

‘நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன்?' என்று ஆராய்வதற்கு இது நேரமில்லை. உடனே ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? எதைச் செய்தால் இந்தச் சூழல் மாறும்? என்று யோசித்துக்கொண்டு இருந்தான் மோகன்.
ஒரு வாரத்திற்கு முன்பு தன் மச்சானிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் சற்று ஆடித்தான் போய் இருந்தான். அதற்கு முழுக்காரணமும் தன்னைச் சார்ந்தது என்று இப்போது உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
நாம் ஏன் அத்தான் சொல்வதுபோல் அவர் கம்பெனியில் மேலாளராக பணி செய்யக்கூடாது?
இதில் என்ன கெளரவம் குறைந்துவிடப்போகிறது! மேலும், நமக்குக் கட்டடக் கலையும் தெரியும்; அதில் உள்ள சிரமங்களும் அதை எப்படிக் கையாள்வது குறித்த 10 வருட அனுபவமும் இருக்கிறது.
இதை வைத்துத்தான் ‘கந்தன் கன்ஸ்டிரக்ஷன்ஸ்’ முதலாளியான முருகன் நமக்கு, ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
முருகன் எங்களுக்கு ஒரு நல்ல குடும்ப மாப்பிள்ளை என்பதைத் தாண்டி, தன் ஹார்டுவேர்ஸ் பிசினஸ்க்கு தன் வாடிக்கையாளர்கள் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி இருக்கிறார்.
என் பேராசையால் அவரைக் கேட்காமல் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு, ஒரு பெரிய பில் தங்கி, வங்கிக்குக் கட்ட வேண்டிய வட்டி, அசல், பாக்கி என தன் தொழிலையே முடித்துக்கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது எந்தக் கடனும் இல்லை; மனைவியும் எல்லாவற்றையும் உணர்ந்து இருக்கிறாள்.
மோகனின் தங்கைக்கு வளைகாப்பு.
“அப்பா இல்லாததால் குறைந்தது 4 பவுனுக்கு ஏதாவது சீர் செய்யவேண்டும்.”
“செய்வோம்” என்றாள் ஆண்டாள் - மோகனின் மனைவி.
“ஒரு யோசனை; யாருக்கும் தெரிய வேண்டாம். நேற்று உங்கள் வீட்டு மாப்பிள்ளையுடன் பேசினேன். அத்தான் கம்பெனியில் மாதம் மாதம் ரூபாய் 50,000 சம்பளம் என்றார். அதில் இருந்து 10 மாதத்திற்கு ரூபாய் 25000 வீதம் பிடித்துக்கொள்ளலாமா?” என்றார்.
“என்னுடைய சம்பளப் பணத்திலிருந்து 25000 எடுத்துக்கொள்ள உறுதி அளித்தேன்” – மோகன்.
“இப்படிச் செய்தால் நாமும் சீரும் செய்யலாம்; சிரமம் இல்லாமல் நம் வாழ்விலும் ஒரு வழி உருவாகும்” என்றாள் ஆண்டாள்.
உண்மைதான். வேலைக்குச் செல்ல ஆயத்தமானான்.
நண்பன் கோபியிடம் இருந்து மூன்றாவது முறையாக ஹரிக்கு அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
‘செல்லை’ எடுத்த தேவி, “இதோ பாருங்க உங்க நண்பருக்கு நீங்க மேனேஜராக இருக்கும் போது வீடுகட்ட உதவுனீங்க... அவர் மகன் வெளிநாடு சென்று படிக்க மேலும் கடன் உதவி செய்தீங்க!... இப்ப, நம்ம ஒரே பொண்ணு கல்யாணம் இருக்கு; ஏதாவது ‘கமிட்’ பண்ணீங்க? நான் என் வீட்டோடு ‘கமிட்’ ஆகி விடுவேன்.”
குளித்து, சற்று ஆசுவாசமாக ‘ஸைலண்ட்’ மோடில் உள்ள போனை ஆன் செய்து பேசினான் – ஹரி.
“டேய்! எப்படி இருக்க. நான் ஓய்வுபெற்று 3 வருடம் ஆகிறது. அப்போது வந்தது தான் நீ. 'அதற்கு அப்புறம் வரவே இல்லை கோபி' என்று என் பொண்டாட்டி ரொம்ப ஆதங்கப்படுகிறாள். மகளுக்கு அடுத்த மாதம் கல்யாணம் வைத்து இருக்கிறேன். அதற்கு குடும்ப சகிதமாக வந்துவிடு.”
'அப்பா! ஹரி பிழைக்க கற்றுக்கொண்டார். நல்ல ராஜதந்திரம்; உண்மையை எப்படி பக்குவமாக சொல்லித் தப்பிக்கிறார்...' என்று மனைவி நினைப்பதை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டு பேச்சை தொடர்ந்தான் ஹரி.
“அப்படியா, ரொம்ப சந்தோசம்!”
“இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. ஆனால் இதை நான் ஏற்றுக்கொண்டால் என் மனைவி சம்மதிக்க மாட்டாள். Sorry, நட்புதான் முக்கியம். இங்கே வரும் போது நாங்கள் வந்து பார்க்கிறோம். என்றும் எங்கள் ஆசீர்வாதம்.”
கண்கள் நீண்டன; பிறகு விரிந்தன. என்ன என்பதற்குள் “voice recorder” ஒலித்தது.
“என் மகன் கெளசிக்; உனக்கும், எனக்கும் குடும்பத்தோடு LONDON சென்று வர TICKET ஏற்பாடு செய்து உள்ளான்.”
“உன் மகள் கல்யாணத்திற்கு பிறகு இரண்டு மாதம் கழித்துத்தான் என்பதால், நானும் அவனிடம் சரி என்று சொல்லிவிட்டேன். உன் சம்மதம் இருக்கும் என்று நானும் உறுதி அளித்துவிட்டேன். இது அவன் உனக்கு செய்யும் 'கைமாறு' அல்ல... எனக்கு செய்யும் கடமை. தப்பாக நினைக்காதே?!”
கண்களில் கண்ணீர் கரைந்து வற்றத்தொடங்கியது.