கவிதை: கோடையும் நாம் கொண்டாடும் பருவந்தான்!

Summer Celebration
Summer Celebrationcredit AI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
MM strip
MM strip

ஒவ்வொரு நாளின் இரவும் பகலும்போல்

கோடையும் குளிரும் ஆண்டின் இருபக்கங்கள்!

அதனதன் போக்கில் அவைகள் போக

அதனை யறிந்தே நாமும் செயல்பட்டால்

வாழ்க்கை முழுதுமே வசந்த காலமே!

வசந்த காலத்தில் வண்ண மலர்கள்

பூத்துக் குலுங்கிப் புளகாங்கிதம் பெருக்கும்!

வண்ணங்கள் எப்போதும் மனதை மயக்கி

மகிழ்வைத் தந்து உளத்தில்நல்ல உற்சாகம்பெருக்கி

களிப்பை நெஞ்சில் கழன்றிடச் செய்யும்!

வானவில்லினை வானில்நாமும் பார்க்கும் போதிலே

தோன்றும் இன்பம் சொற்களைக் கடந்தது!

கோடையில் கதிரவன் கொஞ்சமும் ஓய்வின்றி

தகிப்பதால் நாமும் சங்கடப் படுகின்றோம்!

வெப்ப நாட்டில் பிறந்ததின் பலனிது

என்ற எண்ணமே இதற்கு விடையாகும்!

சூரிய ஒளியே சுகங்களை நல்கும்

அருமருந்து என்பதை அறிந்திடல் நலமே!

சம்மர் பிறந்திட சகல கோயில்களிலும்

களைகட்டும் திருவிழா களிப்பினைப் பெருக்கிடும்!

மார்ச் தொடங்கி ஜூன் வரையிலும்

வெயிலே இங்கு பிரதானம் என்றாலும்

ஏப்ரல் மேயில் கத்தரிவெயில் கலங்கிடச் செய்யும்!

பக்குவமான பழைய சோற்றுடன் சின்னவெங்காயத்தையும்

சேர்த்தே சாப்பிட உடலின்வெப்பம் ஏகமாய்க்குறையும்!

சீரகத் தண்ணீரைச் சிறுகச் சிறுகக் குடித்தே வந்திடக் குடலும் குளிரும்!

கம்பஞ் சோற்றைக் கரைத்தே குடித்திட்டால் கடின உஷ்ணமும் காணாமலே போகும்!

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்கா? எளிய பாட்டி வைத்தியம் வீட்டிலேயே இருக்க... why worry?
Summer Celebration

பனையின் நல்ல பக்குவப் பதனீரையும் நுங்கையும் அடிக்கடி சுவைத்திடச் செய்தால் ஓடிஒதுங்க உடலுஷ்ணம் இடந் தேடும்!

எலுமிச்சை சாறுடன் கரும்பு வெல்லத்தைக் கரைத்த பானகத்தை

உச்சி வெயிலின் உக்கிர நேரத்தில் குடித்தே பழகிடக் குறையும் பித்தம் குதூகலம் உயரும்!

எல்லாக் காலத்தையும் இனிதாக்கி மகிழ்ந்திடவே அனைத்தும்

உண்டு அதனை அறிந்து செயல் பட்டாலே சிறந்திடும் நம்வாழ்வு!

‘உந்தன் வாழ்க்கை உனது கைகளில்’ என்பதே நாலடியார் இயம்பிடும் அறிவுரை!

மானிடராய்ப் பிறத்தலே மாவுலகில் உயர்வென்று சொன்னவர் எவரும் சோப்ளாங்கி இல்லை!

உணர்ந்து அறிந்தே உலகோர் அறிந்திட பலவற்றையும் சொன்னார் பழந்தமிழ் முன்னோர்!

வகுத்த பாதையில் வளம் சேர்த்திடவே நாமும் நடப்போம்!நலமுடன் வாழ்வோம்!

கோடையும் நாம் கொண்டாடும் பருவந்தான் என்பதை உலகுக்கு உரத்தே சொல்வோம்!

logo
Kalki Online
kalkionline.com