ஆசிரியர் தின கவிதைகள்!

ஆசிரியர் தின கவிதைகள்! 1. ஆசிரியரே… நின்ற இடத்திலேயே சிறப்பு! 2. அறிவின் விளக்குகள் 3. ஆசிாியர் தின விழா
Students and teacher are walking
Students and teacher Img credit: Gemini AI
Updated on
MM strip
MM strip

1. ஆசிரியரே… நின்ற இடத்திலேயே சிறப்பு!

ஆசிரியர் | Teacher teach children
ஆசிரியர் | Teacher teach childrenImage credit: Gemini AI

“கல்வி கற்றவனுக்கு

சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றால்,

அந்தக் கல்வியைக் கற்பித்தவனுக்கு

நின்ற இடத்திலேயே சிறப்பு!

பால்மணம் மாறாத

பச்சிளம் குழந்தைகளை,

அறிவுக் கடலில் ஆழ்த்தி,

அழகாகக் கரை சேர்த்து,

வாழ்க்கைப் பாதையில்

கலங்கரை விளக்கமாய்

வழிகாட்டுபவர்கள் நீங்கள்!

விடை தெரியாத

வினாக்களுக்கும்

விளக்கம் அளிக்கும்

விஞ்ஞானிகள் நீங்கள்!

கரை தெரியாத

வாழ்க்கைக் கடலிலும்

சரியான திசை காட்டும்

வழிகாட்டிகள் நீங்கள்!

தாய்… தந்தைக்கு அடுத்து

“குரு” எனும் உயர்ந்த ஸ்தானத்தில் நின்று,

முதல் ஆசானாய் கற்றுக் கொடுத்து,

வாழ்நாள் முழுவதும்

முன்னேற்றத்திற்கான

வழியைத் திறப்பவர்கள் நீங்கள்!

மாணவன் எங்கு சென்றாலும்,

எத்தனை உயரம் சென்றாலும்,

“அவன் என் மாணவன்!”

என்று பெருமை கொள்வது

ஆசிரியரின் தனிப் பெருமை!

ஒருவன் வெற்றி பெற்றால்

உலகம் கேட்கும் முதல் கேள்வி—

“எந்தப் பள்ளியில் படித்தாய்?”

அந்தக் கேள்விக்குப் பின்னால்

ஒளிந்திருப்பது

அவனது பெற்றோரின் கனவும்…

அதை நனவாக்கிய

ஆசிரியரின் வழிகாட்டுதலும்!

“அதோ செல்கிறான்…

என் மாணவன்!”

“அதோ உயர்கிறான்…

என் மாணவன்!”

“அதோ நிற்கிறான்…

வெற்றியின் உச்சியில்…

அவனும் என் மாணவன்தான்!”

என்று

பெருமிதத்தோடு சொல்லும்

பேரன்பு மிக்க இதயம்

ஆசிரியரின் இதயம்!

ஒவ்வொரு ஆண்டும்

ஒவ்வொரு வகுப்பறையிலிருந்தும்

பல பட்டாம்பூச்சிகள்

சிறகடித்துப் பறக்கின்றன…

பல்வேறு உலகங்களைப் பார்க்கின்றன…

பல்வேறு உயரங்களைத் தொடுகின்றன…

ஆனால்…

அவை பறந்து சென்றாலும்,

அவற்றின் நினைவுகளில்

என்றும் வாழும்

ஒரு வகுப்பறை உண்டு…

ஒரு கரும்பலகை உண்டு…

அதைவிட முக்கியமாக…

“என்னைப் பறக்கச் சொல்லிக் கொடுத்த

என் ஆசிரியர்”

என்ற அழியாத நினைவு உண்டு!

மாணவன் உயர்ந்தால்

அது ஆசிரியரின் வெற்றி…

மாணவன் சாதித்தால்

அது ஆசிரியரின் பெருமை…

மாணவன் வாழ்ந்தால்

அதன் பின்னால்

ஒரு ஆசிரியரின்

அமைதியான அர்ப்பணிப்பு இருக்கும்!

ஆசிரியர் என்பவர்

ஒரு தொழில் அல்ல…

ஒரு தவம்!

ஒரு பாடம் அல்ல…

ஒரு பாதை!

ஒரு வகுப்பறை அல்ல…

ஒரு தலைமுறையின் எதிர்காலம்!

எங்கள் அறிவுக்கு

விளக்கேற்றிய

ஆசிரியப் பெருமக்களே…

உங்கள் காலடியில்

எங்கள் நன்றிகள்!

உங்கள் சேவைக்கு

எங்கள் வணக்கங்கள்!

உங்கள் அர்ப்பணிப்புக்கு

எங்கள் அன்பு!

“கற்றுக் கொடுத்தவர்கள் பலர்…

ஆனால் வாழ்க்கையையே

கற்றுக் கொடுத்தவர்கள் —

ஆசிரியர்கள்!”

உலகின் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும்

எனது இதயம் நிறைந்த

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

- கல்பனா ராஜகோபால்

இதையும் படியுங்கள்:
நம்மை செதுக்கிய ‘ஏணிப்படிகள்’: ஆசிரியர் தியாகத்தின் பின்னணியில் வாழும் ரகசியம்!
Students and teacher are walking

2. அறிவின் விளக்குகள்:

ஆசிரியர் | teacher
ஆசிரியர் | teacherImage credit: Gemini AI

கையில் புத்தகம் தந்தவர் அல்ல,
வாழ்க்கையைப் படிக்கக் கற்றுத் தந்தவர் ஆசிரியர்!

அறியாமை இருளில்
அறிவின் தீபம் ஏற்றியவர்,
தடுமாறிய பாதையில்
தன்னம்பிக்கையை விதைத்தவர்.

எழுத்துக்களை மட்டும்
சொல்லித் தரவில்லை அவர்கள்,
எது சரி, எது தவறு என்று
வாழ்க்கையின் அர்த்தத்தையும் உணர்த்தினார்கள்.

ஒரு மாணவனின் மதிப்பெண்ணுக்குப் பின்னால் ஒரு ஆசிரியரின் உழைப்பு இருக்கிறது; ஒரு மாணவனின் வெற்றிக்குப் பின்னால் அவர்களின் எண்ணற்ற கனவுகள் இருக்கின்றன.

தோல்வியில் துவண்டு நின்றபோது, “மீண்டும் முயற்சி செய்” என்ற குரலும், வெற்றியில் தலைநிமிர்ந்தபோது, “பணிவுடன் இரு” என்ற அறிவுரையும் ஆசிரியரிடமிருந்தே பிறக்கிறது.

செப்டம்பர் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாக மலர்வதற்குக் காரணமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியர் என்பவர் ஒரு தொழிலைச் செய்பவர் அல்ல, ஒரு தலைமுறையை உருவாக்குபவர் என்பதை தனது வாழ்வால் உணர்த்தியவர்.

தத்துவ அறிஞராகவும், ஆசிரியராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த அவர், தனது பிறந்த நாளையே ஆசிரியர்களுக்கான நாளாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்பியது ஆசிரியர் பணிக்குக் கிடைத்தமிகப்பெரிய மரியாதை.

கரும்பலகையில் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் எதிர்காலம் பிறக்கிறது; ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு புதிய தலைமுறை உருவாகிறது.

வகுப்பறை கதவுகளுக்குள் அவர்கள் விதைக்கும் விதைகள், ஆண்டுகள் கடந்த பின்னரும் மரங்களாகி நிழல் தருகின்றன. மருத்துவராக ஒருவர் உயர்ந்தாலும், பொறியாளராக ஒருவர் வளர்ந்தாலும், அறிஞராக ஒருவர் சாதித்தாலும், அந்த வெற்றியின் முதல் பக்கத்தில் ஒரு ஆசிரியரின் பெயர்நிச்சயம் எழுதப்பட்டிருக்கும்.

அன்பால் அரவணைத்து, அறிவால் வழிகாட்டி, ஒழுக்கத்தால் உயர்த்தி, கனவுகளுக்கு சிறகுகள் தந்து மாணவர்களைப் பறக்கச் செய்கிறார்கள் ஆசிரியர்கள்.

அவர்களின் உழைப்புக்கு ஒரு நாள் மட்டும் நன்றி போதாது; அவர்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு வார்த்தையும் ஈடாகாது. இன்று மட்டுமல்ல, நம் வாழ்வின் ஒவ்வொரு வெற்றியிலும் நம்மை உருவாக்கிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்.

அறிவைத் தந்த கரங்களுக்கு ஆயிரம் வணக்கங்கள்; வாழ்க்கையைத் தந்த வழிகாட்டிகளுக்கு என்றென்றும் நன்றிகள்! ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!

- பிருந்தா நடராஜன் 

இதையும் படியுங்கள்:
Teacher's day quotes: அரிஸ்டாட்டில் முதல் சாக்ரடீஸ் வரை... ஆசிரியர்கள் பற்றி உலக அறிஞர்கள் சொன்ன ரகசியங்கள்!
Students and teacher are walking

3. ஆசிாியர் தின விழா:

ஆசிரியர் | Teacher
ஆசிரியர் | TeacherImage credit: Gemini AI

அகர முதல எழுத்தை அரிச்சுவடியாய் கற்றுத்தந்த கலங்கரை விளக்கமே! 

ஆதி பகவன் முதற்றே உலகு என வகுப்பெடுத்த வரலாற்று நாயகரே! 

இனிமையாய் இதயபூா்வமாய் படிப்பினை கற்றுத்தந்த தர்மதுரையே!

ஈகை குணத்தை ஈடு இணையில்லாமல் பயிற்றுவித்த பன்முகமே!

உலகஉருண்டையை சுற்றிக்காட்டி நான்கு திசையை காட்டிய காருண்யமே! 

ஊர் போற்ற எனை கல்வியாளானய் மாற்றிய மாணிக்கவீணையே!

என்றோஎன் வாழ்வில்  கல்வி அறிவை வளர்த்திட்ட  வழிகாட்டியே!

ஏளனம் செய்யாமல் கல்வி அறிவால் வாழ்வின் உயரம் காண வைத்திட எனை  ஏற்றிவிட்ட  ஏனியே!

ஐயம் தெளிவுற  ஒழுக்கம் கற்றுக்கொடுத்த கொன்றை வேந்தனே!

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லாவகையில் கல்விகற்றுக்கொடுத்த கலைமகளே!

ஓதாமல் ஒரு நாளும் இல்லா நிலை உணர உயர்வுக்கு வழிவகுத்த உத்தரே சத்தியரே!

ஓளவை மொழியை ஆத்திச்சூடியை அழகுற பயிற்றுவித்த பவித்ரமாணிக்கமே!

 ஃஎனக்கு என்றும் வழிகாட்டியாய் விளங்கிய வித்தகரே!

 ஆசிாியர் தின நாளில் ஆசான் ஆசிாிய பெருமகனாா்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்" 

- புவனா நாகராஜன்

logo
Kalki Online
kalkionline.com