
தமிழ்நாட்டில் சமையலில் அதிகப் பயன்பாட்டிலிருக்கும் காய்களில் ஒன்றாக இருப்பது கத்தரிக்காய் (Brinjal). கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிற காய்கறிகளும் இடம் பெற்றிருக்கின்றன. கத்தரிக்காய்களுக்குத் தென்னிந்தியாவும் இலங்கையுமே தாயக விளைநிலங்களாக இருக்கின்றன.
ஆங்கிலேயரும், ஐரோப்பியரும் இதனை 16 முதல் 17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டனர். கத்தரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரத்திற்கு வளர்கிறது. கத்தரிக்காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தற்போது வேறு சில நிறங்களிலும் கிடைக்கின்றன. தெற்கு, கிழக்காசியப் பகுதிகளில் வரலாற்றுக்கு முந்தையக் காலத்திலிருந்து கத்தரிக்காய் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. இடைக்காலத்தில் அரேபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ, பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்கின்றனர்.
தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன.
எடுத்துக்காட்டாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய், திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய், திருநெல்வேலியில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன. இவற்றுள், வேலூர் முள் கத்திரிக்காய் (Vellore Spiny Brinjal) 2023 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22 அன்று இந்திய அரசின் புவிசார் குறியீடு தகுதி பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற முதல் கத்திரிக்காய் வகையான வேலூர் முள் கத்திரிக்காயானது, வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், கீழ்வைத்தியான் குப்பம், வேலூர், காட்பாடி, பேரணாம்பட்டு பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தக் கத்திரிக்காய் வகைத் தனித்துவமான முட்கள் காரணமாக, எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதால் 'முள் கத்தரி' என்று அழைக்கப்படுகிறது. இக்கத்தரிக்காயின் தோற்றக் கிராமமான இலவம்பாடியைக் குறிக்கும் வகையில் 'இலவம்பாடி முள் கத்திரி' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வகை கத்திரிக்காய் இளஞ்சிவப்பு நிறத்தில், வெள்ளைக் கோடுகளுடன், பச்சை நிறம் கலந்த பளபளப்பான ஊதா நிறத்துடன் முட்டை வடிவத்தைக் கொண்டுள்ளது. இது சில விதைகளுடன் மென்மையான, சதைப்பற்றுடன் கூடியது. கத்தரிக்காய் ஒவ்வொன்றும் சராசரியாக 40 கிராம் எடை கொண்டது.
சம்பா சாகுபடி, குறுவை, கோடை ஆகிய மூன்று பருவங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. இது வறட்சியினையும் அதிக வெப்பநிலையையும் தாங்கி வளரக்கூடியது. கத்திரிக்காய் உண்ணும் பகுதியினைத் தவிர, தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முட்கள் உள்ளன. எனவே செடியிலிருந்து காய் பறிக்கத் திறமையான விவசாயிகள் தேவை. முட்கள் நிறைந்த செடியாக இருந்தாலும், கத்திரிக்காய் மென்மையாகச் சதைப்பற்றுடன் உள்ளது.
இந்தக் கத்தரிக்காயை அவித்தல், பார்பிக்யூயிங், பொரித்தல், வறுத்தல், ஆவியில் வேகவைத்தல், ஊறுகாய் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சமையல் செய்யலாம். பிரியாணிக்கு தல்சா, கத்திரிக்காய் சர்வா, சாம்பார், வத்தல் குழம்பு, பொரியல், மாலை நேரச் சிற்றுண்டி போன்ற துணை உணவுகள் செய்வதற்கும் ஏற்றது.