
-எம்.ஆர். ஆனந்த்
இடமாற்றம் காரணமாக மூன்று வருடங்கள் கொல்கொத்தாவில் கழித்துவிட்டு, சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தார் சண்முகம். விமான நிலையத்திலிருந்து அசோக் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்ததும் மனதில் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.
"பையனை ஜவகரில் சேர்த்துவிட வேண்டும்" என்றார் மனைவியை பார்த்து. தனது சூட் கேஸில் இருந்து தன் துணிமணிகளை எடுத்து கொண்டிருந்த நந்து, "ஜவகர் ஜகவர் எல்லாம் வேண்டாம்பா. நான் நீ படிச்ச ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலேயே சேர்கிறேன்" என்றான். சண்முகமும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசவில்லை.
“நாளையிலிருந்து பழையபடி எல்லாவற்றையும் ஆரம்பிக்கவேண்டும். புதர்களை எல்லாம் அகற்றி பூச்செடிகள் நடவேண்டும். வீட்டுக்கு ஒயிட் வாஷ் பண்ணனும். வாட்டர் டேங்கை சுத்தம் செய்யணும். துளசி செடி ஒன்றை நர்சரியில் இருந்து வாங்கி வந்து மாடத்தில் நடவேண்டும். எல்லாத்துக்கும் மேல நாளையிலிருந்து வாக்கிங் போகணும். சுகர் இருநூத்தம்பது ஆயிட்டுருக்கு..." பேச்சை மாற்றினார் சண்முகம்.
மறுநாள் சொன்னபடியே நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்து விட்டார். கோடு போட்ட பேண்ட் மற்றும் டீ ஷர்ட்டும் அணிந்து கொண்டார். ஸ்போர்ட் ஷூவையும் போட்டுகொண்டு கிளம்பி விட்டார். "இவ்வளவு சீக்கிரம் போகணுமா ஐந்து மணிக்கு மேல் போகலாமே" என்ற மனைவியிடம், "இந்த நேரம்தான் நடப்பதற்கு நன்றாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு, கேட்டை திறந்து தெருவில் விறு விறு என்று நடக்க ஆரம்பித்து விட்டார்.
மணி நாலரைதான் ஆகியிருந்ததால், தெருவில் நடமாட்டமே இல்லை. ஒன்பதாவது அவன்யூவிலிருந்து நாற்பத்தி எட்டாவது தெருவில் நுழைந்தவர்க்கு ஜாக்கிங் செய்தால் என்ன என்று தோன்றியது. ஓடி எவ்வளவு நாளாகி விட்டது. எவ்வளவு வயதானவர்கள் ஓடுகிறார்கள் என்று எண்ணியவாறு மெதுவாக ஓட ஆரம்பித்தார். "அப்படி ஒண்ணும் கஷ்டமாக இல்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வேகத்தை சிறிது அதிகரித்து தெருக்கோடியை அடைந்து திரும்பியது தான் தாமதம் எங்கிருந்தோ மூன்று நான்கு நாய்கள் குறைத்துக் கொண்டே சண்முகத்தை நோக்கி பாய்ந்து வந்தன.
சண்முகத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஓடினால் துரத்தல் அதிகமாகிவிடும். நின்றாலும் நாய்கள் விடுமா என்று சந்தேகம். குரைப்பதை அதிகப்படுத்திய வாறு நாய்கள் வட்டமாய் சூழ்ந்து கடிக்க வருவதுபோல் பயமுறுத்தின.
"நம்மை ஒரு வழி பண்ணி விடப்போகின்றன இந்த நாய்கள்" என்று ஒரு கணம் தன் ஆடு தசைகளை இழக்க தயாராகி கண்ணை மூடினார் சண்முகம். மறு வினாடி, அருகில் இருந்த குப்பைத் தொட்டியின் பின்னாலிருந்து ஒரு சொறி நாய் அவரை சூழ்ந்து கொண்டு குறைத்துக்கொண்டிருந்த நாய்கள் மீது புலி போல் பாய்ந்து குதற ஆரம்பித்தது. நான்கு நாய்களுடன் கடுமையாக போராடி ஆளுக்கொரு மூலையாக விரட்டி அடித்தது. விக்கித்து நின்ற சண்முகத்தை சிறிது நேரம் பார்த்து லேசாக வாலைஆட்டியது.
ஏற்கனவே உடம்பில் சொறி; அதன் மேல் சண்டையில் ஏற்பட்ட காயங்கள். நடக்கமுடியாமல் குப்பை தொட்டிக்கு பின்னால் திரும்பவும் போய் படுத்து விட்டது. சண்முகம் வாக்கிங்கை கைவிட்டு துண்டை காணும் துணியை காணும்னு வீட்டுக்கு திரும்பினார்.
"ஏன் இவ்வளவு சீக்கிரம் திரும்பிட்டீங்க? குறைஞ்சது 45 நிமிடமாவது நடந்தாதான் சுகருக்கு நல்லது" என்றார் மனைவி சுசீலா. சண்முகம் தயக்கட்டத்தோடு நடந்ததை விவரித்தார். "அந்த சொறிநாய் மட்டும் வரலேன்னா என்னை பிச்சியிருக்குங்க அந்த நாய்கள்," என்று முடித்தார்.
தூங்கி எழுந்ததும் நந்துவுக்கும் என்ன நடந்தது என்று தெரிந்தது. பல் விளக்கி காபி அருந்தியவன், "அப்பா கிளம்புங்க நாம போய் அந்த சொறி நாய பாத்துட்டு வரலாம். பாவம் அதுக்கு என்ன ஆச்சோ. கையில கொஞ்சம் பிஸ்கட்டும் கொண்டு போகலாம்" என்றான்.
அப்பாவும் பையனும் விடியற்காலை நாய்கள் சண்டை இட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். "அந்த குப்பை தொட்டி பின்னாலதான் அந்த சொறிநாய் போய் படுத்துண்டது," என்று நந்துவுக்கு காண்பித்தார் சண்முகம்.
நந்து கைகளில் பிஸ்கட்டுகளுடன் தொட்டியின் பின்னால் மெதுவாக சென்று பார்த்தான். நந்துவை பார்த்ததும் சொறிநாய் தள்ளாடி எழுந்து நின்றது. ஒரு நிமிடம் நந்துவை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அது, தன் முடி உதிர்ந்த வாலை ஆட்ட ஆரம்பித்தது. நந்துவுக்கு பளிச்சென்று அந்த நாய் யாரென்று புரிந்து விட்டது . உடம்பெல்லாம் சொரியால் பட்டினியால் மாறி இருந்தும், அதன் கண்கள் மாறவே இல்லை.
"டாமியே தான்" என்று உரக்க கத்திவிட்டான் நந்து.
"டாமியா? நம்ம டாமியா? என்ன சொல்றே நந்து?" என்றார் சண்முகம். "ஆமாம்பா மூணு வருஷத்துக்கு முன்னே நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் இங்கேயே விட்டுட்டு கொல்கத்தா போனோமே அதே டாமிதான் இன்னிக்கி உங்களை அந்த வெறி நாய்களிடமிருந்து காப்பாத்தி இருக்கு."
சண்முகத்துக்கு அந்த நாள் ஞாபகத்திற்கு வந்தது.
டாமி அவர்கள் வீட்டுக்கு வந்தது ஒரு கதை. ஒரு நாள் காலை சுசீலா கதவைத் திறந்தபோது கேட்டுக்குப் பக்கத்தில் சோகமாக உட்கார்ந்திருந்தது ஒரு கருப்பு வெள்ளை நாய். அதன் தோற்றத்திலிருந்து அது ஒரு தெரு நாய் அல்ல என்று சுசீலாவுக்கு புரிந்தது. அம்மாவை தொடர்ந்து வெளியே வந்த நந்துவுக்கு நாயை உடனே பிடித்துவிட்டது. உள்ளே ஓடிச் சென்று நான்கு பிஸ்கட்டுகளை கொண்டு வந்து அதன் முன் வைத்து "சாப்பிடுரா" என்றான்.
கருப்பு வெள்ளை நாய் தயக்கத்துடன் சாப்பிட ஆரம்பித்தது. "அம்மா அவன் கண்களை பாரு பன்னீர் திராட்சை மாதிரி இல்ல" என்றவன், அதற்கு டாமி என்று பெயரும் வைத்து விட்டான். ஆனால் சண்முகத்துக்கு நாய் என்றால் அவ்வளவு பிடிக்காது. அம்மாவும் பையனும் வேண்டி வேப்பிலை அடித்தவுடன் "நாய வச்சுக்குங்க, ஆனா அது வீட்டுக்குள் வரக்கூடாது.." என்று சொல்லிவிட்டார். ஒரே மாதத்தில் டாமியும் நந்துவும் நெருங்கிய நண்பர்களாக விட்டனர். இப்படி இருக்கையில்தான் சண்முகத்துக்கு கொல்கொத்தாவிற்கு மாற்றல் வந்தது.
டாமியை பற்றி சுசீலாவும் நந்துவும் கவலைப்பட்டார்கள். நந்து சண்முகத்திடம் தயங்கி தயங்கி "நாம் போய்விட்டால் டாமி பட்டினிதான். அவனை கல்கத்தா கூட்டிப்போனால் என்ன?" என்று கேட்டதுதான் மிச்சம், அவர் அப்படி ஒரு சத்தம் போட்டார். "என்ன நினைப்பு உங்களுக்கு நாயை அதுவும் தெரு நாயை எப்படி நாம் கூட்டிப்போக முடியும். உங்களுக்கு என்ன அறிவு மங்கி விட்டதா?" சுசீலாவும் மகனும் மவுனமாக இடத்தை காலி செய்தனர். காரில் அவர்கள் சென்ட்ரலுக்கு கிளம்பி போகும்போது டாமி காரின் பின்னால் தெரு கோடி வரை ஓடி வந்தது. அதோடு சரி. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த நிலைமையில் டாமியை பார்க்க நேர்ந்தது.
மனைவி சுசீலாவும் மகன் நந்துவும் டாமியை கொல்கத்தாவிற்கு கூட்டி போகலாம்ன்னு எவ்வளவு எடுத்து சொல்லியும் அப்படியே நிற்கதியா அதை நடு தெருவில் விட்டுட்டு போனதை நினைத்து இப்போது வெட்கப்பட்டார் சண்முகம்.
அவருக்கு டாமி முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருந்தது. செல்லை எடுத்து ப்ளூ கிராஸுக்கு போன் செய்து பேசினார். "என்ன செலவானாலும் பரவாயில்லை, நாயை குணப்படுத்தினால் போதும். குணமானவுடன் என்னிடமே அதை நீங்கள் ஒப்படைக்கலாம்..."