

யோசித்துக்கொண்டே கிணற்றின் ஓரமாகவே நடந்தாள் அங்கம்மா. அரளிச்செடிகள் தளதளவென வளர்ந்து நிமிர்ந்து, 'வா வா...' என்றழைப்பதுபோல ஆடிக்கொண்டிருந்தன. காய்கள் கொத்துகொத்தாக காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அடிவயிற்று சேலை மடிப்பை தொட்டில்போல விரித்து விட்டுக்கொண்டு, செடிகளை வளைத்து வளைத்து நன்றாக விளைந்த அரளிக் காய்களாகப் பார்த்து பார்த்து பறித்து சேலை மடிப்பில் போட்டுக்கொண்டாள்.
''மவளே... இதை அரைச்சு உன் கழுநீர் தொட்டில கலக்கப் போறேன்... உன் மாடுங்க அத குடிச்சிட்டு நுரை தள்ளி வயிறு வீங்கி செத்து மடியப் போகுதுங்க... மகளே நீ அடிச்சிக்கிட்டு அழனும்... இந்த காத்தாயி மக அங்கம்மா அத பார்த்து சந்தோஷப்பட்டுக்கனும்...'' என்று கறுவிக்கொண்டே காய்களை பறித்தாள் அங்கம்மா.
இரண்டு நாட்கள் முன்னதாக இவளுடைய கழுநீர் தொட்டியில் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் போட்டு நன்றாகக் கலக்கி வைத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில் மேய்ச்சலுக்கு போயிருந்த மாடுகள் வந்துவிடும், அவைகளுக்கு ரெங்கன் தண்ணீர் காட்டுவான் என்று எண்ணியிருந்தாள். ஆனால் நடந்தது வேறாகப் போயிற்று.