

வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. வேண்டுமானால் மறக்க முயலலாம்! ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு உதவக்கூடும். ஆனாலும், அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏன் புன்னகைக்கிறோம்? புன்னைகை ஒரு போலிக் கவசம்! ஒருவிதத்தில் நம்மைவிட நாம் மற்றவர்க்கு அதிக உயர்வு தருகிற ஒரே காரணம்தான் அந்தப் போலி கவசத்தைப் பூண்டு கொண்டு திரிவதற்கு!
அந்த நாள் வந்துவிட்டால், எப்படித்தான் அப்படியொரு நடிப்பு நமக்கு வசப்பட்டுவிடுகிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!
அந்த நாளில் அலுவலகம் புறப்படுகையில், கூடுதலாய்க் கொஞ்சம் பவுடர் போட்டு பழைய செய்தித்தாள் கிழிசலில் கொஞ்சம் கிழித்து பவுடர் பொதிந்து பத்திரப்படுத்தி, ஸ்டிக்கர் பொட்டுக் கவரை புதிதாய் வாங்கிப் பொட்டு வைத்து, சீப்பை அழுக்கு நீக்கி அதையும் சேர்த்து எடுத்துப் போகிறோம்.
வழியில் தென்படுகிறவர்களுக்கெல்லாம் ஒரு திடீர் புன்னகை தெளித்து உயர் அதிகாரிகளுக்கு பணிவாய்த் தலைவணங்கி, மூத்தோரை நலம் விசாரித்து… சே! சே! எத்தனை செய்ய வேண்டியிருக்கு?
நாள் வருவதற்குள்ளாகவே, தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது முருங்கை மர வேதாளமாய் கடன் தீர்க்க வேண்டிய கஷ்டங்கள்!பற்றாக்குறை பட்ஜெட்!
மாலை எப்போது வரும்.. எப்போது வரும் என்று எதிர்பார்த்து.. தனியார் துறை என்றால் அக்கவுண்டண்ட் பேங்குக்குப் போவாரா? சேலரி கிடைக்குமா? அது அக்கவுண்டில் கிரிடிட் ஆகுமா? ஏதேனும் சிக்கல் சொல்வார்களோ?
எல்லாம் எண்ணிப் பார்த்து அடிக்கடி பாத்ரூம் போய் அழகை சரிபார்த்து மேக்கப் கூட்டி, டிரசை மெல்ல மெல்ல சரிசெய்து, போலியாய்ச் சிரித்து டீ, வடை வாங்கிக் கொடுத்து, கையில் காசை வாங்குகையில்…
பிடித்தம் போக பிசுபிசுத்தது கிடைக்க…
இதுக்கா இத்தனை..! எங்கு போனாலும் முதுகில் ஏறிய வேதாளமாய் மூட்டை சுமக்க வேண்டியிருக்கிறதே என உள்ளுக்குள் மென்று விழுங்கி, 'சே! பணம் லட்சுமி!' என்று சமாதானப்படுத்தி.. 'அடுத்தமாதம் சரியாயிடும்!' என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்! ஒவ்வொரு மாத சேலரி தேதியிலும்!
"வயசான காலத்துல வீட்டுல அடங்கிக் கெடக்காம இப்படி ரோட்டுக்கு எதுக்கு வந்தே…? சாகப்போற காலமாச்சே…?! கண்ணுரெண்டும் தெரியலை! எதுக்கு இப்படி இருக்கணும்?" அந்தப் பெண்ணின் உக்கிர வார்தைகளைக் கேட்டதும் கொஞ்சம் கசப்பாகத்தான் இருந்தது! நிச்சயம் இது எந்த மருமகளோட வார்த்தையோதான்! மாமியாரையோ மாமனாரையோ வீட்டில் வைத்துப் பாதுகாக்க முடியாத சிரமம் வார்த்தைகளில் வெடித்தது.
தொடர்ந்து வசவை, காதை தீட்டிக் கொண்டு ஆர்வமாய்க் கேட்டான் துரைசாமி. அடுத்த வீட்டில் சண்டையென்றால் அல்வாத் திங்கறா மாதிரி அலாதி சுகம் அவனுக்கு!
ராத்திரி வந்தது….! "கார்ல கீர்ல அடிபட்டிருந்தா என்ன செய்யறது?! வீட்டு வேலையெல்லாம் அப்படியே இருக்கு! போட்டதைப் போட்டபடி போட்டுட்டு, கைக் குழந்தையையும் தூக்கீட்டு இப்படி உன்னைத் தேடி வராமாதிரி வச்சிட்டடேயே! திட்டறது உறைக்கலையா? சோறுதானே திங்கறே?"
கேள்வியில் உக்கிரம் கூடக் கூட, "என்ன பிரச்சனை யார் குரலது?" கேட்க ஆர்வமாய் இருந்தது. எட்டிப் பார்க்க….!
பிரச்னை பக்கத்து வீட்டிலில்லை. ஜன்னல் திறந்து எட்டிப் பார்த்தால்.. சப்தம் ரோட்டில் கேட்டுக் கொண்டிருந்தது.
என்னதான் மாமியாருக்கோ மாமனாருக்கோ வயசானாலும் அதுக்கு இப்படியா திட்டுவது?! நாளைக்கு நமக்கும் வயசாகும் தானே? இந்த வீட்டில் வயசான காலத்தில் இவள் வீட்டில் கஷ்டப்பட பூர்வத்தில் பண்ணின பாவம்தான் காரணமோ என்னமோ?
ரோட்டில்… கைக் குழந்தை ஒன்றை இடுப்பில் இறுத்திக் கொண்டு இருபது வயது மதிக்கத்தக்க கருத்த, தலைகூட சரியாய்ச் சீவிக்கொள்ளாது திட்டிக் கொண்டிருந்தாள் இளம் பெண்.
வசவு தொடர்ந்தது. கூர்ந்து பார்த்தான்…
கையிலிருந்த மேரி பிஸ்கெட்டை துண்டாக்கி பிச்சுப் போட்டுவிட்டு, "உன்னைச் சுதந்தரமா இருக்கட்டுமேன்னு வாரில் கட்டாமல் விட்டா இப்படியா பண்றது?"
வயசாகி கண்தெரியாக் காலத்துல வீட்டைவிட்டு வெளிச்சத்தில் வெளியேறி இருட்டில் வீடு திரும்பத் தெரியாமல் வாகனங்களின் பளீர் ஒளிக்குப் பயந்து படுத்திருந்த நாட்டு நாயைத் திட்டிக் கொண்டிருந்தாள் கிராமத்துச் சிங்காரி ஒருத்தி!