வயிற்றுப்போக்கா? எளிய பாட்டி வைத்தியம் வீட்டிலேயே இருக்க... why worry?

வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு சிறந்த பாட்டி வைத்தியங்கள் சில உள்ளன. அவற்றை இப்பொழுது காணலாம்.
diarrhea remedies
diarrhea remedies
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வயிற்றுப்போக்கு என்பது ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறைக்கு மேல் நீர் போன்ற மலத்தை வெளியேற்றும் ஒரு பொதுவான செரிமான கோளாறாகும். இதை பேதி, வயிற்றுக்கழிச்சல், டயரியா என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கம். இது பொதுவாக வைரஸ், பாக்டீரியா தொற்று அல்லது அசுத்தமான உணவு/ நீரால் ஏற்படுகிறது. வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் நீரிழப்பு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு சிறந்த பாட்டி வைத்தியங்கள் சில உள்ளன. அவற்றை இப்பொழுது காணலாம்.

* பொட்டாசியம் மற்றும் பெக்டின் (pectin) சத்துக்கள் நிறைந்த கனிந்த வாழைப்பழம் ஒன்றை சாப்பிட, மலத்தை இறுகச் செய்து வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

* ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி நன்கு தட்டி, தேன் கலந்து சாப்பிடுவது அல்லது இஞ்சியை தட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சிறிது ஆறியதும் அந்த தண்ணீரை குடிப்பது செரிமான அமைப்பை சரிப்படுத்தி வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை நிறுத்தும்.

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்கு வந்த பின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உண்ண வேண்டிய உணவுகள்!
diarrhea remedies

* தயிர் மற்றும் மோரில் உள்ள புரோபயாடிக்குகள் (probiotics) குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, தொற்றை எதிர்த்து வயிற்றுப்போக்கை விரைவில் கட்டுப்படுத்தும்.

* மாதுளை பழத்தின் சாறை பருக நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் மாதுளையின் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயம் இதனை சிறிது மோரில் கலந்து பருக வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த உதவும்.

* மாங்கொட்டையை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஊற விட்டு, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் மாங்கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பை தட்டி மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இதனை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயம் ஒரு ஸ்பூன் அளவு அரை கப் மோரில் கலந்து பருக வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும்.

* வறுத்து பொடித்த சீரகப் பொடியை வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து குடிப்பது, வயிற்று உப்புசத்தை போக்கி, செரிமானத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கை குறைக்கும்.

* வெந்தயத்தை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து, சிறிது ஆறியதும் மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் சமயம் ஒரு ஸ்பூன் வெந்தய பொடியை அதிகம் புளிப்பில்லாத அரை கப் மோர் அல்லது தண்ணீரில் கலந்து பருக வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தி விடும்.

* அரிசிக் கஞ்சி குடிப்பது உடலில் நீர்ச்சத்தை நிலை நிறுத்தி மலத்தை இறுக்கவும் செய்யும். வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயம் நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருப்பதற்கு அடிக்கடி திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

* காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பதும், பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

* லவங்கப்பட்டை பொடி 1/2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும். லவங்கப்பட்டை அதன் சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் வெப்பமூட்டும் பண்புகளால் வயிற்றுப்போக்கிற்கு சிறந்த பலனளிக்கிறது.

* வயிற்றுப்போக்கிற்கு ஒரு பாரம்பரிய மருந்தாக பயன்படும் கடுகை பயன்படுத்தலாம். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இதனை மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் சமயம் 1 கப் தண்ணீரில் 1/4 ஸ்பூன் கடுகுப் பொடியை கலந்து குடிக்கலாம்.

* ஜவ்வரிசியை வெறும் வாணலியில் சிறிது வறுத்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும். இந்த ஜவ்வரிசி கூழில் சிறிது உப்பு, மோர் கலந்து பருக வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும்.

* வயிற்றுப்போக்கு அத்தியாவசியமான தாதுக்களை குறைக்கும். பொட்டாசியம் மற்றும் சோடியத்தை ஈடுகட்ட எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்கள் அல்லது தேங்காய் தண்ணீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

* உடலில் நீர்ச்சத்தை நிலை நிறுத்த ஓ.ஆர்.எஸ் (ORS) கரைசல், இளநீர், அரிசிக் கஞ்சி குடிப்பது போன்றவை அவசியம். அத்துடன் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையும் எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கை நிறுத்தி விடும்.

இதையும் படியுங்கள்:
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு இருக்கிறதா? அப்போ இந்த வைரஸ் தாக்கலாக இருக்கலாம்... அலட்சியம் வேண்டாம்!
diarrhea remedies

வயிற்றுப்போக்கு இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது ரத்தம் கலந்த மலம் வந்தால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com