

ஒரு நாளில் புரிந்த குடும்ப உறவின் மதிப்பு.
நாளை மறுநாள் என் தம்பி மகளுக்கு வளைகாப்பு. அதே நாளில் வனிதாவின் சித்தப்பா வீட்டில் அவருடைய பேரனுக்கு காது குத்து.
இரண்டுமே முக்கியமான பங்க்ஷன்கள். ஆனால் குடும்பத்தோடு இரண்டு இடங்களுக்கும் செல்வது சாத்தியமில்லை. அதனால் வனிதா என்னிடம்,
“ஏங்க, நீங்க எங்க சித்தப்பா வீட்டு பங்க்ஷனுக்கு போயிட்டு வந்துருங்க. நானும் பையனும் உங்க தம்பி வீட்டுக்கு போயிட்டு வர்றோம்,” என்றாள்.
எனக்கு உடனே கோபம் வந்தது.
“என் தம்பி வீட்டுக்கு நான் போகலீன்னா எப்படி? மரியாதை இருக்காது. நாம ரெண்டு பேரும் அங்கதான் போகணும்,” என்றேன்.
“அப்போ எங்க சித்தப்பா வீட்டுக்கு யார் போறது?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“அட, அங்கெல்லாம் நான் உன்கூட வந்தாலே என்னை தனியா விட்டுட்டு நீ போயிருவே. இப்ப நான் மட்டும் போனா யாரும் என்னைக் கண்டுக்க மாட்டாங்க,” என்று காரணம் சொல்லி சமாளிக்க முயன்றேன்.
ஆனால், வனிதா விடவில்லை.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க தனியாக போங்க,” என்று சொல்லிச் சொல்லி ஒரு வழியாக என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டாள்.
வேறு வழியில்லாமல் வனிதாவின் சித்தப்பா வீட்டிற்கு நான் மட்டும் பஸ்ஸில் கிளம்பினேன்.
வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த வனிதாவின் சித்தப்பா என்னைப் பார்த்ததும் அவசரமாக வந்து கையைப் பிடித்துக்கொண்டு,
“வாங்க மாப்பிள்ளை! எங்க வனிதாவும் எம்பேரனும்?” என்று அன்பாகக் கேட்டார்.
நான் என் தம்பி வீட்டு விசேஷத்தைச் சொல்ல,
“அட பரவாயில்லைங்க மாப்பிள்ளை. நம்ம வீட்டுக்கு வனிதா எப்ப வேணும்னாலும் வந்துடலாம். ஆனா அங்க பெரியம்மா முறைக்கு அவ இருக்கணுமே,” என்றார்.
அருகில் நின்றிருந்த ஒரு பையனை அழைத்து,
“மாப்பிள்ளை வந்துருக்காரு, அம்மாவ வரச் சொல்லு,” என்றார்.
பிறகு என்னை தன் அருகிலேயே அமர வைத்து கவனித்துக்கொண்டார்.
வருபவர்களிடம் எல்லாம், “இவர் நம்ம மாப்பிள்ளை,” என்று பெருமையாக அறிமுகப்படுத்தினார். உள்ளே சென்றதும் மச்சினிகளும் மச்சினர்களும் சுற்றி நின்று அன்பாகப் பேச ஆரம்பித்தார்கள்.
உண்மையாகச் சொன்னால், ராஜ உபசாரம்தான்.
சாப்பாடு பரிமாற வந்தவர்கள்கூட ‘மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க’ என்று பாசமாகக் கேட்டார்கள்.
அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு உரிமையும் அன்பும் தெரிந்தது. நான் தனியாக வந்திருந்தாலும், அந்த வீட்டில் என்னை யாரும் அந்நியமாக உணர விடவில்லை.
பங்க்ஷன் முடிந்ததும் சித்தப்பாவும் சித்தியும் கார் வரை வந்து, தாம்பூலப்பையும் இனிப்புகளும் கையில் கொடுத்து வழியனுப்பினர்.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தபோது வனிதா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“நீங்க என்கூட வந்தீங்கன்னா உங்கள கவனிக்க நான் இருக்கேன்னு விட்டுடுவாங்க. ஆனா நீங்க தனியாப் போனா ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ன்னு பாங்கா நடந்துக்குவாங்க. அவங்களுக்குள்ள இருக்குற பாசமும் மதிப்பும் வெளிப்படையா உணர்வீங்க” என்றாள் சிரித்துக்கொண்டே...
அப்பறம், "இப்படித் தனியாக போகும்போதுதான் உங்களுக்கும் என் வீட்டு உறவினர்களுக்கும் நல்ல புரிதல் வரும். அதே பாலிசிதான் இந்தப் பக்கமும்,” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
அப்போது அவள் சொன்னது எனக்குப் புரியவில்லை.
ஆனால், இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது.
இந்தக் கதையை வாசிக்கும்பொழுது, உறவுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளைத் தாண்டி பாசத்தைப் பகிர்ந்துகொள்ளும் நுட்பங்களைக் கற்று, உங்கள் சொந்தக் குடும்பச் சூழலில் பரஸ்பர மரியாதையையும் ஆழமான புரிதலையும் நிலைநாட்டுவதற்கான தெளிவைப் பெறுவீர்கள்.