
-பேராசிரியர் இல. கோமதி
நம் உடலில் ஏற்படும் வலிகள், ஜலதோஷம், காய்ச்சல் ஆகியவை நோய்கள் அல்ல, உடலில் நோய் உள்ளது என்பதை நமக்குக் காட்டும் அடையாளங்கள், அறிகுறிகள்! வலி நிவாரண மாத்திரைகளைக் கொண்டு இவற்றைத் தற்காலிகமாக நாம் அடக்கி விடுகிறோம். இதனால் நோய் குணமாகிவிட்டது என்று அர்த்தமல்ல. நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டும். இந்த நோய் அறிதல் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை நோக்கம்.
அதிகாலையில் அலாரம் அடித்தவுடன், அன்றாட வேலைகளை அவசரமாக முடித்தாள் ஆனந்தி. "அம்மா தலையை வலிக்குதும்மா" என்று சொல்லியபடி வந்த தன் மகளிடம் காபி தம்ளரை நீட்டி, "இந்தா இதை எடுத்துக்கொள்" என்று குரோசின் மாத்திரை ஒன்றைக் கொடுத்தாள். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள், தன் முதுகுவலியையும் அடி வயிற்று வலியையும் சமாளிக்க தானும் ஒரு குரோசினை விழுங்கினாள். இப்படி வலி நிவாரண மாத்திரைகளும், உணவு செரிமான மருந்துகளும், தற்போது அன்றாடம் நிறையப் பேருக்குத் தேவைப்படுகின்றன.
மனித உடலில் பஞ்ச பூதங்கள் ஆட்சி செலுத்துகின்றன. அவற்றில் நீர் (சிலேத்துமம், கபம்) என்றும், நெருப்பு (பித்தம்) என்றும், காற்று (வாதம்) என்றும் கொள்ளப்படுகிறது. முதலாவதாக இவை தன் அளவில் அதிகமாகாமலும், குறையாமலும் இருக்கின்ற வரையில் உடலில் நோய் தோன்றாது. இவை அளவில் மாறும்போது நோய் ஏற்படுகிறது.
இரண்டாவது நம் உடலில் சேருகிற நச்சுப்பொருள். இது சரியாக வெளியேற்றப்படாமல் உடலில் நீண்ட காலம் தங்கும்போதும் நோய் ஏற்படும் என்பது சித்த மருத்துவம் தரும் நோய்க்கான இரண்டு காரணங்கள்.
சாதாரணக் காய்ச்சல் என்பது பொதுவாக மூன்று காரணங்களால் வரும். முதலாவது உடம்பில் பித்தம் அதிகமானால் வரக்கூடிய பித்த ஜுரம். இரண்டாவது நுரையீரல் சரியாக நச்சுப் பொருளை வெளியேற்றாததால் வரக்கூடிய கபஜுரம். மூன்றாவது நோய்த் தொற்றுக்களாலும், உடல் உறுப்புகள் அழற்சியாலும் நுண்ணுயிர் (Bacteria virus) தாக்கத்தாலும் வரக்கூடிய ஜூரம். இந்த மூன்று வகை காரணங்களுக்குத் தரப்படும் சித்த மருந்துகள் வேறு வேறு. காய்ச்சல் என்பது அடையாளமே தவிர நோய்க்கான காரணம் அல்ல.
மருத்துவர் என்பவர் யார்? இந்தக் கேள்விக்கு, நோய் அறிதல் (கண்டுபிடித்தல்) மருத்துவத் தாவரவியல், உயிர் வேதியியல், மருந்துகளைப் பக்குவப்படி முறையாகத் தயாரிக்கும் முறைகள், மருந்துகள் உடலில் இயங்குகின்ற முறைகள், மனித உடல் கூறு, வைத்தியத்தை வியாபாரம் ஆக்காத பண்பு, கருணை, தன்னுயிர் போல நோயாளியின் உயிரைக் கருதும் மனம் ஆகிய இந்த அனைத்தும் நிறைந்தவரே மருத்துவர் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்! தற்காலத்தில் இப்படி ஒரு மருத்துவரைப் பார்க்க முடியுமா? சித்தர்களே -மருத்துவர்களாக வந்தால்தான் உண்டு.
நாடி, நயனம், நா, மொழி, சருமம், நிறம், நீர், மலம் இவற்றைக் கொண்டு நோய்களை அறியும் முறை சித்த மருத்துவத்தில் வழக்கில் இருந்து வருகின்றது. நாடி என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில், எத்தனை முறை நாடி துடிக்கிறது என்று கணக்கெடுப்பது மட்டுமல்ல.
வாத, பித்த சிலேத்துமம் ஆகியவற்றின் ஆட்சி, உடலில் எந்த அளவில் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்வது ஆகும். நாடி பார்த்தல் என்பது மிகப் பெரிய நுட்பமான அறிவியல் கலை. இன்ன இன்ன மாதங்களில் குறிப்பிட்ட நேரங்களில்தான் நாடி பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவ விதியாகும்.
நோயாளிகளின் புற அறிகுறிகள் நோயை அறிவதற்கு ஓரளவு உதவும். தலைவலி இருக்கும்போது கண்கள் இடுங்கி, சோர்ந்து, சிவந்து இருக்கலாம். Sinusitis எனப்படும் நீர்த்தேக்கம் இருக்கும்போது முகம் வீங்கி கண்கள் கலங்கி, தும்மலும் மூக்கில் நீர் வடிதலும் இருக்கலாம். முதுகுவலி, வயிற்றுவலி இருப்புவர்கள், சற்று முன்னால் வளைந்து நடப்பார்கள். குடல் பகுதியில் வாயு (Gas) அதிகம் இருந்தால் வயிறு உப்பியும், நடை தளர்ந்தும்விடும்.
மொழி என்பது, நோயாளியிடம் மருத்துவர் கேட்கும் முதல் கேள்வியான உடம்புக்கு என்ன? என்பதற்கு நோயாளிகள் கூறும் அறிகுறிகள், அடையாளங்கள். இதை வைத்து நோயினை சிறிது ஊகிக்கலாம். சருமம், கண் (நயனம்), நகம், நாக்கு இவற்றின் நிறம், அமைப்பு ஆகியவற்றையும் சித்த மருத்துவர்கள் பரிசோதித்து நோயைக் கண்டுபிடிப்பார்கள். நோயாளியின் சிறுநீர் மலம் ஆகியவற்றைப் பரிசோதித்தலும் சித்த மருத்துவத்தில் உண்டு.
உணவே மருந்து. மருந்தே உணவு என்பது சித்த மருத்துவக் கொள்கையாகும். நாம் சாப்பிடுகின்ற உணவின் தூய்மை, அளவு, தன்மை, உணவு சமைக்கப்படும். பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்தே நம் உடல்நலமும், மனநலமும் உணர்ச்சிகளின் வெளிப்பாடும் அமைகின்றன. உடல் நோயின்றி நலமாக இருப்பதற்கு மனநலம் முதற்காரணம் என்கிறது சித்த மருத்துவம். மன அழுத்தமும், மனச் சோர்வும் தலைவலிக்கும், செரிமானக் கோளாறுகளுக்கும், நரம்பு மண்டலத்தின் பாதிப்புக்கும் காரணம் என்பது தற்கால மருத்துவ உலகம் ஒப்புக்கிற கொள்கிற செய்தியாகும்.
மருந்தே உணவு என்கிறபோது, சித்த மருத்துவத்தில் 'பத்தியம்' என்று ஒரு வார்த்தை ஏன் சொல்லப்படுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்தப் பத்தியத்துக்கு பயந்துபோய் நம்மில் பலபேர் சித்த மருத்துவமே வேண்டாம் என்று நினைப்பதுண்டு. இதில் பயப்பட ஒன்றும் இல்லை. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்தக் காரணத்தால் நமக்கு நோய் வந்துள்ளதோ, அந்தக் காரணத்தை நீக்க மருந்து தரப்படுகிறது.
மருந்து சாப்பிடும்போது நாம் சாப்பிடும் உணவு அதே காரணத்தைத் தூண்டும் பொருளாக அமைந்துவிடக் கூடாது. அப்படி அமையும்போது எதிர் விளைவுகள் ஏற்படும்.
மருந்து சாப்பிடும்போது நாம் சாப்பிடும் உணவு அதே காரணத்தைத் தூண்டும் பொருளாக அப்படி அமைந்துவிடக் கூடாது. அப்படி அமையும்போது எதிர் விளைவுகள் ஏற்படும். மருந்து பயன் தராமல் போய்விடும். எடுத்துக்காட்டாக செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. பசியே இல்லை என்று சித்த மருத்துவரிடம் நாம் சொல்லும்போது, நமக்கு செரிமான உறுப்புகளின் செயல் திறனை சரிப்படுத்தும் மருந்துகளை அவர் தருகிறார் என்றால் மாமிசம், கொழுப்பு, காரம் நிறைந்த உணவுப் பொருள்களை விலக்கச் சொல்லுவார். இதுதான் பத்தியம். ஏற்கனவே பழுதடைந்த உறுப்புக்களை சரி செய்து கொண்டிருக்கும்போதே, அதிகமாக அவற்றை வேலை செய்ய வைப்பது என்பது தவறல்லவா?
மாங்கொட்டை பருப்பு, கறிவேப்பிலை, சுண்டைக்காய் வற்றல், வெந்தயம், ஓமம் இவற்றைச் சம அளவு எடுத்து வெறும் வாணலியில் இலேசாக வறுத்து நைஸாக பொடிக்கவும். காலை, மாலை, இரு வேளையும், புளிப்பில்லாத தயிரில் இரண்டு டீஸ்பூன் பொடியைக் கலக்கி சாப்பிட்டு வரவும். வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, பசியின்மை ஆகிய உபாதைகள் நீங்கும்.
நன்றி: Home Remedies for Common Ailments.
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் ஏப்ரல் 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்