

தேவகி, ஒரு சமூக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; ஓவியர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.
அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண, காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.
அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு நிருபர் அவரிடம் பேட்டி காணும் போது:
“மேடம், நீங்கள் சமூக அக்கறை கொண்டவர்; பெண்கள் விஷயத்தில் குரல் கொடுக்கத் தவறியது இல்லை. அது அவர்களுடைய ‘உடையைப் பற்றியோ, மதரீதியான தடைகள் பற்றியோ’, ‘அடிப்படை நீதி’ எல்லா மனித குலத்திற்கும் பொருந்தும் என்று பேசிவந்து உள்ளீர்கள்.”
என்னுடைய நேரடியான கேள்வி...
நடிகைகளும், அவர்களைப் பின் தொடர்ந்து பெண்கள் (பள்ளி, கல்லூரி உட்பட) தங்களை கேலிப்பொருளாகக் காட்டிக் கொண்டு, முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
"இது ஒரு மாயை. Like பெருவதற்காக செய்யப்படும் ஒரு விளையாட்டு வலை, சிறிது காலம் கழித்து புளித்துவிடும். மனிதனுக்கு மறதியே வரம்.
இது தனி மனித உரிமை; மேலும் இந்த செயல் பிறர் மனதை, மதத்தை, இனத்தை புண்படாத விதத்தில் இருக்கும் பட்சத்தில் இதை, ஒரு ‘பொழுது போக்காக’ எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே மேல்!
ஆண் தன்னை ஆளுமையாக காட்டிக்கொள்ள பல வழிகளை நாடுகிறான். பெண்கள் தங்கள் 'ஆளுமையை' வெளிக்கொணர்கிறார்கள் என்று இதையும் ஒருவகையில் எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.
இதில் பெண்மை, கற்பு என்று தொடர்புப்படுத்தி பேசுவது அபத்தம். இது ஒரு மனப்போராட்டத்தின் வெளிப்பாடு; இதை ஏற்றுக் கொள்வதும்; நிராகரிப்பதும் அந்தந்த சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். இதுவே உளவியில் ரீதியான பதிலாகவும் இருக்கும்.
வேறு ஏதாவது ‘விஷயம்’ இருந்தால், இந்த காணொளியைப் பார்ப்பவர்கள், ‘கமெண்ட்’ செய்ய கேட்டுக் கொள்கிறேன். சமூகமாக இருந்து சுமூகமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
மேலும் கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், அரசியலுக்கு அரசியல் வேறுபடும்.
அமெரிக்காவில் 'பொருளதாரக் குற்றம்' பெரிய குற்றம். ஒருவருடைய விருப்பத்தில் அல்லது சுதந்திரத்தில் தலையிட அரசுக்கும் உரிமை இல்லை.
ஆனால், நம் நாட்டில் 'தலைகீழ்.' பொருளாதாரக் குற்றம் மன்னிக்கப்படுகிறது. தனிநபரின் அந்தரங்கம் பேசு பொருளாக மாறுகிறது.
வாழ்வியலும், ஒழுக்கமும் பொருளாதாரத்தில் இருந்து மீட்கப்பட வேண்டும். தெளிவு வரும்; தெளிவோம்!"
பேட்டி இனிதே முடிந்தது!