
சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை என்.ஜென்சியை அந்த கல்லூரி ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராக நியமித்துள்ளது. இதுபோன்ற நியமனம் தமிழ்நாட்டில் இதுவே முதல் என்று நம்பப்படுகிறது. கல்வித்துறையில் திருநங்கை பிரதிநிதித்துவத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த நடவடிக்கை பாராட்டப்படுகிறது.
திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி, பள்ளியில் படிக்கும் போதே தன் தந்தையை இழந்தார். அவருடைய தாயார்தான் பூ வியாபாரம் செய்து இவரையும் உடன் பிறந்தவர்களையும் வளர்த்து வந்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜென்சி.
இளநிலை ஆங்கிலப் படிப்பை திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் படித்துள்ளார். அதன்பின் எம்ஏ மற்றும் எம்பில் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்தார், பிஏ மற்றும் எம்ஏ இரண்டிலும் தங்கப்பதக்கத்துடன் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
அப்போதுதான் அவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரியிடம் தனது பாலின அடையாள மாற்றம் குறித்து கூறியுள்ளார். "என் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவர்கள் எனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை," என்று ஜென்சி கூறியுள்ளார். இந்த கால கட்டத்தில் அவருடைய தாயாரும் காலமானார். ஜென்சியின் கல்விப் பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்ததாக இருந்தது.
தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் முடிக்க வந்துள்ளார். தனது எம்ஃபில் படிக்கும்போதே, தனது பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பணத்தை சேமிக்க அறிவிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். எளிமையான பின்னணியில் இருந்து வந்த ஜென்சி, உயர் கல்வியைத் தொடர ஏராளமான சமூக மற்றும் நிறுவன தடைகளைத் தாண்டிச் சென்றார். ஆங்கில துறையில் "சுற்றுச்சூழல் திறனாய்வு" (eco criticism) எனும் தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். இது இலக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளும்.
முனைவர் பட்டம் படிக்க வருடத்திற்கு 7 திருநங்கைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவராக தன் திறமை மூலம் தகுதி பெற்றார் ஜென்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேசிய அளவில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதையடுத்து லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
"என்னுடன் சேர்த்து ஐந்து பேர் இந்தப் பதவிக்கு நேர்காணல் செய்யப்பட்டனர். தகுதியின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்," என்று ஜென்சி கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் அவர் இளங்கலை மாணவர்களுக்கு பொது ஆங்கிலம் மற்றும் பேச்சு ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார், அவர்களும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த கல்லூரியில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் போன்றவைகளை பயன்படுத்தி வருகிறார். டாக்டர் பட்டம் பெற்றவுடன் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவரின் முயற்சியை தமிழக முதல்வர் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
ஜென்சி ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டாலும், விரைவில் நிரந்தர ஆசிரிய உறுப்பினராகிவிடுவார் என்று அவர் நம்புகிறார். "முதல்வர் தனது பதிவில் என்னைக் குறிப்பிட்டதில் நான் பெருமைப்படுகிறேன். இது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, திருநங்கை சமூகத்தின் கண்ணியம், கல்வி மற்றும் சம வாய்ப்புக்கான உரிமையை அங்கீகரிப்பதும் ஆகும்," என்று அவர் ஊடகங்களில் கூறியுள்ளார் .
கல்வியை அனைவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். "கல்வி, வாழ்க்கையை மாற்றும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்துமாறு திருநங்கைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன், என்னைப் பொறுத்த மட்டில் முதலில் நான் பேராசிரியர், அதன் பின்னர் தான் திருநங்கை எல்லாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..