- லக்ஸ்மன் சங்கர்
மாதவ் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்சைப் பார்த்தான். மணி 12. அபாரமாக போர் அடித்தது.
“ராம் வீட்ல இருக்கானான்னு பாக்கலாம்.” ஐ ஃபோன் 15 ஐ டயல் செய்தான் “ராம், என்னடா பண்ணின்டுருக்க?”
“ஹாய் மாதவ், வறியா? டெஸ்ட்டுக்கு ஜாயிண்ட் ஸ்டடி பண்ணலாம் – ஷில்பா, ஸ்ரீனி இங்கதான் இருக்காங்க.”
“நோ, ஐ வான்ட் டு சில். அதுக்குத்தான் கூப்டேன். நோ ப்ராப்ளம். தேவைக்கு மேல படிச்சுட்டு உருப்படாமப் போங்க” மாதவ் சிரிப்புடன் சொன்னான்.
“மச்சி, ஒன்னோட தலைக்கனம் யாருக்கும் வராதுடா. எனிவே என்ஜாய் யுவர் டே.”
அறையை விட்டு வெளியே வந்தான். அப்பா வழக்கம்போல அஃபிஷியல் டூர். அம்மா அனேகமாக சோசியல் சர்வீஸ் என்று எங்காவது போயிருப்பாள்.
“ஜலங்க், ஜலங்க்” பக்கத்து அறையில் சத்தம். பாட்டி! கேலியாக சிரித்துக்கொண்டான்.
பாட்டிக்கு 80 வயது இருக்கும். பில் கேட்ஸ்ஸைவிட பிசி. காலை 4 மணிக்கு எழுந்தால் (அவன் அந்த சமயத்தைப் பார்த்ததேயில்லை) இரவு 10 மணிக்குத்தான் படுப்பாள். தினம் 2 மணி நேரம் பூஜை. நியூஸ்பேப்பர் முழுக்கப் படிப்பாள். ஸ்போர்ட்ஸ் பேஜஜைக்கூட விட மாட்டாள். பாட்டி அந்தக் காலத்து 10ங்க் கிளாஸ். பிபிசி, சிஎன்என், சில சமயம் புளூம்பெர்க் டிவி கூடப் பார்ப்பாள் – ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் கொஞ்சம் தெரியும்!
வீட்டில் யாராவது காலிங் பெல் அடித்தால் “யாரு வந்திருக்காங்க” என்று எல்லாரையும் பிடுங்கி எடுத்து விடுவாள்.
பாட்டியிடம் அவனுக்கு பயங்கரக் கோபம் வந்தது ஒரு நாள் இந்தியா -இங்லாண்ட் டெஸ்ட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது, விராட் கோஹ்லி தெய்வீகமான ஃபார்மில் இருந்தான். பாட்டி திடீரென்று “சி.கே. நாயுடு மாதிரி ஒருத்தரும் ஆடமுடியாது. ஹெல்மெட்கூட இல்லாம அவன் எல்லா ஃபாஸ்ட் போலர்ஸையும் அடிச்சு நொறுக்குவான். நா நேர்லேயே பாத்திருக்கேன்” என்றாள்.
சொல்லி வைத்த மாதிரி அடுத்த பால் கோஹ்லி அவுட்.
மாதவ் ஆத்திரத்துடன் “பாட்டி, ஒன்கிட்ட யாராவது ஒப்பீனியன் கேட்டா சொல்லு. இல்லேன்னா இந்த மாதிரித் தாறுமாறாப் பேசாதே” என்று கத்திவிட்டுப் போய்விட்டான். அதன்பிறகு சில நாட்கள் அவன் பாட்டியுடன் பேசவேயில்லை.
அப்பா அம்மாவுக்கு பாட்டியை சீண்டக்கூட நேரம் கிடையாது. அவள் அதற்காக வருத்தப்பட்ட மாதிரித் தெரியவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். மாதவுக்கு அவள் மேல் ஒரு பரிதாபம் கலந்த எரிச்சல். “இத்தனை வயசுக்கெல்லாம் யாரும் உயிரோட இருக்கக்கூடாது” என்று நினைப்பான்.
“ஜலங்க், ஜலங்க்” பாட்டி அறைக்குள் சத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. என்னதான் பண்ணுகிறாள் என்று பார்க்கலாம். அறைக்குள் நுழைந்தான்.
“வாடா மாதவா” பாட்டி வாய் நிறையப் புன்னகையுடன் வரவேற்றாள்.
“பாட்டி, இது என்ன கேம்?” தரையில் நிறையக் கட்டங்கள் – சாக்பீஸ் வெச்சு போட்டிருக்கணும்.
“தாயக்கட்டை. சொல்லித் தரட்டுமா? ரொம்ப இன்டிரஸ்ட்டிங்கா இருக்கும்.”
“சே சே” என்று சொல்ல மனசு வரவில்லை. “ஓகே.”
“மொத்தம் நாலு பேர் விளையாடலாம். ஒவ்வொருத்தருக்கும் ஆறு காய். எல்லாக் கட்டத்தையும் தாண்டி தன் எடத்துக்கே வந்துடணும். எல்லாக் காயையும் எடுத்துக்கிட்டு மொதல்ல தன் எடத்துக்கு வரவன் வின்னர். இந்த ரெண்டு தாயத்தையும் சேர்த்து உருட்டிப் போட்டு என்ன நம்பர் வரதோ அத்தனை கட்டம் முன்னாடி நகர்த்தணும். ஒரு காய் இருக்கற கட்டத்துல இன்னொரு காய் வந்தா, மொதல்ல இருக்கற காய் திரும்ப ஸ்டார்ட்க்கு போயிடணும். இதுக்கு பேர் வெட்டரது. வெட்டினவனுக்கு அட்வான்டேஜ்,”
“ஆஹா, நல்லா இருக்கே” வாய்ப் பேச்சாகச் சொன்னான்.
பாட்டி அகலமாகப் புன்சிரித்தாள். “மாதவா, அந்தக் காலத்துல நா, அக்கா, தங்கை, அண்ணா, தம்பி, கசின்ஸ், மொத்தம் ஒரு பத்து பேர் இருப்போம். ராத்திரி ஆஃப்டர் டின்னர் வெளையாட ஆரம்பிச்சா 2-3 மணிக்குத்தான் முடிப்போம்.”
“கார்ட்ஸ் ஆடிருக்கியா பாட்டி?”
“ப்ரிட்ஜ், ரம்மி, பளஃப்..”
“வாவ், காசு வெச்சு ஆடுவீங்களா?”
“ஒதப்பேன் படவா” செல்லமாகத் தட்டிக் கொடுத்தாள் “ கார்ட்ஸ் மட்டும் இல்ல, பாண்டி, கோலி குண்டு, க்ரிக்கெட் கூட ஆடிருக்கேன்”
“க்ரிக்கெட்டா” மாதவ் வீசிலடித்தான். “நீ பாட்ஸ்வுமானா போலரா”
“ஆல்ரவுண்டர். ஒரு சின்னக் கதை கேளு. எதிர் வீட்டுப் பையன் ரொம்ப ஃபாஸ்டா பௌல் பண்ணுவான். ஆனா, பொண்ணுங்களுக்கு மட்டும் ஸ்பின் போடுவான். நா ஒரு நாள் சவால் விட்டேன், ஃபாஸ்ட் போடச் சொல்லி.”
“அப்பறம் என்ன ஆச்சு?” பரவாயில்லை, கொஞ்சம் உப்பு, காரம் இருக்கிறதே.”
“அஞ்சு பால்ல அஞ்சு ஃபோர், ஆறாவது பால் க்ளீன் போல்ட்”
“அப்பறம் என்ன ஆச்சு பாட்டி?”
“அப்பறமா? அந்தப் பையனையே எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க!”
“ஆஹா, ரெண்டு பேரும் க்ளீன் போல்டா!”
பாட்டி வெட்கப்பட்டாள். பிறகு தொடர்ந்தாள் “மாதவா, எங்க காலத்துப் பசங்க மாதிரி நீங்கள்ளாம் என்ஜாய் பண்ணறதில்ல. படிப்பு ரொம்ப ஜாஸ்தி.”
“அதுவே ஒரு திரில்தான் பாட்டி.”
“ஒனக்கு திரில்தான். ஏன்னா உனக்கு மூளை இருக்கு. உங்கப்பா கிட்டப் பணம் இருக்கு. ஆனா இது ரெண்டும் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க, யோசிச்சுப்பாரு?”
“பாட்டி, சக்ஸஸ் ஈஸியா வராது”
“ஸர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட். இதையேதான் எங்க காலத்துலயும் சொன்னாங்க. நானும் தெனமும் யோசிச்சுப் பாப்பேன். எனக்கு 75 வயசு ஆகுது. ஆனா ஒரு கவலையும் இல்ல. என் வயசுல எத்தன பேரு ரோட்ல இல்ல முதியோர் இல்லத்துல இருக்காங்க? வேற சில பேரு பெத்த பிள்ளைங்க சரியா நடத்தாம கஷ்டப்படாறாங்க? ஒரு எல்லைக்கு மேல ஸர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் ரொம்பக் கொடுமையாயிடும். அந்த எல்லைக்கு மேல எல்லாரோட சந்தோஷமும் கடவுள் கைலதான்.”
அவன் ஆச்சரியப்பட்டான். வீட்டிலே யாருமே கவனிக்காத பாட்டி வாழ்க்கையில் கொஞ்சம்கூட வருத்தமேயில்லாமல் இருப்பதாகச் சொல்கிறாளே! “பாட்டி, ஒன்கிட்ட யாருமே ஜாஸ்தி பேசரதில்லியே, நீ லோன்லியா ஃபீல் பண்ணல?”
“எல்லாரும் பிஸி. அப்படியும் என்ன வசதியா பாத்துக்கறீங்க. இதுக்கு மேல நா எதிர்பாக்கறது நாட் ஃபேர்.”
அவன் பாட்டிக்கு பதில் சொல்வதற்கு முன் ஐஃபோன் அடித்தது. “ஹே விஜய், ஆர் யூ பேக்? வில் மீட் யு ஸுன்” பாட்டியைப் பார்த்தான் “பாட்டி, என் ஃப்ரெண்ட், லண்டன்லேர்ந்து திரும்பி வந்துருக்கான். நா அவனை பார்த்துட்டு 3 மணிக்குள்ள திரும்பிடுவேன். அம்மாகிட்ட சொல்லிடு”
“பார்த்தியா, நா ஒண்ணும் கேட்காமலேயே நீ விஷயத்த சொல்லிட்ட.” பாட்டி சிரித்தாள். “ஃப்ரெண்ட்கிட்ட லார்ட்ஸ் ஸ்டேடியம் எப்படி இருந்ததுன்னு கேளு.”
“பை பாட்டி” மாதவ் வெளியே வந்தான்.
“சில மணி நேரம் யாருமேயில்லாம எவ்வளவு போராயிடுச்சு! ஆனா பாட்டி நாள் முழக்கத் தனிமையா இருந்தும் சந்தோஷமா இருக்காளே” அவன் ஆச்சரியப்பட்டான்!
“ஜலங்க் ஜலங்க்” சத்தம் தொடர்ந்தது.
“பாட்டி, நீ க்ரேட்தான்” அவன் முணுமுணுத்துக்கொண்டான்.