சிறுகதை: நதியும் பெண்தானோ!

ஓவியம் : லலிதா
ஓவியம் : லலிதா

-பாரதி மணியன்

க்கிரமான மாலை வெயில் சற்று தணிந்திருந்தபோதும், அந்தி வெயிலின் தாக்கத்தில், அவளுக்கு உடல் வேர்த்து கசகசக்கவே செய்தது. அவள் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து, வாசல் பெருக்கி, குளித்து, ஏழுமணிக்கெல்லாம் சமையலை செய்து முடித்து விடுவாள். இடையே... ஹோட்டலில் கேசியர் வேலை பார்க்கும் கணவர், பள்ளியில் படிக்கும் மகள் இருவருக்கும் செய்ய வேண்டிய பணிகளையும் கவனித்து விடுவாள்.

அனைவர்க்கும் தனித்தனியே மதிய உணவுக்கும் டிபன் பாக்ஸ் பேக் செய்து வைத்துவிட்டு, அவசரமாக இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு, ஏழே முக்காலுக்கு. அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் வந்து விடுவாள்.

அவள் வேலை செய்யும் கம்பெனியின் ஆம்னி வேன் அங்கே வரும் . ஒரு சில சமயங்களில் அவள் வருவதற்குள் கம்பெனி வேன் போய்விடும். அப்புறம் அவள் இரண்டு பஸ் மாறித்தான் போகவேண்டும். அந்தச் சமயங்களில் அடித்துப்பிடித்து... கூட்ட நெரிசலில் சிக்கி, அவள் பயணிக்க வேண்டி இருக்கும்.

மாலையில் வேலை முடிய தாமதமானால், அவளால் கம்பெனி வேனுக்கு வரமுடியாமல் போகும். அப்போதும் வெளியேவந்து அதே சிரமமான பேருந்து பயணம் செய்து வீட்டுக்கு வருவாள்.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்குப் போகும் வழியில், வீட்டில் போய் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றித்தான் வழக்கமாக யோசிப்பாள். ஏதாவது கீரை, காய்கறி, மளிகைச் சாமான் என்று வாங்கிக்கொண்டு நடப்பாள்.

அன்றும் அவள் அதுபோல கூட்டம் நிறைந்த அந்தக் கடை வீதியையும், பலவிதமான மனிதர்களையும்… குறிப்பாக வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்லுகின்ற, அவளைப் போன்ற பெண்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்தாள்.

'பொதுவாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு, ஆடை அணிகிற விஷயத்தில், வீட்டில் இருப்பதுபோல சுதந்திரமாக, விருப்பம்போல அணிவது கடினமே. நாலு பேர் வேலை பார்க்கும் இடத்தில், நேர்த்தியாக  உடுத்த வேண்டுமேன்னு, இருக்கிறதுலேயே நல்ல புடவையை அல்லது சுரிதாரை உடுத்திக்கிட்டு போகவேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
யோகா: இந்தியர்களின் பெருமை இந்தியர்களின் உடைமை!
ஓவியம் : லலிதா

குறைந்த பட்சம் தலையைச் சீவி, ஏதாவது ஒரு ‘பூ’ அல்லது க்ளிப் போட்டு , முகத்தையும் சற்று ஒப்பனைப்படுத்தி, சின்னதா ஸ்டிக்கர் பொட்டு அல்லது குங்குமம் வைத்துக்கொண்டு போகணும். அவளைப்போலவே, இருப்பதை வைத்து எளிமையாக ஒப்பனை செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.  மற்றபடி அழகு நிலையம் போய் ஒப்பனை செய்துகொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி சிந்தனையோடு அவள் சாலையோரம் நடந்து கொண்டிருந்தபோது … எதிரே  ஒரு தடியன், சைக்கிளில் வேகமாக அவளை மோதுவதுபோல வந்தான்.

கடைசி நிமிடத்தில், அவனைக் கவனித்து, சட்டென்று அவள் விலகி நின்றாள். ஆனால், அவனிடம் இருந்து விலகிய நேரத்தில், சற்றுத் தடுமாறி பக்கவாட்டில் நடந்துவந்த ஒரு வயதான அம்மா மீது மோதிவிட்டாள்.

அவள் மோதிய வேகத்தில் அந்த அம்மாவும் விழப்போக, அவள் சமாளித்து அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டாள்.

"சாரிம்மா... கவனிக்கலை... அந்த ஆள் என்மேல இடிக்கிறமாதிரி வந்தான். அதான் உங்கமேல நான் மோதிட்டேன். மன்னிச்சுடுங்க."

"பரவாயில்லமா... இந்தக் காலத்திலே, பொம்பளப் புள்ளைங்க பாதுகாப்பா வெளியே போய்ட்டு வரது பெரிய விஷயமா இருக்கு. இந்தக் குடிகாரன்… திருட்டுப் பசங்கக்கிட்ட சிக்காம வீடு போய் சேர வேண்டி இருக்கு... என்ன செய்யறது?!"

அதற்குள் போதையில் தாறுமாறாக சைக்கிளை ஒட்டிக்கொண்டு வந்தவன், வேகமாக போய்விட்டான்.

அந்த அம்மா சொன்னது பற்றி அவளும் யோசித்தாள்.

ஆமாம், பெண்கள் பொது இடத்தில் நடந்து செல்லும்போது, இது மாதிரி பல சோதனைகளைச் சந்திக்கவேண்டி இருக்கு. பெண்களைக் காட்சிப்பொருளாக அல்லது கவர்ச்சிப்பொருளாக மட்டுமே பார்க்கிற மனிதர்கள், அந்தப் பெண்களும் நம்மைப்போல உணர்வுகள் உள்ள ஜீவனென்று நினைப்பதில்லை.

அவர்கள் ரசிக்கின்ற அந்தப் பெண், அந்த நேரத்தில் சந்தோசமான மனநிலையில் இருக்கிறாளா... மன வருத்தத்தில் இருக்கிறாளா... அல்லது மாதா மாதம் வருகின்ற வயிற்று வலி, உடல் வலியில் சிரமப்படுகிறாளா... இப்படி எதுவுமே தெரியாமல் அவரவர் மனதுக்கு தோணியபடி… ஒரு பெண்ணின் வெளி தோற்றத்தை மட்டும் வைத்து பார்க்கிறார்கள்.

அவள் காதுபட சிலர் பெண்களை வர்ணித்துப் பேசுவதை, கேட்டிருக்கிறாள் . அந்த வார்த்தைகளைக் கேட்க அவள் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். ஏன் இப்படி வக்கிரமாக சிந்திக்கிறார்கள் என்று கோபம்கூட வரும்.

என்ன செய்வது? இப்படியும் சில மனிதர்களின் பேச்சுக்களை, பார்வைகளைச் சகித்துக்கொண்டுதானே பெண்கள் தினமும் வேலைக்குப் போய்வர வேண்டி இருக்கிறது. இதைப்பற்றி பேசி பிரச்னையைப் பெரிதாக்கினால், கடைசியில் பாதிக்கப்படுவதும் பெண்களாகத்தானிருக்கும்.

அந்த வயதான அம்மாவின் பேச்சும், தோற்றமும்…  அவளுடைய அம்மா, அவளுக்குச் சொன்னதை இப்போது ஞாபகப்படுத்தியது.

“அந்த காவிரி ஆற்றுக்கு பொன்னி நதின்னு ஒரு பேரு இருக்கு. அது குடகு மலையில் புறப்பட்டு, கடலை சேருகிற வரைக்கும், பல காடு, மேடு, பள்ளம், பாறைன்னு எல்லா தடைகளையும் தாண்டித்தான் போகணும்.

இதையும் படியுங்கள்:
யோகாவின் தலைநகரம் எது தெரியுமா?
ஓவியம் : லலிதா

சில நேரம் அது அமைதியா போகலாமுன்னு வளைந்து நெளிந்து போகும். அதே நேரத்தில கோபமாகிட்டா எதிரே வர தடையை எல்லாம் துவம்சம் பண்ணிட்டு, ஆக்ரோசமாவும் போகும். அந்தக் காவிரி ஆறு மாதிரியே  நீயும் உன் வாழ்க்கையில எந்தச் சூழ்நிலையிலும் தைரியமா... எல்லா பிரச்னை களையும் கடந்துபோகணும். அதுக்குத்தான் நான் உனக்கு பொன்னின்னு பேரு வெச்சிருக்கேன் ."

அந்த வார்த்தைகள் பொன்னியின் நினைவுக்கு வந்ததும்... அவளுடைய சோர்வு எல்லாம் பறந்துபோனது.

அந்த வயதான அம்மாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு... தெம்பாக நடக்கத் தொடங்கினாள் பொன்னி.

அவளுடைய பருவ வயதில், பொன்னிக்கு அவள் அம்மா சொன்ன அந்த வார்த்தைகள்… எல்லா பெண்களோட வாழ்க்கைக்கும் இன்றும், என்றும் பொருந்தும் இல்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com