- அமெரிக்காவிலிருந்து பாலா
அமெரிக்கா Las Vegas இல் நவம்பர் 11 முதல் 17 வரை நடை பெறவிருக்கும் அமெரிக்க அளவிலான குதிரையேற்ற இறுதி போட்டியில் கலந்துகொள்ளும் புலம் பெயர் முதல் தமிழ் மாணவி ஸ்ரீ மீனாட்சி. 15 வயதில் இந்த பெரும் சாதனையை செய்திருக்கிறார் ஸ்ரீ மீனாட்சி. இதன் மூலம் USA nationals செல்லும் முதல் தமிழ் மாணவி. நாலே வருடங்களில் இந்த மாபெரும் சாதனையை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அவரது பயணத்தின் சுருக்கம் இதோ.
ஸ்ரீ மீனாட்சி தனது 6 வயது முதல் பல விதமான வீட்டு விலங்குகளை (நாய், பூனை) வளர்த்து வந்தார். அவர் தனது 11 -ஆம் வயதில் குதிரைகள் மீதும், குதிரையேற்றம் மீதும் நாட்டம் கொண்டார். Netflix-ல் Spirit என்ற தொடரை தன் தந்தையுடன் சேர்ந்து மிகவும் விரும்பி பார்த்து வந்தார். அந்த தொடரில் வரும் சிறுமியை போல் தானும் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்ற நாட்டம் கொண்டார். அவளின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவரின் பெற்றோரும் அவளை Milpitas - ல் உள்ள குழந்தைகள் குதிரை சவாரி செய்யும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஸ்ரீ மீனாட்சி தனது முதல் குதிரை சவாரியை மேற்கொண்டார். அதற்கு முன் பெங்களூரில் ஒட்டக சவாரி செய்ய வேண்டும் என்று அவள் கேட்டதையடுத்து அவள் பெற்றோர் அவரை ஒட்டக சவாரி செய்ய வைத்தார்கள். ஸ்ரீ மீனாட்சியின் இந்த குதிரை சவாரி ஆசையும் அது போலத்தான் இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு அந்த சவாரியின் முடிவில் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆம். அந்த குதிரை சவாரி முடிந்ததும் ஸ்ரீ மீனாட்சி தனது பெற்றோரிடம் தானே குதிரையை இயக்க வேண்டும். வேண்டிய வழியில் அதைச் செலுத்த வேண்டும் மற்றும் அந்த குதிரையை பல போட்டிகளுக்கு கொண்டு சென்று வெல்ல வேண்டும் என்ற பேரார்வத்தை வெளிப்படுத்தினார். அதைக் கேட்டு வியந்து போனார்கள் அவரின் பெற்றோர்.
அதை தொடர்ந்து அவரது 11 ஆம் வயதில் குதிரையேற்ற பயிற்சியை முறையாக கற்க San Ramon -ல் உள்ள ஒரு குதிரையேற்ற பயிற்சி பள்ளியில் சேர்ந்தார் ஸ்ரீ மீனாட்சி. வாரம் ஒரு 30 நிமிட வகுப்பு என்று தொடங்கிய பயிற்சி பிறகு வாரத்தில் 5 நாட்கள் 60 நிமிட பயிற்சியாகியது.
ஸ்ரீ மீனாட்சி முதல் மூன்று மாதங்களில் குதிரையேற்றத்தின் அடிப்படை திறன்களை கற்று தேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்களில் அவரது பெருங்கனவான உயரம் தாண்டுதல் பயிற்சியை மேற்கொண்டார். ஒரே வருடத்தில் தனது முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி USHJA, Woodside, California வில் நடந்தது. இரண்டு வாரம் நடந்த அந்த போட்டியில் 8 போட்டிகளில் கலந்துகொண்டு அவர் இரண்டாம் இடமான Reserve Champion பட்டம் வென்றார்.
இதை தொடர்ந்து வாரம் மூன்று முறை பயிற்சியை தொடங்கினார் ஸ்ரீ மீனாட்சி. குதிரையேற்றத்தில் Jumpers பிரிவில் 1 அடி 2 அடி பிரிவில் மொத்தம் 50 கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு 1 முதல் 6 இடங்களில் தொடர் வாகை சூடி வந்தார் ஸ்ரீ மீனாட்சி. இதைத் தொடர்ந்து அவரது இலக்கு 3 அடிக்கும் மேல் உயரம் தாண்ட வேண்டும் என்றானது. எனவே தனக்கென சொந்தமாக ஒரு குதிரை இருந்தால் அது தனது இலக்கை அடைய எளிதாக இருக்கும் என்று எண்ணினார். அப்படி தனக்கென ஒரு சிறந்த குதிரையை ஒரே வாரத்தில் அவரின் பயிற்சியாளரின் துணை கொண்டு வாங்கினார்கள். இத்தாலியில் உள்ள ஒரு சிறிய நகரமான போர்டோபினோ ( portofino ) என்பது அந்த குதிரையின் பெயர். அவர்கள் இருவருக்குமான தொடர்பை காணும் சமயம் ஆச்சரியமே மிகும்.
இன்று வரை போர்டோபினோவும் ஸ்ரீ மீனாட்சியும் ஒன்று சேர்ந்து 50 க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதல் 5 இடத்தை வென்றிருக்கிறார்கள். சில போட்டிகளில் பல நுட்பமான பாடங்களை கற்றுமிருக்கிறார்கள். இந்த வெற்றிகளும் பாடங்களும் ஸ்ரீ மீனாட்சி மற்றும் அவரது குதிரையான போர்டோபினோவையும் அமெரிக்க அளவிலான குதிரையேற்ற இறுதி போட்டிக்கு தகுதி பெறச்செய்தது.
அமெரிக்கா Las Vegas இல் நவம்பர் 11 முதல் 17 வரை நடை பெறவிருக்கும் அமெரிக்க அளவிலான குதிரையேற்ற இறுதி போட்டியில் கலந்துகொள்ளும் புலம் பெயர் முதல் தமிழ் மாணவி ஸ்ரீ மீனாட்சி என்பது நம் அனைவருக்கும் பெருமிதம் தரும். ஸ்ரீ மீனாட்சியும் போர்டோபினோவும் இந்த போட்டியிலும் மற்றும் அவர்கள் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற உளமார வாழ்த்துவோம்.