‘பெருமைமிகு பெருசுங்க!’

‘சிரி’ கட்டுரை
ஓவியம்; பிள்ளை
Published on

-அகிலா கார்த்திகேயன்

இது ஒரு ‘சிரி’ கட்டுரை மட்டுமே! சீரியஸா எடுத்துக்காம சும்மா சிரிச்சுட்டுப் போலாமே... ப்ளீஸ்!

நா' காக்கா நாராயணன்:

எண்பது வருடங்களை விழுங்கி ஏப்பமிட்டு எட்டு வருடங்களான பின்னும் உடம்புக்கு ஒத்துவராத கண்டதையும் தின்று ஏப்பமிட்டுக்கொண்டே இருக்கும் சுகம் இவர். இதன் காரணமாக பி.பி., ஷுகர் இத்யாதிகளை எப்போதுமே உயர்மட்டத்திலேயே நிலை நிறுத்தி, தன் ஜூனியர் சந்ததிகளை நிலைகுலைய வைப்பவர்.

பல் அத்தனையும் கொட்டிப் போனதில், நாற்பதாயிரம் கொட்டி பல் செட்டைக் கட்டிக்கொண்டதே தன் கட்டுக்கடங்கா நாவுக்கு செட்டு சேர்க்கத்தான். பிள்ளையும், மாட்டுப்பெண்ணும் காப்பிக்கு சர்க்கரை போடாமலும், இவரின் பி.பி.க்கு புளியோதரை காட்டாமலும் கட்டுப்படுத்தி டயட்டை இறுக்கிப் பிடிப்பதை, இரக்கமற்ற கொடுமையாக யாரைக் கண்டாலும் சித்தரிப்பார்.

வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று வழியில் தென்படும் வண்டிக்கடையில் வாழைக்காய் பஜ்ஜியை வண்டி எண்ணெயோடு உள்ளே தள்ளிவிட்டு பி.பி.யை கணிசமாக ஏற்றிக்கொண்டு தள்ளாடி கீழே விழ பார்ப்பார்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் தன் பெண் வீட்டுக்குப் போய் ஒரு வாரம், பத்து நாளென்று தங்கிவிட்டு வருவார். 'பாவம் அப்பா நாக்கு செத்துப்போச்சு' என்று உச்சு கொட்டிக்கொண்டு உப்புரைப்பாக மகள் உபசாரம் செய்து உடம்பின் உப்புசாரத்தை ஏற்றிவிட, படுத்த படுக்கையாகத் திரும்பிவருவார். பிறகு நார்மல் கண்டிஷனுக்கு வர நர்சிங்ஹோமுக்கு அழவேண்டிவரும்.

'வீம்பு' விசாலம் மாமி:

சென்னையில் பிள்ளையிடம் இருக்கமாட்டேன் என்று வீம்பு பண்ணிக்கொண்டு மாயவரம் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் தனியாக குக் பண்ணிக்கொண்டிருக்கும் கிழவி.

'இப்படி அம்மாவை தனியா தவிக்க விட்டிருக்கியே' என்று பலர் கேட்டு மகனின் மரியாதையை மட்டுப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மெனக்கெட்டு மெட்ராஸிலிருந்து மகன் வந்து அடிக்கடி பார்த்துவிட்டுச் சென்றாலும், 'யார் என்னை வந்து எட்டிப் பாக்கறா?' என்று அநியாயத்துக்கு ஓர் இமேஜை உருவாக்கிக்கொள்ளும் குணம் இந்தப் பாட்டிக்கு!

ஒரு முறை வழுக்கி விழுந்து காலை உடைத்துக் கொண்டபோதும் மாயவரம் எல்லையைத் தன் உடைந்த கால் தாண்டாது என்று ஒற்றைக்காலில் அங்கேயே ஒரு நர்சிங்ஹோமில் படுத்து, பிள்ளையையும், மாட்டுப் பெண்ணையும் ஒரு மாத காலம் படுத்தி எடுத்தவள்.

இதையும் படியுங்கள்:
இந்த 9 குணங்கள் உடையவரா நீங்க? அப்போ உண்மையிலேயே நீங்க ரொம்ப அழகானவங்க!
‘சிரி’ கட்டுரை

'வயத்தெரிச்சல்' வாசுதேவன்:

ஜூனியர் சிட்டிசன்கள் ஜாலியாய் இருப்பது வாசுதேவனுக்குப் பொறுக்காது. 'பொண்டாட்டியையும், ரெண்டு பசங்களையும் கூட்டிண்டு சினிமா போயிட்டு வர்றான். ஒரு டிக்கட்டே 150 ரூபாயாம்' என்று பெருமூச்சு விடுவார்.

'இன்டர்நெட்டுக்கே மாசம் ரெண்டாயிரம் ஆறது ' என்று புலம்புவார்.

'வாஷிங்மெஷின்லே போடற பவுடருக்கு மாசம் நானூறு ஆகுது அக்கிரமமா இல்லே' என்று இவர் மூக்கை நுழைக்காத விஷயங்களே இல்லை.

இத்தனைக்கும் ஒரு பைசா இவருடையதல்ல. தான் ஒரு சீனியர் சிட்டிசன் என்பதால் மட்டுமே தலையிட உரிமை பெற்றவர்போல அங்கலாய்ப்பவர்.

ஏ.ஸி.யைப் போட்டு படுத்துக்கொண்டிருக்கும்போது 'அடுத்த மாச கரண்ட் பில் மூவாயிரத்தைத் தாண்டப் போறது' என்று வெளியில் ஒரு சீனியர் சிட்டிசன் உஷ்ணப் பெருமூச்சு விட்டால், உள்ளே படுத்துக்கொண்டிருக்கும் ஜூனியர்களுக்கு ஏ.ஸி.யிலும் எரியாதா?

'சோகம்' சொர்ணாம்பாள்:

எப்போதும் எல்லோரையும் சோகத்திலேயே ஆழ்த்த வேண்டுமென்பதற்காகவே சொர்ணாம்பாளின் குணம், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளதோ என்னவோ!

"ஏண்டா! இலேசா மாரை வலிச்சுண்டே இருக்கு. ராத்திரி ஒண்ணும் ஆகக் கூடாதேன்னு பயமா இருக்கு" என்று தன் மார்பை பிடித்துக்கொண்டு, பீதியைக் கிளப்பும் சொர்ணாம்பாள் என்னவோ ஆழ்ந்து தூங்கிவிடுவார். மற்றவர்களுக்குத்தான் தூக்கம் கெட்டுப்போகும்.

"நீ இன்னிக்கு லீவு போட்டுட்டு டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போயிடு . நீ ஆஃபீஸுக்கு போய் எனக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா..." இப்படி அனேகமாக எல்லா நாட்களிலுமே மற்றவர்களுக்கு பயத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் ரகத்தைச் சேர்ந்தவள்.

இதையும் படியுங்கள்:
அழகும் அதிர்ஷ்டமும்: பெண்களின் உடல் அமைப்பின் பலன்கள்!
‘சிரி’ கட்டுரை

"கை காலெல்லாம் ஒரே வலி. அந்த டாக்டர் என்னவோ பி.பி. நார்மல்னு சொல்றான். எனக்கு அப்படி தெரியலே...ரொம்பவும் ரத்த அழுத்தம் இருக்கறாப்போலத்தான் தலையை சுத்துது... ஹார்ட் அட்டாக் எல்லாம் 'மலர்'லேதான் நல்லா பாக்கறாளாம். ஏதாவது ஒண்ணுனா என்னை அங்கேயே சேர்த்துடு. எழுபத்தெட்டிலே எனக்கு ஒரு கண்டம் இருக்குன்னு உங்க அப்பா, எழுதி வெச்சிருக்கார்."

"அடுத்த தீபாவளிக்கு இருப்பேனோ என்னவோ" என்று சோகமாக சோமாசு ஒன்றினை பிட்டுத் தின்பாள்.

"போ பாட்டி. போன தீபாவளியின்போதும் இதையே சொல்லித்தான் ஏமாத்தினே" என்று பேத்தி சொர்ணாம்பாளை, இன்னும் ஒரு மடங்கு மீனா சோகத்தில் ஆழ்த்திவிடுவாள்.

'சீரியல்' சிட்டிசன் சிவசாமி:

"டேய் மரியாதையாய் ரிமோட்டை கொடுத்துடு. தாத்தா அடிப்பேன். இப்போ 'போகோ'வெல்லாம் பார்க்க முடியாது. தாத்தா 'பேத்தி' சீரியல் பார்க்கணும்" என்று தன் மூன்று வயது பேர சிட்டிசனுடன் சண்டைப்போடும் சிவசாமிக்கு எண்பது மைனஸ் மூன்று வயதுதான்! காலையில் காப்பியோடு ரிமோட்டை எடுத்து உட்கார்ந்தாரானால் அலங்கோலங்களிலிருந்து ஆரம்பித்து அர்த்தராத்திரியில் நடந்தது வரை எல்லா சேனல்களிலும் தாவித்தாவி அத்தனை சீரியல்களையும் அத்துபடி செய்துக்கொண்டிருப்பார்.

அக்கிரமத்துக்கு இப்படி இவர் டி.வி.யை ஆக்கிரமித்துக் கொள்வதால், மற்றவர்களுக்கு மிட் நைட் மசாலா மட்டும்தான் மிஞ்சும்.

'ஹையா... தாத்தா, அத்தை வீட்டுக்குப் போயிட்டாராம்... வர பத்து நாளாகுமாம்' என்று மற்றவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு இந்த சீனியர் வெறுப்பேற்றியிருப்பார். ஆனால், இவர் போகும் அத்தை வீட்டிலோ படுமுன்னெச்சரிக்கையாக கேபிளை தற்காலிகமாகத் துண்டித்து வைத்து விடுவார்கள் .

மரகதத்துக்கு விவாகரத்து கிடைத்ததா, மருமகளால் தாக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு என்னவாயிற்றோ, தூக்கு போட்டுக்கொள்ள கயிறை எடுத்த காதம்பரி, என்னவானாள் போன்ற கவலைகளோடு இரண்டு நாளுக்கு மேல் இருப்புகொள்ளாமல் சிவசாமி, மீண்டும் தன் இருப்பிடமே திரும்பி இங்கிருப்பவர்களை டி.வி.யிடமிருந்து விரட்டுவார்.

'மடி ஆச்சாரம்' மதுரம் மாமி:

அடுக்குமாடி இடுக்கு வசிப்பில்கூட தன் மடிக்கு, ஒரு பிடி குந்தகம் வரக்கூடாதென்று மதுரம் பாட்டி, மற்றவர்களை வருத்தெடுப்பாள்.

தவழ்ந்து வரும் கொள்ளுப்பேரன் பட்டுவிட்டால்கூட தன் மடி தள்ளுபடியாகிவிடுவதாக நிர்ணயம் செய்துக் கொண்டு மதுரம், ஒரே நாளில் ஏழெட்டு முறை குளித்து தண்ணீர் கஷ்ட காலங்களில் மற்றவர்களின் கண்ணீரைப் பெருக்கிவிடுவாள்.

ஏகாதசி, கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை என்று மாதத்தின் முக்கால்வாசி நாட்களை தன் மடி சாம்ராஜிய கட்டுப்பாட்டுக்குள் பாட்டி, வைத்திருப்பதால் வீட்டில் சிறுசுகள் விரும்பும் வெங்காயத் துவையலோ, பூண்டு ரசமோ, வெஜிடபிள் பிரியாணியோ தலைகாட்ட முடியாது

'வேகபாண்ட்' வெங்கடகிருஷ்ணன்:

ஆங்கில அகராதிப்படி vagabond என்பதற்கு நாடோடி, சோம்பி திரிபவன் என்றெல்லாம் அர்த்தம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், வெங்கடகிருஷ்ணன் அப்படி ஒன்றும் சோம்பல் ஆசாமியல்ல. தன் எண்பது ப்ளஸ் வயதிலும் 'துறுதுறு' என்று ஒரு நாளைக்கு ஓர் ஊராக சுற்றி தன் பரம்பரை சிறுசுகளை, பக்பக்கென்று பயப்பட செய்துக்கொண்டிருப்பவர்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பப்பை பலப்பட பனங்கிழங்கு பெஸ்ட்!
‘சிரி’ கட்டுரை

பர்த்டே இன்விடேஷன் முதல் பத்துக்கான பத்திரிகை வரை எது வந்தாலும் பயணத்தை ஏற்றுக்கொண்டு ஊரைச் சுற்றும் வயோதிகர். பயணமென்றால் இவருக்குப் பால்பாயசம்!

"அப்பா எங்கேயிருக்கே? வேலூர்லேயா... நாளைக்கு மேட்டூர் போயிட்டு அடுத்த நாள் எங்கே?" என்று மதுரை மகன், கேட்டறிந்து கொள்ளும் அளவில், இவரது சுற்றுப்பயணம் அமைந்திருக்கும்.

"என் ஒன்றுவிட்ட மச்சினனின், மாமா பேரனுக்கு, ஆயுஷ்யஹோமம். மனுஷாளை விட்டுக்கொடுக்க முடியுமா?" என்று திரிபவர்.

"போனமுறை சேலத்திலே ரோடை கிராஸ் பண்ணும்போது ஒரு பஸ்லே மாட்டிக்க இருந்தேன்''

''குருவாயூர்லே கூட்டத்தில் மாட்டிக்கொண்டு தொலைந்தே போயிட்டேன்."

''பெங்களூர்லே மசால் தோசை தின்னுட்டு மயக்கமா விழுந்துட்டேன்"-

என்றெல்லாம் இவர் தனது பயண அனுபவங்களை சொல்லும்போது கேட்கும் பிள்ளை, பெண்களுக்கு கதிகலங்கும்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் பிப்ரவரி 2010 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com