சிறுகதை: ஆடிப் பெருக்கும் அமைந்த காதலும்!

அமெரிக்க வாழ்க்கையைத் தாண்டி ஒவ்வொரு ஆடிப் பெருக்கு நாளிலும் மேட்டூர் முதல் பூம்புகார் வரை காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் தம்பதியின் காதல் கதை.
ஆடிப் பெருக்கு | Husband and wife celebrate Aadi Perukku
ஆடிப் பெருக்கு | Husband and wife celebrate Aadi PerukkuAI Image
Updated on
MM strip
MM strip

அவர்கள் கார் மேட்டூரை நெருங்கிக் கொண்டிருந்தது. ரவிதான் ஓட்டினான்! ராதா பக்கத்து சீட்டில் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் இருவரும் பின்சீட்டில் அமர்ந்து, இயற்கையை ரசிப்பதும் இடையிடையே சண்டை போடுவதுமாக நேரத்தைச் செலவிட்டு வந்தார்கள்!

தன் காதல் மனைவியின் கண் துயிலலுக்கு இடையூறு வராத வகையில் மெதுவாக அவன் காரை ஓட்ட, அவன் சிந்தனையோ கடந்த கால காதல் வாழ்க்கையை அசை போட ஆரம்பித்தது.

அப்பொழுது அவன் திருச்சி கல்லூரி மாணவன்! ஆடிப் பெருக்கில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபப் படித்துறையில் வேடிக்கை பார்க்கப் போன அவனை, வீழ்த்தியது அவள் பார்வை! அவளும் அவள் தோழிகளும் கூட்டமாக வந்திருந்தாலும், அவன் கண்களில் அவள் மட்டும் தனியாகத் தெரிந்தாள்.

ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி மனிதனிடம் வந்ததைப்போல், அங்கு, இங்கு, எங்கு என்று சுற்றினாலும் அவன் பார்வை அவள் மீதே இறுதியாக வந்து நின்றது. ஓரிரு முறை அதை அவளும் கவனிக்க, வெட்டிக்கொண்ட பார்வையில் விபத்தாய் மலர்ந்தது காதல்!

துவாக்குடி ஹாஸ்டலுக்கு வந்தபிறகும் அந்தப் பார்வை, விட்டபாடில்லை. ஹோலி கிராஸ் விடுதியில் அவள் தனித்திருந்தபோதும் விடாமல் அவளைத் துரத்தியது அவன் கடைக்கண் பார்வை! மெயின்கார்ட் கேட்டில் ஒரு முறை அவன் பஸ்ஸிலிருந்து இறங்க, அவள் ஏறியிருந்த பஸ் கிளம்பிவிட்டது. இருவரின் பார்வையும் கண நேரம் மோதிக்கொள்ள, உடம்பில் மின்சாரம் ஓடியதை உணர்ந்தார்கள்! - இருவருமே.

தஞ்சாவூர் பேருந்தை பாய்லர் பிளாண்ட் நிறுத்தத்தில் நிறுத்தி அவன் ஏறியபோது, முன்னதாக இருவர் சீட்டில் அவள் அமர்ந்திருந்தாள்! பக்கத்து சீட் காலியாகவே இருக்க, ‘அருகில் வந்து அமரேன்’ என்று அழைத்தது அவள் பார்வை!

ஆடிப் பெருக்கு | husband and wife celebrate Aadi Perukku
ஆடிப் பெருக்கு | husband and wife celebrate Aadi PerukkuAI Image

அருகில் அமர்ந்து, ஆழ் மனத்தை ஒப்பித்தாலும், இங்கிதம் மாறாமல் இருந்த அவனை, அவளுக்கு மேலும் பிடித்துப்போயிற்று.

திருவாரூர்தான் தன்னுடையது என்று அவன் கூற, கும்பகோணம் அருகில்தான் என்று சூசகம் அவள் காட்ட, அன்புடை நெஞ்சம் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகி உள்ளூரத் திளைத்தன. எல்லைகள் எதனையும் எப்போதும் மீறுவதில்லை என்ற மியூச்சுவல் ஒப்பந்தத்தில் இருவரும் இணைய, கல்லணையும், முக்கொம்பும் அடிக்கடி அவர்கள் கால் பதிக்கும் இடங்களாகின.

ஆடிப் பெருக்கையும், அகண்ட காவிரியையுமே அவர்கள் தங்கள் காதல் தெய்வங்களாகப் பாவித்து அதற்கான மரியாதையை ஒவ்வொரு ஆடிப்பெருக்கிலும் செலுத்தி வந்தார்கள்.

படிப்பை முடித்தார்கள். அவர்கள் காதல், கல்விக்கு உரமாக அமைய, இருவரும் ப்ளையிங் கலர்ஸ்களுடன் வெளியே வந்தார்கள். கேம்பசிலேயே ப்ளேஸ்மெண்ட் கிடைக்க, அதனைப் பயன்படுத்தி மேலும் உயர் படிப்புகளைத் தமதாக்கிக் கொண்டார்கள்.

பன்னாட்டு மார்க்கட்டில் அவர்கள் மதிப்பு உயர, பல நாடுகளும் பாக்கு வைத்து அழைக்க, அமெரிக்காவில் பணியேற்றார்கள். அவர்கள் முடிவுப்படி பணி கிடைத்த பின்னால், பெற்றோர்,உறவினரின் அனுமதியோடு கரம் பிடிப்பதென்ற கருத்தில் உறுதியாய் இருந்து, அதனை நிறைவேற்றியும் கொண்டார்கள்.

தங்களை ஒன்றிணைத்து வைத்த ஆடிப்பெருக்கை ஒவ்வோர் ஆண்டும் கொண்டாட, மறக்காமல் இந்தியா வருவதை வாடிக்கையாக்கிக்கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான நம்பிக்கை.

குலதெய்வக் கோயில் தேடி, ஆண்டிற்கொரு முறையாவது கொண்டாட ஊர் வருவோர்;

திருப்பதி ஏழு மலையானைத் தவறாமல் ஒவ்வொரு வருடமும் தரிசிப்போர்;

பழனி மலையேறி, ஆண்டியை ஆண்டிற்கொருமுறையாவது அகங்குளிரக் கண்டு களிப்போர்;

திருவண்ணாமலை வந்து கிரிவலம் செய்யும் கிளர்ச்சிப் பக்தர்கள்;

சபரிமலை படியேற தவமிருந்து வருடாவருடம் வருவோர்;

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இரு துருவங்கள்..!
ஆடிப் பெருக்கு | Husband and wife celebrate Aadi Perukku

இப்படி இன்னும் எத்தனையோவிதமாகத் தங்கள் விருப்பங்களையும் விரதங்களையும் நிறைவேற்றிக்கொள்ளச் சொந்த மண் தேடி வருபவர்கள்.

ஆனால், அவர்களில் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களாய் ரவியும், ராதாவும்!

மேட்டூரில் தொடங்கி, பூம்புகாரில் காவிரி கடலில் கலக்கும் இடம் வரையுள்ள அத்தனை சிறப்புத் துறைகளிலும், நீராடி அவர்கள் காவிரித் தாய்க்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்து வந்தார்கள்.

பவானி, ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் என்று, அங்குள்ள சிறப்புத் துறைகளில் எல்லாம் நீராடுவதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள். அந்த நன்றிக் கடனாலேயே அவர்கள் வாழ்வு தழைப்பதாக அவர்கள் முழுதாக நம்பினார்கள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கடைசிக் கடிதம்!
ஆடிப் பெருக்கு | Husband and wife celebrate Aadi Perukku

இந்த வருடம் முன் கூட்டியே நாடு வந்தவர்கள், மேட்டூரில் நீர்மட்டம் குறைவாக இருப்பதை அறிந்து, எக்காரணத்தாலும் தாங்கள் அந்தப் புனித நாளில் காவிரித் தாயை வணங்கிப் போற்றுவது நின்று விடக்கூடாது என்பதற்காக, நேராக மேட்டூருக்கே வந்து விட்டார்கள்! நீரில், நெருப்பில், நிலத்தில், காற்றில், ஆகாயத்தில் என்று இவைகளில்தானே இறைவன் உறைவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது! இவை இல்லையென்றால் இல்லையல்லவா மனித வாழ்க்கை!

ஆடிப் பெருக்கும் அவர்களுக்கு அமைந்த காதலும் நீண்டு வாழட்டும்! நிம்மதி நிலைக்கட்டும்!

கல்கியின் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கதை, ஓர் ஆடிப் பெருக்கு தினத்தன்று, காவிரியாற்றுப் பெருக்கெடுக்கும் காட்சியோடு மிகச்சிறப்பாகத் தொடங்குகிறது. கல்கி குழுமம் தன் You Tube சானலில் வெளியிட்ட 'பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவ பயணம்' என்ற 16 வீடியோக்களின் தொகுப்பின் முதல் வீடியோ இதோ: 
logo
Kalki Online
kalkionline.com