

கொண்டை முடி அலங்கரித்து, கொஞ்சும் கிளி கையில் வைத்து, கண்களில் கடலளவு கருணையைத் தேக்கி வைத்திருக்கும் அம்பாளின் திவ்ய தரிசனம் நெக்குருகச் செய்தது. சில நொடிகளில் ‘நகருங்க.. நகருங்க..’ என்ற குரல்கள் அவசரப்படுத்த, தினகரின் கண்கள் மீண்டும் கருவறையை உற்றுநோக்கின. அங்கே ஒரு வினாடி மின்னல்போல அம்பாளின் வதனம் மறைந்து தேன்மொழி அக்காவின் முகம் தெரிய, திடுக்கிட்டு கூட்டத்தில் இருந்து விலகி வந்தான்.
வியர்வையில் கசகசத்த சட்டை, காற்றுக்கு ஏங்க, மேல் பட்டனைச் சற்றே தளர்த்தினான். மற்ற சன்னதித் தெய்வங்களை வணங்கும்போது புத்தி பக்தியில் லயிக்கவில்லை. அக்கா மட்டுமே மனம் முழுக்க வியாபித்திருந்தார். முகத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் அந்த மெல்லிய புன்சிரிப்பும், தேனாக இனிக்கும் பேச்சும்தான் அக்காவின் அடையாளங்கள்.
கோயில் மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்தபோது, சற்றே விடைபெற்றிருந்த மனபாரம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. இதே மதுரையின் ஏதோ ஒரு தெருவில்தான் அக்கா இருக்கிறார். ஆனால், அவனால் அங்கேபோய் அவரைப் பார்க்க முடியாது.