுக்கு வழியே கிழவியை வெறித்து நோக்கினாள்.
இது எதையுமே கவனிக்காமல், தன் மடியில் கிடந்த பிஞ்சை எடுத்து முத்தமிட்டாள் தாயம்மா.
"இதோ பாருங்க... என் ராசா... மூக்கும் முழியும் அச்சு, அசலு, உங்களை மாதிரியே இருக்கு. அந்த ரத்தம் எங்கே போவும்? சிரிக்கிறான் பாருங்க... டேய்... என் தங்கம்... என் வெல்லக்கட்டி... நீயெல்லாம் ஆத்தாளைக் கண்ணு கலங்காமப் பார்த்துக்குவியா... எம் மவன், பெண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு, என்னையத் துரத்திவிட்டான். இன்னிக்கு அவனோட மருமவ, அதான் என் பேரன் பெண்டாட்டி 'மாமியாரை விட்டுட்டு வா... தனியாப் போகலாங்'கிறாளாம்... என்ன பார்க்கறே... ஆயா கதை எல்லாத்தையும் உனக்கு வர்றவகிட்டச் சொல்லு. பச்ச இலை பழுக்கறதுக்கு எத்தினி காலமாகும்?"
"தாயம்மா, குழந்தைகிட்டப் பேசற பேச்சா இது..."
சசிதரனின் தாய் அதட்டினாலும், அவளது கண்களின் ஈரம்...
கிழவி, சியாமளாவைப் பார்த்தாள். அவள், 'சட்'டெனக் கூந்தலை ஒதுக்கி, காலில் செருப்பை மாட்டிக்கொண்டிருந்தாள் .
''தாயம்மா, நானும் அத்தையோடப் போய் மாமாவைப் பார்த்துட்டு வர்றேன். குழந்தையைக் கொடு..."
சசிதரன், பூரிப்புடன் மனைவியைப் பார்த்தான்...
'நீ... சரி... குழந்தை எதுக்கு... ஹாஸ்பிடலுக்கு..."
"நோ, நோ... பேரனைப் பார்த்தாலே தாத்தாவுக்குத் தெம்பாயிருக்கும்...”
குழந்தைக்குத் தேவையானதை ஒரு பிளாஸ்டிக்கூடையில் அள்ளிப் போட்டுக்கொண்டு, மாமியாருடன் கார் வரையில் சென்றவள், 'சட்'டெனத் திரும்பிப் பார்த்தாள்.
"தாயம்மா, நாங்க திரும்பி வர மதியானம் ஆயிரும்... பசிச்சாக்க சமையல் மேடையில...''"பசிக்காது கண்ணு... நீ நிதானமா வா...'
கிழவி திருப்தியுடன் சொன்னாள். அவளுக்குத்தான் மெல்வதற்கு புகையிலைக் காம்பைத் தவிரவும், பழைய நினைவுகள் நிறைய இருக்கிறதே...
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்
(மமலர், பிப்ரவரி 2010, 72)