காளியம்மாள்!

The Goddess Kaliyammal
The Goddess KaliyammalImg credit: AI Image
Published on
MM strip
MM strip

"யாதுமாகி நின்றாய் - காளி

எங்கும் நீ நிறைந்தாய்

தீது நன்மையெல்லாம் - காளி

தெய்வ லீலையன்றோ"

காளியம்மன் பற்றி பாரதி பாடிய பிரபலமான பாடல். உலகை இயக்கும் பேராற்றலாக, ஞான வடிவாக, தாயாக பார்க்கிறார்.

சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி உள்ளிட்ட சங்க கால இலக்கியங்களில் காளி தொடர்பான செய்திகள் ஏராளமாக உள்ளன. திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற 'பழையோள் குழவி' என்ற வார்த்தை காளியை குறிக்கிறது.

விஜயாலய சோழன் காலத்தில் இருந்தே சோழ நாட்டின் எல்லைப் பகுதிகளில் காளிக்கென்று தனி கோயில்கள் உருவாக்கப்பட்டன.

காளியோடு தொடர்புடையவர்கள் பற்றியும், காளி தொடர்பான வெவ்வேறு செய்திகளை பற்றியும் பார்ப்போம்.

1. மகாகவி காளிதாஸ்:

"காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே.." - என்று கே. பி. சுந்தராம்பாள் அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் பாடல் 'மகாகவி காளிதாஸ்' படத்தில் இடம்பெற்றது.

காளி தேவியின் அருளால் கவி பாடும் திறன் பெற்றதால் 'காளிதாசன்' என்று அழைக்கப்பட்டார்.

சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

இதையும் படியுங்கள்:
தார் பாலைவனத்தில் ஒரு ‘தையல்’ புரட்சி: ருமா தேவியின் சாதனைப் பயணம்!
The Goddess Kaliyammal

2. காளி என்.ரத்னம்:

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடகக் குழுவில் சுமார் 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை நிர்வாக மேலாளராகவும் பணியாற்றி உள்ளார் என்.ரத்னம். காளி வேடத்தில் 'கோவலன்' என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்ததால் அந்த வேடத்தில் அவருக்கு முன்பு நடித்த நடிகர் 'காளி' என்ற பட்டத்தை வழங்கினார். சபாபதி படத்தில் டி. ஆர். ராமச்சந்திரனும் இவரும் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

3. காளி:

'கெட்ட பையன் சார் இந்த காளி' - முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற மாஸ் பஞ்ச் டயலாக். ரஜினிக்குள் ஒளிந்து கிடந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படம். இன்றும் 'காளி' என்றால் ரஜினி தான் நினைவில் வருவார்.

உமாசந்திரன் அவர்கள் எழுதிய நாவலை திரைப்படத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை அமைத்து 'காளி'யை இன்றும் மனதில் நிற்கும் அளவிற்கு தந்தார் இயக்குநர் மகேந்திரன். காளி உக்கிரமானவன், முள் போன்றவன்.

அந்த முள்ளுக்குள் ஒரு மலர் எப்படி தங்கைக்காக பூக்கிறது என்பதே ஒரு வரிக்கதை ஆக மாறி பிரமாண்டமான வெற்றியை பெற்றது.

4. பத்ரகாளி:

எழுத்தாளர் 'மகரிஷி' அவர்களின் நாவலை திரைப்படமாக எடுத்தார்கள். சிவகுமார், ராணி சந்திரா, தேங்காய் சீனிவாசன் நடித்து ஏ. சி. திருலோகசந்தர் இயக்கிய படம். சாதாரண குடும்பப் பெண் தீய சக்தியை அழிக்க பத்ரகாளியாக மாறுவதுதான் படத்தின் ஒன்லைன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இசைஞானியின் பாடல்கள் முக்கிய காரணம்.

5. காளியாட்டம்:

தஞ்சை மாவட்டத்தில் அம்மன் கோயில் திருவிழாக்களில் காளியாட்டம் நடைபெறும். காளி வேடம் போடுபவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான்.

அவர்கள் திருவிழா தொடங்கிய நாளில் இருந்து கடுமையான விரதம் இருப்பார்கள். தஞ்சை நகரில் உள்ள கோடியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா. மகாவிஷ்ணுவின் அம்சமாக பச்சைக்காளியும், சிவபெருமானின் அம்சமாக பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள்.

மாசி மாத கடைசியில் அல்லது பங்குனி மாத முதல் வாரத்தில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிலும் பக்தர்கள் காளி வேடமிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்திய வரலாற்றின் இலக்கணத்தையே மாற்றிய ஐந்து 'நெருப்புப் பெண்கள்'!
The Goddess Kaliyammal

6. காளி பாதம்:

'காளி பாதம்' என்ற பெயரில் முனைவர் ப. சரவணன் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். தனது மகள் பள்ளி நாடகத்தில் காளி வேஷத்தில் நடிக்கப் போகிறாள் என்பதை அறிந்த தந்தை அதற்கு தேவையானதை தேடுகிறார்.

மேக்கப் போட சுவர் விளம்பரம் எழுதும் ஒரு பெரியவரை அணுகி விபரமாக சொல்கிறார். அவர் சில சம்பிரதாயங்களை கடைபிடிக்க சொல்கிறார். ஒரு நிமிடம் மட்டுமே வரும் அந்த வேடம் என்றாலும் அந்த தகப்பன் எல்லாவற்றிற்கும் சரி என்கிறார். வேஷம் போட்டு முடித்ததும் அவர் கண்களுக்கு அந்த சிறுமி காளியாகவே தெரிகிறாள். ரேஷ்மா என்று அவள் அம்மா பெயரை சொல்லி அழைத்த போது, பதிலுக்கு அந்த சிறுமி, "நான் காளி" என்கிறாள்.

காளிக்கு தன் ரத்தத்தை எடுத்து திலகமிட்ட போது சிறுமியின் வலது பாதம் பெரியவரின் தொடையின் மீது இருந்தது. எல்லாம் முடிந்து அவர் எழுந்த போது வேட்டியில் காளியின் பாதம் பதிந்திருந்தது.

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தான் என்று பழைய பழமொழி உள்ளது.

ஆனால், இந்த கதையில் எல்லாமே தலைகீழ். ஒரு நிமிடம் வந்தாலும் காளி மாகாளிதான். அதை சிரத்தையோடு செய்ய நினைக்கும் தகப்பன்.

தன் பெயர் ரேஷ்மா என்றாலும் அந்த நேரம் தான் 'காளி' என்பதை உணரும் சிறுமி.

வெறும் வேஷம் தான் என்று நினைக்காமல் முழு ஈடுபாட்டுடன் செய்த பெரியவர்.

எங்கும் நிறைந்த காளியாக இவர்கள் அனைவருக்கும் காளி தெரிகிறாள்.

'யாதுமாகி நின்றாய் காளி' க்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கதை. காளி நம் அருகில் நிற்கிறாள். எங்கும் நிறைந்துள்ளாள். தீமைகளை நம்மிடமிருந்து போக்குவாள்.

அவள் நம் அன்னை. அவள் 'காளியம்மாள்'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com