

அது ஒரு கோடைகால மாலை வேளை. மதுரை நகர் முழுவதும் ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழை அப்போதுதான் ஓய்ந்திருந்தது. கிழக்கு வாசல் வழியாக மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த பூர்ணா, விபூதி பிள்ளையாருக்கு ஒரு நமஸ்காரத்தை செலுத்தி விட்டு நேரே மீனாட்சி சன்னதிக்கு சென்றாள். எப்போதும் அலை மோதும் பக்தர் கூட்டம் மழையினால் அன்று சற்று குறைந்து இருந்தது. அன்று வெள்ளிக்கிழமையானதால் பச்சை புடவைக்காரி வைர கீரிடமும் தங்கப் பாவாடையுமாய் ஜொலித்தாள். பூர்ணாவுக்கு கண்களில் நீர் கோர்த்தது. "அம்மா தாயே மீனாட்சி, எங்க மன்னி நல்லபடியா பிழைச்சு எழுந்து வரணும்" என மனம் உருக வேண்டியவள் மற்ற சன்னதிகளுக்கு செல்லாமல் நேரே பொற்றாமரை குளத்து படிகளில் வந்து அமர்ந்தாள்.
அவள் எண்ணம் முழுவதிலும் மதுரம் மன்னியே நிறைந்திருந்தாள். பூர்ணாவின் அப்பா இறந்த வருடம் தான் அவள் அண்ணாவுக்கு திருமணம் நடந்தது. அவள் அப்போது கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். பாதி வகுப்பில் ஆபீஸ் ப்யூன் "பூர்ணாவை பிரின்ஸ்பல் வீட்டுக்கு அனுப்பச் சொன்னாங்க" என்று வந்தார்.