

உன் பிரிவு
உன் நினைப்பை அடர்த்தியாக்கி
உன் வியாபகத்தை
என்னை சுற்றி நிரப்பியது.
உன் நிஜம் போலவே
உன் நினைப்பும்
என்னை சிலிர்ப்பிற்குள்ளாகுகிறது.
என் தனிமை பறி போனது
என் தனிமையை
உன் நினைப்பு
பிளந்து வகிடெடுக்கிறது.
இரு கூறாக்கி நான்
பின்னலாய் இறுகினேன்
பின்னல் கலையாதிருக்க
சொருகிய 'clip'கள்
உன் 'க்ளுக்' சிரிப்புக்கள்.
காதில் பியானோ சத்தம்
அதற்கு பேஸ் என் இதயம்
சாகாமலேயே நான்
இந்த உலகில் இல்லது
போனேன் உன் நினைவால்.
நிஜத்தில் கண்ணுற்ற
உன் குறைகள்
என் நினைப்பில் கரைந்து
உன் நிறைகளால் நிரம்பி
என் தேவதையாய் நிறைந்தாய்.
என் தரப்பு
நீ இல்லாததால் வந்ததில்லை.
அழுகை பீறிடுகிறது.
என் ஆன்மா கொதிக்கிறது
நீ இதற்காக இறந்திருக்க
வேண்டாம்.
உன் திரு என்னில் இருக்கையில்
உன் பரு எனக்கு வேண்டாமோ?
உன் உரு எரிந்தாலும்
என் வருங்காலம் உன்னோடு
நீ இல்லாத உன்னோடு.
~ இறந்து போன என் இல்லாத காதலிக்கான இரங்கற்பா
புத்தம் தலைக்கேற
அரண்மனை விட்டிறங்க
சித்தார்த்தனை
காட்சி பிழைகளான
பிணி துரத்தியது,
மூப்பு விரட்டியது.
மரணம் முட்டி தள்ளியது.
தவத்தில் வீழ்ந்தான்
மானுடத்தின் தவப்பயன்
விதியின் நாயகன் விடைகாண
விழைந்தது மானுட விதியின்
விளையாட்டுக்கு.
வழி சொன்னது யார் ?
நம்பிக்கையூட்டியது யார் ?
உடல் வலி தாங்க
மன வலிமை தந்தது யார்?
உறவு சங்கிலிகளை அறுக்க உதவியது எது ?
காதலை, காமத்தை, பாசத்தை, நேசத்தை
தேசத்தை, வளர்த்த கடனை,
குரு பக்தியை, நட்பை, நன்றியறிதலை,
சுவையுணர்வை, சுகித்தலை, ஓய்வை,
பசியை , ருசியை
யோகத்தை போகத்தை
அரண்மனை வாழ்வை
எப்படி பின் தள்ள முடிந்தது.
இவையாவும் செய்தது
புத்தனல்ல, சித்தார்த்தன்.
ஆக சித்தார்த்தன் புத்தனானதாக
சொல்வது தூர திருஷ்டி
ஆய்தறியுங்கால் புத்தன்
சிலகாலம் சித்தார்த்தனாக
இருந்தது தெரிபு.
புத்தன் பிறப்பாலேயே புத்தன்.
போதித்தது மரமல்ல அவன் ஞானமனம்.
பிறந்த போது தூங்கிக்கொண்டிருந்த மனம்.
எங்கும் புத்தனே பிறக்கின்றான்.
அதை அறியாமல் இறக்கின்றான்.
இது மீண்டும் மீண்டும்
நடக்கும் சுழற்சி.
நீயும் புத்தன்
நானும் புத்தன்
தெரியாமலே இறக்க போகிறோம்.
பார்வைக்கு பருப்பொருள்
அனைவருக்கும்
ஒன்றேயாயினும்
உட்பொருள்
அவரவர் உருவகமே.
உலக நுழைவாயில்.
நிகரில்லா சேவை மையம்.
அவர்க்கு புதிதாய் எதையும்
வழங்க முடியாது.
ஏனெனில் எதுவும் கைமாறே.
பள்ளி நாட்கள்
தன்னிகரில்லா கொட்டில்
அறிவு அடைகாப்பு மையம்
அனுபவத்தை தரம்
பிரித்து ஏற்க விலக்க
நமக்குதவும் பாகைமானி.
வாழ்க்கை முழுவத்துக்குமான
நண்பர்களை பொரிக்கும்
நட்பு முட்டை.
உணவு உடை இடம்
இதற்காய் ஆரம்பித்து
உயரதிற்கேற்ப
துணை முதல் மனைவரை
அடைய நம்மை
அடமானம் வைக்கும் இடம்.
8 மணி நேரம்
விடுப்பு நீங்கலாய்
35 வருடங்கள்
விசிலடிக்கா குக்கராய்
பாஸ் ஈகோ நெருப்பில்
செயற்கை சந்தோஷங்களுடன்
வெந்து ஜோக்கராய்
வீட்டுக்கு வந்தடங்கும்
சத்திரம்.