சிறுகதை: விடுதலை, விடுதலை, விடுதலை!

Short Story in Tamil
Short Story
Published on

வீட்டிற்குள் நுழையும்போதே சுமதிக்கு, எதிர்வீட்டு மைதிலி அக்கா, 'விடுதலை, விடுதலை, விடுதலை' என்று பாடுவது கேட்டது. இன்று சுதந்திர நாள்  இல்லையே அப்புறம் ஏன் அக்கா பாடுகிறாள் என்று நினைத்தாள் சுமதி. ஆனால், வீட்டுக் கதவை சாத்திய பின்பும், மைதிலி அதே வரிகளை திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பது கேட்டது. சுமதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அக்காவின் மகிழ்ச்சிக்கானக் காரணம் தெரிந்து கொள்ளும் ஆவலில் எதிர்வீட்டுக் கதவைத் தட்டினாள்.

வீட்டில் நுழையும்போதே, “வா, சுமதி, நானே வரணும்னு நினைச்சேன். இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ” என்றாள் மைதிலி.

“என்னக்கா, ரொம்பவுமே ஜாலி மூட்ல இருக்கீங்க. பாட்டு... ஸ்வீட்டு... என்ன விசேஷம்” என்று கேட்டாள் சுமதி.

“இன்னிக்கு ரொம்பவுமே முக்கியமான நாள். எனக்கு விடுதலை கிடைச்ச நாள். சிறப்பா கொண்டாட வேண்டாமா?” என்றாள் மைதிலி.

"அப்படி என்ன அக்கா உங்களுக்கு ஸ்பெஷல் விடுதலை?" என்று கேட்டாள் சுமதி.

“ஆமாம், ஸ்பெஷல்தான். உட்காரு. அந்தக் கதையைச் சொல்றேன்,” என்று கதை சொல்ல ஆரம்பித்தாள் மைதிலி.

“என்னோட வீட்டுக்காரர் சிவராமனுக்கு, சின்ன வயசிலிருந்தே, பத்திரிகையிலே பெயர் வரணும்னு ஒரு ஆசை ஆட்டிப்படைச்சிண்டு இருக்கு. அதனால விடாம ஆசிரியர் கடிதங்கள், ஜோக்ஸ் அப்படின்னு பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார். இவரோட ஜோக்ஸ்க்கு எனக்கே சிரிப்பு வராதபோது, அவங்க எப்படி பத்திரிகையிலே போடுவாங்க? இனிமேல், சிறுகதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பப் போறேன். அதுக்குத்தான் மதிப்பு அதிகம் அப்படின்னு ஆரம்பிச்சார். அன்னிக்கு ஆரம்பிச்சுது என்னோட தலைவலி.

அப்ப எல்லாம், பத்திரிகைக்கு கதை அனுப்ப, வெள்ளைத்தாளிலே, அடித்தல், திருத்தல் இல்லாமத் தெளிவான கையெழுத்தில எழுதி அனுப்பணும். கூடவே, தபால்தலை ஒட்டி, நம்ம விலாசம் எழுதிய கவரும் அனுப்பணும். நாம அனுப்புற கதை பிரசுரம் பண்ணலை அப்படின்னா, வேறே பத்திரிகைக்கு அனுப்பிப் பார்க்கட்டும் அப்படிங்கிற நல்ல எண்ணத்திலே திருப்பி அனுப்புவாங்க. இவர் அடித்தல், திருத்தல் இல்லாம ஐந்து பக்கம் கதை எழுதறதுக்கு ஐம்பது பேப்பர் செலவழிப்பார். அவருடைய அறை முழுவதும் கசக்கி தூக்கிப் போட்ட பேப்பர் இருக்கும். வேலைக்காரி பெருக்கறது போறாம நானும் தினம் அவரோட ரூமை பெருக்க வேண்டியிருக்கும். நம்ம தபால்காரர் 'ஐயா கதை மறுபடியும் திரும்பி வந்துடுத்துமா' அப்படின்னு சொல்லி கிண்டலா சிரித்துட்டுப் போவார். ஆக, மொத்தம், வீட்டு சாப்பாட்டுச் செலவை விட, பேப்பர் செலவு, தபால் செலவு அதிகம்.

இதையும் படியுங்கள்:
உறவுகள் உன்னதமானவை!
Short Story in Tamil

அடுத்த கட்டமா, பத்திரிகைக்கு கதையை தட்டச்சு பண்ணி, தபால் மூலமா அனுப்பலாம் அப்படின்னு சொன்னாங்க. இப்போ செலவு இரட்டிப்பு ஆனதுதான் மிச்சம். தப்பில்லாம எழுதிண்டுபோய் நகலகம் தேடி, தமிழிலே தட்டச்சு செய்துண்டு வரணும். 'நகலகத்திலே தமிழிலே தட்டச்சு பண்றதிலே நிறைய தப்பு பண்றாங்க. அதனாலேதான் என்னுடைய கதைகளை பத்திரிகைகளிலே போட மாட்டேங்கிறாங்க. இதுக்கு ஒரே வழி நானே டைப் பண்ணனும்' அப்படின்னு சொல்லி, அடுத்த கட்டமா நிறைய பணம் கொடுத்து கம்ப்யூடர் வாங்கினார்.

இப்போ எனக்கு அதிகப்படியான வேலை. அவருக்கு டைப் பண்ணத் தெரியாது. உனக்கு டைபிங்க் தெரியுமே, தமிழ் டைபிங்க் கத்துக்கிட்டு, நீயே என்னோட கதையை டைப் பண்ணிக் கொடு அப்படின்னு சொல்லிட்டார். அவரோட கிறுக்கலை படித்து, புரிஞ்சிண்டு, டைப் பண்ணி, தபால் அல்லது ஈமெயில் மூலமாக அனுப்பணும். அவர் கதையைப் படிக்கிறது இருக்கே, அது கொடுமையின் உச்சக்கட்டம். எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை. இந்தப் பத்திரிகை ஆசிரியர்கள் நிலையை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு. இவரை மாதிரி, பல பேர் அனுப்பற கதையைப் படிச்சு, தலையைப் பிச்சுக்கிற வேலையிலே இருக்காங்க அப்படின்னு பரிதாபம் வந்தது.

நம்ம புராணக் கதையிலே எல்லாம், சாமியார் சாபம் கொடுத்தா, கூடவே அந்த சாபம் நீங்கறதுக்கு என்ன பரிகாரம் அப்படின்னு சொல்லுவார். அதனாலே எங்க வீட்டுக்காரர்கிட்டே, 'உங்க கிறுக்கலைப் படிச்சு டைப் பண்றதிலேயிருந்து எனக்கு எப்போ விடுதலை கிடைக்கும்' அப்படின்னு கேட்டேன். 'என்னோட ஒரு கதை பத்திரிகையிலே வந்த உடனே, நான் எழுதறதை நிறுத்திடறேன்' அப்படின்னு வாக்கு கொடுத்தார். நானும் சாமிக்கு வேண்டிக்கிறது, கோவிலுக்குப் போகிறது அப்படின்னு எல்லாத்தையும் பண்ணிப் பார்த்தேன். கதை மட்டும் பத்திரிகையில வரலை.

இதையும் படியுங்கள்:
சொல்ல மறந்த கதை!
Short Story in Tamil

ஒரு பத்திரிகைல சிறப்பிதழுக்கு சிறுகதைப் போட்டி அறிவிச்சிருந்தாங்க. இவர் கதை எழுதுற புராணத்தையும், நான் அதனால படற கஷ்டத்தையும் கதையா எழுதி அவருடைய பெயரிலே போட்டிக்கு அனுப்பினேன். அந்தக் கதைக்குப் பரிசு கிடைச்சு, அவருடைய பெயரோட கதையும் பிரசுரம் ஆகியிருக்கு. எனக்கு அவருடைய கதையைப் படிக்கிற தண்டனையும், அதை டைப் செய்யறதிலிருந்து விடுதலையும் கிடைச்சாச்சு.

இப்ப சொல்லு சுமதி, கஷ்டப்பட்டுக் கிடைச்ச இந்த விடுதலையை கொண்டாட வேண்டாமா?” என்று சொல்லி,

“விடுதலை, விடுதலை, விடுதலை” என்று பாட ஆரம்பித்தாள் மைதிலி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com