

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை கூடுகிறது. எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடும் பெண்களில் பலரும் உடற்பயிற்சி, டயட் என்று முயற்சித்தாலும் எடை குறைவது என்பது பெரும் போராட்டமாகவே இருக்கிறது. அதற்கான காரணத்தையும் தீர்வுகளையும் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஏன் 40 வயதுக்கு மேல் எடை கூடுகிறது?
40 வயதுக்கு மேல் பெண்களின் இயற்கையான உடலமைப்பு காரணமாக எடை கூடத் தொடங்குகிறது. என்னதான் கடினமான உடற்பயிற்சிகள் செய்தாலும் கவனத்துடன் சாப்பிட்டாலும் எடை குறைய மறுக்கிறது. பொதுவாக பெண்களுக்கான எடை மேலாண்மை என்பது வெறும் கலோரிகள் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. ஒரு பெண் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது உடல் பாதுகாப்பாக உணராது. அதனால் எடையும் குறையாது.
மன அழுத்தம் Vs எடை அதிகரிப்பு
பெண்களின் பாதுகாப்பு உணர்விற்கும் உடல் எடைக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. பெண்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும்போது அதை ஆபத்து மற்றும் அச்சுறுத்தலாக புரிந்து கொண்டு தாம் பாதுகாப்பாக இல்லை என அவர்களின் மனம் நம்புகிறது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக உடல் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதனால் பெண்கள் உட்கொள்ளும் உணவின் பெரும்பகுதி கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகிறது.
நிலையான மன அழுத்தம், கார்ட்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோனின் அளவை அதிகமாக வைத்திருக்கிறது. இதனால் உடலில் கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கும்.... குறிப்பாக வயிற்றை சுற்றிலும் இருக்கிற பகுதிகளில். பொதுவாக குழந்தை பெறும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா பெண்களுக்குமே 40 வயதுக்கு மேல் உடல் எடை கூடுவது இயற்கை. ஒரு பெண் எவ்வளவு பாதுகாப்பற்றதாக தன்னை உணர்கிறாளோ அவ்வளவு அதிகமாக அவள் உடல் எடையை அதிகரித்துக் கொள்கிறாள். ஒரு பெண்ணின் நரம்பு மண்டலம் பாதுகாப்பற்றதாக உணரும் போது அது அந்த எண்ணத்தை ஆழமாக தனக்குள் பதிவு செய்து கொள்கிறது. அதைப்போல அவளுடைய உடல் அதன் சேமிக்கப்பட்ட ஆற்றலை, உடல் எடையை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.
எடை குறைய உதவும் எளிய வழிகள்
எடையை குறைக்க விரும்பும் பெண்கள் முதலில் கவனிக்க வேண்டியது உணர்ச்சி மற்றும் மன அமைதியைத் தான். ஆபத்து நீங்கி, தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நரம்பு மண்டலத்திற்கு தெரிவிக்க வேண்டும். சோர்வாக இருக்கும் போது ஓய்வெடுக்க வேண்டும். எடை இழப்பு முயற்சியில் ஈடுபடும்போது தன் மீது சுய அன்பும் கருணையும் மிகவும் அவசியமாகும். யோகா, தியானம், நீண்ட கவனத்துடன் கூடிய நடைபயிற்சி வெதுவெதுப்பான நீரில் குளிப்பது போன்ற அமைதியான செயல்பாடுகளை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிகள் உடல் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்க அனுமதிக்கும்.
நரம்பு மண்டலம் அமைதி அடையும் போது கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். கவனத்துடன் சாப்பிடுதல், விரும்பிய வேலையை செய்தல் போன்றவை நல்ல பலன் தரும். கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக மனதில் ஆழ்ந்த அமைதியை கொண்டு வருவதன் மூலம் உடலை பாதுகாப்பாக உணர வைக்கலாம். இதன் பிறகு செய்யும் நடைப்பயிற்சி, டயட் போன்றவை நல்ல பலன் தந்து பெண்களின் உடல் எடையை குறைக்க உதவும்.