

எல்லாம் நீயே! எந்தன் உறவே!
கண்ணே! நீயெனக்குக் காலையில் எழுந்ததுமே
களிப்பளிக்கும் கும்பகோணம் டிகிரி காபி!
அழுக்குநீங்கக் குளித்தவுடன் அன்பே நீயெனக்கு
ஆவி பறக்கும் மதுரை மல்லிகைப்பூ இட்லி!
வெயிலில் அலைந்து வியர்வையில் நனைகையிலே
தூங்கா நகரத்தின் தூய்மையான ஜிகிர்தண்டா!
வாரநாட்களில் வந்திடும் லஞ்ச் வேளையில்
ஒட்டன்சத்திரம் கத்தரிக்கூட்டும் அரவக்குறிச்சி முருங்கைக்குழம்பும்
பொள்ளாச்சி தேங்காயுடன் ஊத்துக்குளி வெண்ணையுமாய்
நின்றே நீயும் நினைவில் நிறைவாய்!
திருவண்ணாமலை பாயசமாய் கல்லிடைக்குறிச்சி அப்பளமாய்
இணைந்த நமக்கு இன்பமே எந்நாளும்!
ஆயில்பாத் எடுக்கும் ஆனந்த நாட்களிலோ
ஆம்பூர் பிரியாணி ஆகியே நீநிற்பாய்!
திகட்டாத் திண்டுக்கல் பிரியாணியும் ஆவாய்!
சைடு டிஷ்ஷாய் சகட்டு மேனிக்கு
காரைக்குடி உப்புக்கண்டம் குற்றாலம் நாட்டுக்கோழிசுக்கா
சிதம்பரம் இறால்வருவல் நாமக்கல் வாத்துக்கறி
மதுரையம்பதியின் அயிரை மீன் குழம்பு
புதுக்கோட்டை சிறுமீன் ராமேஸ்வரம் மாசிக்கருவாடு
திருமங்கலம் குறும்பாடு இவற்றின் வறுவலின்
இனிய சுவையில் உன்னை உணர்வேன்
ஒருபோதும்நீ என்னிலிருந்து பிரிந்ததே இல்லை!
சேலத்து மாம்பழம் சத்தியமங்கலம் சிறுமலை வாழைப்பழம்
பண்ருட்டி பலாவென்று முக்கனியாய் இருப்பதும்நீதானே!
கொல்லிமலை அன்னாசியாய் கொடைக்கானல் பேரிக்காயாய்
கும்பகோணம் வெற்றிலையாய் கொடுத்திடுவாய்நீ திருப்தி!
மாலையிலோ மகிழ்வான திருநெல்வேலி அல்வா
காரைக்குடி தேன்குழல் காரைக்கால் குலோப்ஜாமுன்
ஆறுதலாய்ச் சுவைத்திட ஆற்காடு மக்கன்பேடா
தூத்துக்குடி மக்ரூன் சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா
வில்லிபுத்தூர் பால்கோவா விரலளவு ஊட்டி வர்க்கி
மணப்பாறை மணமுறுக்கு மகிழ்விக்கும் உனைப்போலே!
வால்பாறை தேநீரும் பட்டுக்கோட்டை மசாலாபாலும்
நாவினிலே நின்றாடும்!நல்லவளே உன் நினைவில்!
விருதுநகர் பரோட்டாவை விளாசிவிட்டு மேலுக்காய்
கோவில்பட்டி கடலைமிட்டாய் செந்தூரின் பனங்கற்கண்டு
நெய்வேலி முந்திரியைக் கொல்லிமலைத் தேனிலே
கொஞ்சமாய்த் தொட்டெடுத்து தேனிக் கரும்புடனே
தெவிட்டிடவே சாப்பிட்டால் உள்ளந்தான் உருகாதோ?
உணவாய் மருந்தாய் உதிரத்தில் கலந்தவளே!
உலகே சொர்க்கமென்று உணர வைத்தவளே!
தமிழனாய்ப் பிறந்ததற்காய் தலைநிமிர்ந்து நிற்கின்றேன்
தண்மயிலே உன்னாலே தரணியிலே மகிழ்கின்றேன்!
மறுபடியும் பிறப்பென்றால் மகேசா மனம்வைத்து
மகத்தான தமிழகத்தின் மகளாய்ப் பிறக்கவிடு!
என்னவளை ஆணாக எனக்குத் துணையாக
அனுப்பியே நீவைத்தால் ஆனந்தம் மிகக்கொண்டே
நன்றிக் கடனை நாயேனாய்த் தீர்த்திடுவேன்!
அவளெனக்குச் செய்த அத்தனை பணிவிடைக்கும்
ஒன்றுக்குப் பத்தாய் உளமாரச் செய்தாலே
நிம்மதியில் மனம்மகிழும்! நிலவுலகில் அமைதியுறும்!